சப்-இன்ஸ்பெக்டர் தேர்வு முறைகேட்டில் கைதான முதல் மதிப்பெண் பெற்ற இளம்பெண் உள்பட 2 பேருக்கு ஜாமீன்
சப்-இன்ஸ்பெக்டர் தேர்வு முறைகேட்டில் கைதான முதல் மதிப்பெண் பெற்ற இளம்பெண் உள்பட 2 பேருக்கு ஜாமீன் வழங்கி பெங்களூரு கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
பெங்களூரு: சப்-இன்ஸ்பெக்டர் தேர்வு முறைகேட்டில் கைதான முதல் மதிப்பெண் பெற்ற இளம்பெண் உள்பட 2 பேருக்கு ஜாமீன் வழங்கி பெங்களூரு கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
முதல் மதிப்பெண் எடுத்த இளம்பெண்
கர்நாடகத்தில் கடந்த ஆண்டு (2021) 545 சப்-இன்ஸ்பெக்டர் பணிகளுக்கு நடந்த தேர்வில் முறைகேடு நடைபெற்றது குறித்து சி.ஐ.டி. போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த வழக்கில் கூடுதல் போலீஸ் டி.ஜி.பி. அம்ருத்பால், துணை போலீஸ் சூப்பிரண்டு சாந்தகுமார் உள்பட 102 பேரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். அவர்களில் சப்-இன்ஸ்பெக்டர் தேர்வில் முறைகேடாக எழுதி முதல் மதிப்பெண் பெற்றிருந்த ரஜனாவும் ஒருவர் ஆவார்.
அதாவது பெண்களுக்கான பிரிவில் ரஜனா முதல் மதிப்பெண் எடுத்து சப்-இன்ஸ்பெக்டர் பணிக்கான தேர்வில் இடம் பெற்றிருந்தார். மேலும் சப்-இன்ஸ்பெக்டர் தேர்வு முறைகேட்டில் முதல் குற்றவாளியாக ஜாகைத் என்பவரையும் சி.ஐ.டி. போலீசார் கைது செய்து சிறையில் அடைத்திருந்தார்கள். ரஜனா 2 மாதத்திற்கும் மேலாக போலீசாரிடம் சிக்காமல் மராட்டியம்-கர்நாடக மாநில எல்லை பகுதியில் தலைமறைவாக இருந்த போது சிக்கி இருந்தார். அவர் 17-வது குற்றவாளியாக சேர்க்கப்பட்டு இருந்தார்.
2 பேருக்கு ஜாமீன்
இந்த நிலையில், ஜாகைத் மற்றும் ரஜனா தங்களுக்கு ஜாமீன் வழங்க வேண்டும் என்றுகோரி பெங்களூருசிறப்பு கோர்ட்டில் மனு தாக்கல் செய்திருந்தார்கள். அவர்களது ஜாமீன் மனு மீதான விசாரணை நேற்று நீதிபதி முன்னிலையில் நடைபெற்றது. அப்போது சப்-இன்ஸ்பெக்டர் தேர்வு முறைகேட்டில் தனது பெயர் சேர்க்கப்படாமல் இருந்ததாகவும், சி.ஐ.டி. போலீசார் அளித்த புகாரின் பேரில் தான் ஐகிரவுண்டு போலீஸ் நிலையததில் வழக்குப்பதிவானதாகவும், எனவே ரஜனாவுக்கு ஜாமீன் வழங்க வேண்டும் என்றும், அவரது வக்கீல் வாதிட்டார்.
இதுபோல், ஜாகைத் தரப்பில் ஆஜரான வக்கீலும் தனது மனுதாரருக்கு ஜாமீன் வழங்கும்படி வாதிட்டார். இதற்கு சி.ஐ.டி. போலீஸ் தரப்பில் ஆஜரான வக்கீல் கடும் எதிர்ப்பு தெரிவித்தார். இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி ரஜனா மற்றும் ஜாகைத்திற்கு ஜாமீன் வழங்கி உத்தரவு பிறப்பித்துள்ளார்.