ரூ.1,000 கோடி பணமோசடி வழக்கு: சஞ்சய் ராவத் மனைவிக்கு அமலாக்க துறை சம்மன்


ரூ.1,000 கோடி பணமோசடி வழக்கு:  சஞ்சய் ராவத் மனைவிக்கு அமலாக்க துறை சம்மன்
x

வரும் 8ந்தேதி வரை அமலாக்க துறை காவல் நீட்டிக்கப்பட்ட சிவசேனா எம்.பி. சஞ்சய் ராவத்தின் மனைவி வர்ஷாவுக்கு நேரில் ஆஜராக அமலாக்க துறை சம்மன் அனுப்பி உள்ளது.



புதுடெல்லி,



மராட்டியத்தில் மும்பை கோரேகாவ் பத்ரா சால் குடிசை சீரமைப்பு மோசடி வழக்கில், ரூ.1,000 கோடிக்கும் அதிகமாக முறைகேடு நடந்ததாக கூறப்படுகிறது. இந்த வழக்கில், சிவசேனா எம்.பி. சஞ்சய் ராவத்தின் மனைவி வர்ஷா ராவத்தின் பெயரையும் அமலாக்க துறை பல முறை கூறி வந்தது. எனினும், அவரை விசாரணைக்கு ஆஜராகும்படி இதுவரை கூறவில்லை.

ஆனால், கடந்த 4 மாதங்களுக்கு முன் பத்ரா சால் திட்டத்தின் ரூ.1,000 கோடி ஊழல் குற்றச்சாட்டின்பேரில், வர்ஷா ராவத் மற்றும் சஞ்சய் ராவத்தின் கூட்டாளிகள் 2 பேர் ஆகியோரின் ரூ.11 கோடி மதிப்பிலான சொத்துகளை அமலாக்க துறை முடக்கி இருந்தது.

இதில் வர்ஷாவுக்கு சொந்தமுடைய தாதர் நகரில் உள்ள பிளாட் ஒன்றும் அடங்கும். இது தவிர்த்து, ஸ்வப்னா பட்கருடன் கூட்டாக, அலிபாக்கில் உள்ள 8 பிளாட்டுகளும் முடக்கப்பட்டன.

சஞ்சய் ராவத்தின் நெருங்கிய கூட்டாளியான சுஜித் பட்கரின் மனைவிதான் இந்த ஸ்வப்னா பட்கர். இவர் இந்த வழக்கில் தற்போது முக்கிய சாட்சியாகி உள்ளார். இந்நிலையில், கடந்த மாதம் ஸ்வப்னா பட்கருக்கு பாலியல் துன்புறுத்தல் மிரட்டல் மற்றும் கொலை மிரட்டல் விடப்பட்டு உள்ளது.

ஆனால், இதற்கும் தனக்கும் எந்தவித தொடர்புமில்லை என சஞ்சய் ராவத் கூறியுள்ளார். கோர்ட்டில் அமலாக்க துறை இன்று முறையிடும்போது, பத்ரா சால் திட்ட முறைகேட்டில் ஈடுபடுவதற்காக, சஞ்சய் ராவத்தின் குடும்பத்தினர் ரூ.1 கோடி வரை பெற்று உள்ளனர் என தெரிவிக்கப்பட்டது.

இந்த குற்றச்சாட்டுகளை மறுத்துள்ள சஞ்சய் ராவத், காற்று வர கூட வசதியின்றி, ஜன்னல் கூட இல்லாத அறையில் வைக்கப்பட்டு இருந்தேன். ஆனால், அமலாக்க துறை தன்னை குளிரூட்டப்பட்ட அறையில் வைத்திருந்தது என கூறியுள்ளது என நீதிமன்றத்தில் குற்றச்சாட்டாக கூறியுள்ளார்.

அரசியல் பழி வாங்கும் செயலுக்காக மத்திய முகமைகளை பா.ஜ.க. தவறாக பயன்படுத்துகிறது என அமலாக்க துறை நடவடிக்கையை பற்றி குறிப்பிட்டு சிவசேனா குற்றம் சாட்டியுள்ளது. மத்திய முகமைகள் தவறாக பயன்படுத்தப்படுகிறது என சமீப காலங்களாக தொடர்ந்து குற்றச்சாட்டு கூறப்படும் பல வழக்குகளில் இதுவும் ஒன்றாகும்.


Next Story