ஆக்சிஜன் முக கவசத்துடன் சோனியா காந்தி; ராகுல் காந்தி பதிவால் பரபரப்பு
ஆக்சிஜன் முக கவசத்துடன் சோனியா காந்தி காணப்படும் புகைப்படம் ஒன்றை ராகுல் காந்தி இன்ஸ்டாகிராமில் பதிவிட்டது பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது.
புதுடெல்லி,
காங்கிரஸ் உள்ளிட்ட 26 எதிர்க்கட்சிகள் கலந்து கொண்ட கூட்டம் முடிந்ததும் பெங்களூருவில் இருந்து டெல்லி நோக்கி இண்டிகோ விமானத்தில் காங்கிரஸ் முன்னாள் தலைவர்களான சோனியா காந்தி மற்றும் ராகுல் காந்தி நேற்றிரவு 9.30 மணியளவில் புறப்பட்டு சென்றனர்.
எனினும், அந்த விமானம் வழியில் போபால் நகரில் அவசர தரையிறக்கம் செய்யப்பட்டது என முதலில் தகவல் வெளிவந்தது. இதுபற்றி விமான நிலைய இயக்குநர் ராம்ஜி அவஸ்தி செய்தியாளர்களிடம் கூறும்போது, இது முன்னுரிமைக்கான தரையிறக்கம் என்றும் இது ஓர் அவசர தரையிறக்கம் அல்ல என்றும் கூறினார்.
இந்த முன்னுரிமைக்கான தரையிறக்கம் என்பது, மருத்துவ அவசரகாலத்தின் போது மேற்கொள்ளக்கூடியது ஆகும். இதற்கும், விமானம் பாதிப்பு ஏற்பட்டு அவசர தரையிறக்கம் செய்வதற்கும் தொடர்பு இல்லை.
இந்த நிலையில், காங்கிரஸ் மூத்த தலைவர் மற்றும் மத்திய பிரதேச முன்னாள் மகளிர் ஆணைய தலைவர் ஷோபா ஓஜா, தொழில் நுட்ப கோளாறு ஏற்பட்டு, அதனால், விமானம் அவசர தரையிறக்கம் செய்யப்பட்டது என்று கூறினார்.
இதனை தொடர்ந்து, ஓஜா, முன்னாள் மத்திய மந்திரி சுரேஷ் பச்சோரி, எம்.எல்.ஏ.க்கள் பி.சி. சர்மா, ஆரிப் மசூத் மற்றும் குணால் சவுத்ரி உள்ளிட்டோர் உடனடியாக விமான நிலையத்திற்கு சென்று அவர்களை சந்தித்தனர். பின்னர், அவர்களின் உடல்நலம் பற்றியும் கேட்டறிந்தனர்.
இந்த நிலையில், ராகுல் காந்தி இன்ஸ்டாகிராமில் புகைப்படம் ஒன்றை வெளியிட்டு உள்ளார். அதில், சோனியா காந்தி ஆக்சிஜன் முக கவசம் ஒன்றை அணிந்தபடி காணப்படுகிறார். அதன் தலைப்பில், கருணையின் வடிவம் அழுத்தத்தின் கீழ் உள்ளது தாயே என்று அவர் பதிவிட்டு உள்ளார்.
இந்த பதிவு வெளியான முதல் ஒரு மணிநேரத்தில் 1.8 லட்சம் பேர் லைக் செய்து உள்ளனர். இதுவரை 3.8 லட்சம் பேர் வரை லைக் செய்து உள்ளனர்.