27 ஆயிரம் மாணவர்களுக்கு எஸ்.எஸ்.எல்.சி. தேர்வு எழுத அனுமதி மறுப்பு


27 ஆயிரம் மாணவர்களுக்கு எஸ்.எஸ்.எல்.சி. தேர்வு எழுத அனுமதி மறுப்பு
x

கர்நாடகத்தில் அதிக நாட்கள் விடுமுறை எடுத்திருந்ததால் 27 ஆயிரம் மாணவர்கள் எஸ்.எஸ்.எல்.சி. தேர்வு எழுத அனுமதி மறுக்கப்பட்டு இருப்பது தெரியவந்துள்ளது.

பெங்களூரு:-

27 ஆயிரம் மாணவர்களுக்கு...

கர்நாடகத்தில் நேற்று முதல் எஸ்.எஸ்.எல்.சி. தேர்வுகள் தொடங்கியது. வருகிற 15-ந் தேதி வரை இந்த தேர்வுகள் நடைபெற உள்ளது. முதல் நாளான நேற்று முதல் மொழி பாடங்களுக்கான தேர்வுகள் நடைபெற்றிருந்தது. இந்த நிலையில், மாநிலம் முழுவதும் அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் எஸ்.எஸ்.எல்.சி. படித்து வந்த 27 ஆயிரம் மாணவ, மாணவிகள் நேற்று தொடங்கிய பொதுத்தேர்வை எழுதுவதற்கு அனுமதி மறுக்கப்பட்டு இருப்பது தெரியவந்துள்ளது.

அதாவது அரசு, தனியார் பள்ளிகளில் படிக்கும் எஸ்.எஸ்.எல்.சி. மாணவ, மாணவிகளுக்கு வருகை பதிவு கட்டாயமாக்கப்பட்டு இருந்தது. ஆனால் மாநிலம் முழுவதும் 26 ஆயிரத்து 900 மாணவ, மாணவிகள் அதிக நாட்கள் விடுமுறை எடுத்திருந்தனர். பொதுத்தேர்வை எழுதுவதற்காக பள்ளிக்கு வருகை தந்த நாட்கள் குறைவாக இருந்துள்ளது.

அதிகாரிகள் ஆலோசனை

இந்த காரணத்திற்காக மாநிலம் முழுவதும் 26 ஆயிரத்து 900 மாணவ, மாணவிகள் எஸ்.எஸ்.எல்.சி. பொதுத்தேர்வை எழுத அனுமதி மறுக்கப்பட்டு இருப்பதாக கல்வித்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அந்த மாணவ, மாணவிகள் அடுத்த ஆண்டு தேர்வு எழுத அனுமதிக்கப்படுவார்கள் என்றும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அதே நேரத்தில் மாணவ, மாணவிகள் என்ன காரணத்திற்காக அதிக நாட்கள் விடுமுறை எடுத்திருந்தார்கள்?, அவர்களது வருகை பதிவு குறைவதற்கான காரணம் என்ன? என்பது குறித்தும் அதிகாரிகள் ஆலோசனை நடத்தி வருகிறார்கள்.

அதே நேரத்தில் இந்த ஆண்டு நடந்து முடிந்திருந்த பி.யூ.சி. பொதுத்தேர்வை எழுதுவதற்கு 4 ஆயிரத்து 493 மாணவ, மாணவிகளுக்கு அனுமதி மறுக்கப்பட்டு இருந்தது. அந்த மாணவ, மாணவிகளின் வருகை பதிவு குறைவாக இருந்ததால், தேர்வு எழுத அனுமதிக்கப்படாமல் இருந்திருந்தனர். இதனால் பி.யூ.சி.யை ஒப்பிடுகையில் எஸ்.எஸ்.எல்.சி. தேர்வை எழுத அதிக அளவில் மாணவ, மாணவிகளுக்கு அனுமதி மறுக்கப்பட்டு இருப்பது குறிப்பிடத்தக்கதாகும்.


Next Story