சாளுமரத திம்மக்காவுக்கு கேபினட் மந்திரி அந்தஸ்து நீட்டிப்பு; சித்தராமையா உத்தரவு
சாளுமரத திம்மக்காவுக்கு கேபினட் மந்திரி அந்தஸ்தை நீட்டித்து முதல்-மந்திரி சித்தராமையா உத்தரவிட்டுள்ளார்.
பெங்களூரு:
கர்நாடகத்தில் பசவராஜ் பொம்மை முதல்-மந்திரியாக இருந்தபோது, சுற்றுச்சூழல் ஆர்வலரும், பத்மஸ்ரீ விருது பெற்றவருமான சாளுமரத திம்மக்காவுக்கு கேபினட் மந்திரி அந்தஸ்து வழங்கி உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இதன் மூலம் அவருக்கு அரசு கார், மந்திரிகள் பெறும் சம்பளம், வீடு உள்ளிட்ட அனைத்து வசதிகளும் வழங்கப்பட்டு வருகின்றன. இந்த நிலையில் கர்நாடகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டு சித்தராமையா தலைமையில் காங்கிரஸ் ஆட்சி அமைந்துள்ளது. முதல்-மந்திரி சித்தராமையா, சாளுமரத திம்மக்காவுக்கு வழங்கப்பட்டு வரும் கேபினட் அந்தஸ்தை தொடர்ந்து வழங்கும்படி அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார். அவர் சுற்றுச்சூழல் தூதுவராகவும் தொடர்ந்து செயல்படுவார் என்று சித்தராமையா கூறியுள்ளார்.
துமகூரு மாவட்டம் குப்பி தாலுகாவை சேர்ந்த திம்மக்கா, தனக்கு குழந்தைகள் இல்லாததால், சொந்த கிராமத்தில் மரக்கன்றுகளை நட்டு வளர்த்தார். அவர் அங்குள்ள நெடுஞ்சாலையின் இருபுறமும் 385 ஆலமரங்களை வளர்த்துள்ளார். அது மட்டுமின்றி 8 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மரக்கன்றுகளை நட்டு வளர்த்துள்ளார். மரங்களை வரிசையாக நட்டு வளர்த்ததால் அவருக்கு சாளுமரத என்ற புனை பெயர் வைத்தனர். அதனால் அவரை சாளுமரத திம்மக்கா என்று அழைக்கிறார்கள்.