இந்தியாவில் டுவிட்டர் புளூ டிக் அறிமுகம்... விலை, வசதி, சிறப்பு அம்சங்கள் பற்றி தெரிந்து கொள்வோம்


இந்தியாவில் டுவிட்டர் புளூ டிக் அறிமுகம்... விலை, வசதி, சிறப்பு அம்சங்கள் பற்றி தெரிந்து கொள்வோம்
x
தினத்தந்தி 9 Feb 2023 7:17 AM GMT (Updated: 9 Feb 2023 9:19 AM GMT)

இந்தியாவில் டுவிட்டர் புளூ டிக் சந்தாதாரர் ஆவதற்கான கட்டண திட்டம் அதிகாரப்பூர்வ முறையில் அறிமுகம் செய்யப்பட்டு உள்ளது.



வாஷிங்டன்,

உலகின் முன்னணி பணக்காரரான எலான் மஸ்க், பிரபல சமூக ஊடக நிறுவனமான டுவிட்டரை கடந்த ஆண்டு அக்டோபர் இறுதியில் தன்வசப்படுத்தினார். மஸ்க், டுவிட்டர் உரிமையாளரான பின்பு, தொடர்ந்து பல்வேறு அதிரடி நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன.

டுவிட்டரில் தற்போது, அரசியல் தலைவர்கள் மற்றும் பிரபலங்கள் உள்ளிட்டோர் தங்களின் அதிகாரப்பூர்வ டுவிட்டர் கணக்குகளில் புளூ டிக் பயன்படுத்துகின்றனர்.

இந்த டுவிட்டரை பயன்படுத்துவோருக்கான சிறப்பம்சங்களில் ஒன்றாக, தங்களுடையது அதிகாரப்பூர்வ டுவிட்டர் கணக்கு என உறுதிபடுத்தி கொள்ள ஏதுவாக, டுவிட்டர் தளத்தில் பெயருக்கு அருகில் சரி என குறிக்கும் வகையில் நீலநிற டிக் (புளூ டிக்) குறியீடு இருக்கும்.

இந்த புளூ டிக்கிற்காக பயனாளர்களிடம் மாதம்தோறும் ரூ.1600 வரை (19.99 அமெரிக்க டாலர்கள்) கட்டணம் வசூலிக்க டுவிட்டர் நிர்வாகம் முடிவு செய்துள்ளது என முதலில் ஒரு தகவல் வெளியானது. இதற்கு பல்வேறு தரப்பினரிடம் இருந்தும் எதிர்ப்பு கிளம்பியது.

இந்நிலையில் விலையை உயர்த்தி பின் குறைக்கும் வர்த்தக யுக்தியாக, டுவிட்டர் புளூ டிக்கிற்கு இனி மாதம் 8 டாலர் (660 இந்திய ரூபாய் மதிப்பு) கட்டணம் வசூல் செய்யப்பட உள்ளது என விலை குறைப்பு செய்து எலான் மஸ்க் அறிவிப்பு வெளியிட்டார். கடந்த ஆண்டு நவம்பரில் அறிமுகம் செய்யப்பட இருந்த இந்த திட்டம் பின்னர் தள்ளி போனது.

இந்த சூழலில், டுவிட்டரில் புளூ டிக்கை பெறுவதற்கு ஏற்ற வகையில் சந்தா தொகையை அந்நிறுவனம் இந்தியாவில் அதிகாரப்பூர்வ முறையில் அறிமுகம் செய்து உள்ளது.

இதுவரை குறிப்பிட்ட நாடுகளில் மட்டுமே இந்த கட்டணம் செலுத்தி டுவிட்டரில் சந்தாதாரர்களாக ஆவதற்கான வாய்ப்பு அளிக்கப்பட்டு இருந்தது. தற்போது, இந்திய பயனாளர்களும் ஒரு மாதத்திற்கு ரூ.900 கட்டணம் செலுத்தி உறுப்பினராக இணைந்து கொள்ளலாம்.

