வாக்காளர்களின் தகவல்களை திருடிய விவகாரம்: விளக்கம் அளிக்க கர்நாடக பா.ஜனதாவுக்கு மேலிடம் உத்தரவு


வாக்காளர்களின் தகவல்களை திருடிய விவகாரம்:  விளக்கம் அளிக்க கர்நாடக பா.ஜனதாவுக்கு மேலிடம் உத்தரவு
x

வாக்காளர்களின் தகவல்களை திருடியதாக குற்றச்சாட்டு எழுந்துள்ள விவகாரம் குறித்து விளக்கம் அளிக்க கர்நாடக பா.ஜனதாவுக்கு, மேலிட தலைவர்கள் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளனர்.

பெங்களூரு: வாக்காளர்களின் தகவல்களை திருடியதாக குற்றச்சாட்டு எழுந்துள்ள விவகாரம் குறித்து விளக்கம் அளிக்க கர்நாடக பா.ஜனதாவுக்கு, மேலிட தலைவர்கள் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளனர்.

விளக்கம் அளிக்க உத்தரவு

பெங்களூருவில் உள்ள வாக்காளர்களின் தகவல்களை திருடியதாக முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை, மந்திரி அஸ்வத் நாராயண் மீது காங்கிரஸ் தலைவர்கள் பரபரப்பு குற்றச்சாட்டுகளை கூறியுள்ளனர். இந்த விவகாரம் கர்நாடகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இந்த நிலையில், வாக்காளர்களின் தகவல்களை திருடிய விவகாரம் விஸ்வரூபம் எடுத்திருப்பதால், இதுபற்றி உரிய விளக்கம் அளிக்கும்படி கர்நாடக பா.ஜனதா தலைவர்கள், மேலிட தலைவர்கள் அதிரடி உத்தரவு பிறப்பித்திருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

குஜராத் சட்டசபை தேர்தல்

அதாவது வாக்காளர்களின் தகவல்களை திருடிய விவகாரம் குறித்து விளக்கம் மற்றும் அறிக்கை அளிக்கும்படி கர்நாடக மாநில மேலிட பொறுப்பாளர் அருண்சிங் மற்றும மாநில தலைவர் நளின்குமார் கட்டீலுக்கு, பா.ஜனதா தேசிய தலைவர் ஜே.பி.நட்டா உத்தரவு பிறப்பித்திருப்பதாக கூறப்படுகிறது. ஏனெனில் குஜராத் மாநில சட்டசபைக்கு தேர்தல் நடைபெற உள்ளது. இதற்காக பா.ஜனதா மேலிட தலைவர்கள் தீவிர பிரசாரம் மேற்கொண்டு வருகின்றனர்.

குஜராத் தேர்தல் பிரசாரத்தின் போது கர்நாடகத்தில் வாக்காளர்களின் தகவல்களை திருடிய விவகாரத்தை காங்கிரஸ் மற்றும் ஆம்ஆத்மி கட்சிகள் கையில் எடுத்து பிரசாரம் செய்தால், பா.ஜனதாவுக்கு பின்னடைவை ஏற்படுத்தலாம் என்று மேலிட தலைவர்கள் கருதுவதாக தெரிகிறது. இந்த விவகாரத்தை தீவிரமாக எடுத்துள்ள பா.ஜனதா மேலிடம் வாக்காளர்கள் தகவல்களை திருடிய விவகாரம் குறித்து 2 நாட்களுக்குள் விளக்கம் அளிப்பதுடன், அறிக்கை அளிக்கும்படியும் உத்தரவிட்டுள்ளது.


Next Story