பணக்கார காதலி மோசடி, பரோலை பயன்படுத்தி கொலை செய்த ஆயுள் கைதி


பணக்கார காதலி மோசடி, பரோலை பயன்படுத்தி கொலை செய்த ஆயுள் கைதி
x

கொரோனா கால பரோலில் வெளிவந்த ஆயுள் கைதி, மோசடி செய்த காதலியை கொன்று விட்டு 2 ஆண்டுகளாக போலீசில் சிக்காமல் இருந்து உள்ளார்.

புதுடெல்லி,

டெல்லியை சேர்ந்த நபர் தீபக். ஆடம்பர குடும்பத்தில் வசித்து வந்த பெண் ஒருவருடன் பழக்கம் ஏற்பட்டு உள்ளது. அவரது பணக்கார தேவையை பூர்த்தி செய்வதற்காக 4 கூட்டாளிகளை சேர்த்து கொண்டு, வடக்கு டெல்லியில் ரோஹிணி பகுதியில் ஆயுர்வேத மருத்துவரின் மகனை கடத்தி உள்ளார்.

அந்த டாக்டரிடம் ரூ.20 லட்சம் பிணை தொகை கேட்டு, அது கிடைக்காத சூழலில், கூட்டாளிகளுடன் சேர்ந்துஅந்த சிறுவனை கொலை செய்து உள்ளார். பின்னர் உடலை கரவுண்டா பகுதியில் வீசி விட்டு சென்றுள்ளனர்.

இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட தீபக்கிற்கு, ஆயுள் தண்டனை மற்றும் அபராதம் விதிக்கப்பட்டது. இதனால், சிறையில் அடைக்கப்பட்டார். கூட்டாளிகளுக்கும் தண்டனை வழங்கப்பட்டது.

கொரோனா காலத்தில் 2020-ம் ஆண்டு ஆகஸ்டில் மற்ற கைதிகளோடு சேர்த்து இவர், பரோலில் விடுவிக்கப்பட்டார். வெளியே வந்த அவர், தனது காதலி வேறொருவரை திருமணம் செய்து கொண்டதும், தன்னை ஏமாற்றியதும் அறிந்து வருத்தத்தில் இருந்து உள்ளார்.

இந்த உறவில் இருந்து காதலி விலகி இருக்க முடிவு செய்தது பற்றி அறிந்ததும், அவரை சுல்தான்புரியில் உள்ள ஓட்டலுக்கு வரும்படி அழைத்து உள்ளார்.

அதன்பின்பு, ஓட்டலில் வாக்குவாதம் ஏற்பட, அவரை கொலை செய்து விட்டு தப்பியோடி விட்டார். 2020-ம் ஆண்டு டிசம்பரில் இருந்து அவரை காணவில்லை. அவரை பிடிக்க ரூ.50 ஆயிரம் பரிசு தொகை அறிவிக்கப்பட்டது.

ஆனால், போலீசாரிடம் சிக்காமல் பீகார், அசாம், ஒடிசா, மேற்கு வங்காளம், ஆந்திர பிரதேசம் மற்றும் உத்தர பிரதேசம் ஆகிய மாநிலங்களுக்கு தப்பியோடியபடி இருந்து உள்ளார்.

இந்நிலையில், போலீசுக்கு தகவல் அளிப்பவர்களில் ஒருவர், டெல்லி மங்கோல்புரியில், சப்ஜி மண்டி பகுதியில் வைத்து அடையாளம் காட்டி உள்ளார். இதனை தொடர்ந்து தீபக் போலீசாரால் கைது செய்யப்பட்டு உள்ளார்.


Next Story