தேர்தல் தோல்வி பயத்தில் பொய் புகார் அளிக்கின்றனர்அண்ணாமலை பேட்டி


தேர்தல் தோல்வி பயத்தில் பொய் புகார் அளிக்கின்றனர்அண்ணாமலை பேட்டி
x
தினத்தந்தி 18 April 2023 6:45 PM GMT (Updated: 18 April 2023 6:45 PM GMT)

தேர்தல் தோல்வி பயத்தில் பொய் புகார் அளிக்கின்றனர் என்று தமிழக பா.ஜனதா தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

மங்களூரு-

தேர்தல் தோல்வி பயத்தில் பொய் புகார் அளிக்கின்றனர் என்று தமிழக பா.ஜனதா தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

தேர்தல் பிரசாரம்

கர்நாடகத்தில் மே மாதம் 10-ந் தேதி தேர்தல் நடைபெறுகிறது. இந்த தேர்தலையொட்டி தேர்தல் நடத்தை விதிகள் அமல்படுத்தப்பட்டுள்ளது. இதனால் மாநில முழுவதும் தேர்தல் பறக்கும்படை அதிகாரிகள் தீவிர வாகன சோதனை நடத்தி வருகின்றனர். இந்நிலையில் கர்நாடகத்திற்கு தேர்தல் பிரசாரம் செய்வதற்காக மாநில தேர்தல் துணை பொறுப்பாளரும், தமிழக பா.ஜனதா தலைவருமான அண்ணாமலை, ஹெலிகாப்டரில் வந்துள்ளார்.

உடுப்பியில் தனியார் ஓட்டலில் தங்கி கட்சி நிர்வாகிகளுடன் அவர் ஆலோசனை நடத்தினார். இந்நிலையில் ஹெலிகாப்டரில் வந்த அண்ணாமலை, பணம் எடுத்து வந்திருப்பதாக காபு தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் வினய்குமார் சொரகே தேர்தல் அதிகாரியிடம் புகார் அளித்தார். இந்த புகாரின் பேரில் தேர்தல் பறக்கும்படை அதிகாரிகள் அண்ணாமலை பயணித்த ஹெலிகாப்டர், மற்றும் அவர் தங்கியிருந்த ஓட்டலில் தீவிர சோதனை நடத்தினர். அந்த சோதனையில் எந்த பணமும் கிடைக்கவில்லை என்று கூறப்படுகிறது.

பொய் புகார்

இந்நிலையில் நிருபர்களுக்கு பேட்டியளித்த அண்ணாமலை கூறியதாவது:-

நான் உடுப்பிக்கு தேர்தல் பிரசாரத்திற்கு வந்துள்ளேன். வரும் போது நேரத்தை குறைப்பதற்காக ஹெலிகாப்டரில் பயணித்தேன். ஆனால் அந்த ஹெலிகாப்டரில் பணம் எடுத்து வந்ததாக சிலர் தேர்தல் அதிகாரிகளிடம் புகார் அளித்துள்ளனர். அந்த புகாரின் பேரில் தேர்தல் அதிகாரிகள் ஹெலிகாப்டர் மற்றும் நான் தங்கியிருந்த ஓட்டல் அறையில் சோதனை செய்தனர்.

ஆனால் எந்த பணமும் கிடைக்கவில்லை. இதில் இருந்து தெரிகிறது வந்த புகார் தவறானது என்று. தேர்தல் தோல்வி பயத்தில் இதேபோல பொய்யான குற்றச்சாட்டுகளை காங்கிரஸ் முன் வைத்து வருகின்றனர். இதை வைத்து பார்க்கும்போது பா.ஜனதா வெற்றி உறுதியாகியுள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.


Next Story