இந்து அமைப்பு பிரமுகரை துப்பாக்கியால் சுட்ட மர்மநபர்கள்


இந்து அமைப்பு பிரமுகரை துப்பாக்கியால் சுட்ட மர்மநபர்கள்
x
தினத்தந்தி 14 April 2023 12:15 AM IST (Updated: 14 April 2023 12:17 AM IST)
t-max-icont-min-icon

மடிகேரியில் இந்து அமைப்பு பிரமுகரை மர்மநபர்கள் துப்பாக்கியால் சுட்டனர். அதிர்ஷ்டவசமாக அவர் உயிர் தப்பினார்.

குடகு-

மடிகேரியில் இந்து அமைப்பு பிரமுகரை மர்மநபர்கள் துப்பாக்கியால் சுட்டனர். அதிர்ஷ்டவசமாக அவர் உயிர் தப்பினார்.

இந்து அமைப்பு பிரமுகர்

குடகு மாவட்டம் மடிகேரியை சேர்ந்தவர் கிருஷ்ணமூர்த்தி. இவர் வக்கீலாக பணியாற்றி வருகிறார். இவர் விஷ்வ இந்து பரிஷத் மாவட்ட தலைவராக பொறுப்பு வகித்து வருகிறார். நேற்று முன்தினம் இரவு இவர் வேலை முடித்துவிட்டு குஷால்நகரில் இருந்து மடிக்கேரிக்கு காரில் வந்து கொண்டிருந்தார். செட்டள்ளி அருகே வந்தபோது, மர்ம நபர்கள் சிலர் இவரது காரை நோக்கி துப்பாக்கியால் சுட்டனர்.

இதில் அவரது கார் கதவை குண்டு துளைத்தது. ஆனால் கிருஷ்ணமூர்த்திக்கு எந்தவிதமான பாதிப்பும் ஏற்படவில்லை. மர்மநபர்கள் துப்பாக்கியால் சுட்டதும், அவர் காரில் வேகமாக சென்றதால் கிருஷ்ணமூர்த்தி மீது குண்டு படவில்லை. இதனால் அவர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார். வீட்டிற்கு திரும்பிய அவர் இது குறித்து மடிகேரி புறநகர் போலீசில் புகார் அளித்தார். அந்த புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்தனர்.

போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் முன்விரோதம் காரணமாக இந்த கொலை முயற்சி நடந்திருப்பதாக தெரியவந்தது. ஆனால் யார் இந்த கொலை முயற்சியில் ஈடுபட்டனர் என்பது தெரியவில்லை. தனிப்படை அமைத்துள்ள போலீசார் கொலை முயற்சியில் ஈடுபட்டவர்களை வலை வீசி தேடி வருகின்றனர்.

வக்கீல்கள் போராட்டம்

இந்நிலையில் இந்த துப்பாக்கி சூடு சம்பவத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து, நேற்று வழக்கறிஞர்கள் நேற்று மாவட்ட கோர்ட்டு முன்பு நின்று போராட்டம் நடத்தினர். அப்போது கிருஷ்ணமூர்த்தியின் மீது துப்பாக்கி சூடு நடத்திய மர்ம நபர்கள் மீது போலீசார் உடனே நடவடிக்கை எடுக்கவேண்டும். இல்லையென்றால் எங்கள் போராட்டம் தொடரும் என்று கூறினர்.

இந்த போராட்டம் குறித்து போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அவர்கள் சம்பவ இடத்திற்கு சென்று போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சு வார்த்தை நடத்தினர். இதையடுத்து அவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.

இதற்கிடையில் இந்த துப்பாக்கி சூடு சம்பவத்திற்கு, கே.ஜி.போப்பையா, அப்பச்சு ரஞ்சன் எம்.எல்.ஏ. ஆகியோர் கண்டனம் தெரிவித்துள்ளனர். இந்த துப்பாக்கி சூடு சம்பவம் குடகு மாவட்டத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


Next Story