மரண தண்டனையை நிறைவேற்றும் விதம் குறித்து ஆய்வு செய்ய நிபுணர் குழு அமைக்க மத்திய அரசு பரிசீலனைசுப்ரீம் கோர்ட்டில் தகவல்


மரண தண்டனையை நிறைவேற்றும் விதம் குறித்து ஆய்வு செய்ய நிபுணர் குழு அமைக்க மத்திய அரசு பரிசீலனைசுப்ரீம் கோர்ட்டில் தகவல்
x

நமது நாட்டில் கொடூரமான குற்றச்செயல்பாடுகளில் ஈடுபட்டு, மரண தண்டனை விதிக்கப்படுகிறவர்களை தூக்கில் போட்டு, தண்டனை நிறைவேற்றப்படுகிறது.

புதுடெல்லி,

நமது நாட்டில் கொடூரமான குற்றச்செயல்பாடுகளில் ஈடுபட்டு, மரண தண்டனை விதிக்கப்படுகிறவர்களை தூக்கில் போட்டு, தண்டனை நிறைவேற்றப்படுகிறது.

இந்த நிலையில், சுப்ரீம் கோர்ட்டில் ரிஷி மல்கோத்ரா என்ற வக்கீல் 2017-ம் ஆண்டு, மரண தண்டனையை நிறைவேற்றும் விதம் குறித்து ஒரு பொது நல வழக்கு தொடுத்துள்ளார்.

இந்த வழக்கில் அவர், தூக்கில் போட்டு மரண தண்டனை நிறைவேற்றுவதை ஒழித்துக்கட்டிவிட்டு, அதற்குப்பதிலாக வலி குறைவான விஷ ஊசி போடுதல், துப்பாக்கியால் சுடுதல், மின்சாரம் பாய்ச்சுதல், கியாஸ் அறையில் அடைத்தல் போன்ற ஏதேனும் ஒரு முறையில் மரண தண்டனை நிறைவேற்ற உத்தரவிட வேண்டும் என்று கோரி உள்ளார்.

சுப்ரீம் கோர்ட்டு விசாரணை

இந்த வழக்கு தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் மற்றும் நீதிபதி ஜே.பி. பர்த்திவாலா ஆகியோர் அமர்வின் முன் விசாரிக்கப்பட்டு வருகிறது.

இந்த வழக்கு கடந்த மார்ச் மாதம் 21-ந் தேதி விசாரணைக்கு வந்தபோது, தூக்கில் போடுவதைத் தவிர வலி குறைந்த முறையில் மரண தண்டனையை நிறைவேற்றுவது தொடர்பாக பரிசீலிக்க நிபுணர்குழு அமைக்கத் தயார் என கூறிய சுப்ரீம் கோர்ட்டு, இது தொடர்பாக மத்திய அரசு ஆலோசனையைத் தொடங்க வேண்டும், மரண தண்டனையை பிற வழிகளில் நிறைவேற்றுவது தொடர்பான தரவுகளையும் வழங்க வேண்டும் என்று நீதிபதிகள் கூறினர்.

மத்திய அரசு பரிசீலனை

இந்த நிலையில் அந்த வழக்கு சுப்ரீம் கோர்ட்டில் தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் மற்றும் நீதிபதி ஜே.பி. பர்த்திவாலா ஆகியோர் அமர்வின் முன் நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது.

அப்போது மத்திய அரசின் சார்பில் அட்டார்னி ஜெனரல் ஆர்.வெங்கடரமணி ஆஜராகி கூறியதாவது:-

மரண தண்டனையை நிறைவேற்றுவதில் பிற வழிமுறைகளை பின்பற்றுவது தொடர்பாக நிபுணர் குழு அமைக்க மத்திய அரசு பரிசீலித்து வருகிறது.

இந்தக் குழுவில் யார், யார் இடம்பெறுவது என்பதை இறுதி செய்யும் செயல்முறைகள் நடைபெற்று வருகின்றன.

இது தொடர்பாக கோடை விடுமுறைக்குப் பின்னர் ஒரு குறிப்பிட்ட தேதியைத் தெரிவிப்போம்.

இவ்வாறு அவர் கூறினார்


Next Story