இதன்படி, சரிபார்க்கப்பட்ட மொபைல் எண்களை கொண்ட சந்தாதாரர்களுக்கு புளூ டிக் அடையாளம் அவரது முகப்பு பக்கத்தில் கிடைக்க பெறும்.

இதற்கு முன்பு டுவிட்டர் பயனாளர்கள் இதனை பெறுவதற்கு தனியாக விண்ணப்பம் செய்ய வேண்டும். ஆனால், கட்டணம் செலுத்தி, ஆய்வு செய்த மொபைல் போன் எண்ணுக்கு தற்போது தானாகவே புளூ டிக் கிடைக்க வசதி செய்யப்பட்டு உள்ளது. இதனால், அந்த டுவிட்டர் கணக்கு அங்கீகாரம் பெற்றது என மற்றவர்கள் அறிந்து கொள்ள முடியும்.

இந்தியாவில், ஆண்ட்ராய்டு மற்றும் ஐ.ஓ.எஸ். இயங்கு தளத்தில் இயங்கும் பயனாளர்கள் இதன் உறுப்பினராக முடியும். வலைதளம் வழியே பயன்படுத்துவோரும், புளூ டிக் சந்தாதாரர் ஆகும் வசதியை பயனாளர்களுக்கு டுவிட்டர் நிறுவனம் வழங்குகிறது. எனினும், இந்தியாவில் தற்போது இது கிடைக்க பெறாத நிலை உள்ளது.

எனினும், வலைதளம் வழியே புளூ டிக் சந்தாதாரர் ஆகும்போது, ஒரு மாதத்திற்கு ரூ.650 மட்டுமே வசூலிக்கப்படுகிறது என கூறப்படுகிறது. இதற்கு, ஆண்டு சந்தாவாக ரூ.6,800 செலுத்த வேண்டும். இதன்படி கணக்கிட்டால், மாத கட்டணம் ரூ.566.67 என இன்னும் குறையும்.

என்ன அம்சங்கள்...

இந்த புளூ டிக் முகப்பு பக்கம் பெற்ற பயனாளர்களுக்கு, கூடுதல் அம்சங்களாக சில வாக்குறுதிகளை டுவிட்டர் நிறுவனம் அளிக்கின்றது. குறைவான விளம்பரங்கள் (50% அளவு), நீண்ட பதிவுகள், அதிக நேரம் கொண்ட வீடியோக்கள், வரவிருக்கிற புதிய அம்சங்களை விரைவாக பெற்று கொள்வது ஆகியவை உறுதியளிக்கப்படுகின்றன.

வீடியோக்கள் முழு அளவில் எச்.டி. துல்லியத்துடன் பகிர முடியும். பதிவை வெளியிட்ட 30 நிமிடங்களில் 5 முறை எடிட் செய்யும் வசதியும் புளூ டிக் பயனாளர்களுக்கு வழங்கப்படுகிறது. பயனாளர் ரத்து செய்யும்வரை, விதிகளுக்கு உட்பட்டு தானாகவே புதுப்பித்து கொள்ளும் வசதியும் கொண்டது.

இதேபோன்று, ஸ்பாம் உள்ளிட்ட வைரஸ் தாக்குதலுக்கு ஆளாகும் டுவிட் பதிவுகளில், இந்த பயனாளர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும்.

வசதியை பெறுவது எப்படி?

இந்த புளூ டிக் வசதியை பெற அதற்கான செயலியை திறந்து, இடது புறத்தில் உள்ள முகப்பு பக்கம் (புரொபைல் பிக்சர்) செல்ல வேண்டும். டுவிட்டர் புளூ-வை தேர்ந்தெடுக்கவும்.

அதில், டுவிட்டர் புளூ வசதி பெற டுவிட்டர் கணக்கு தொடங்கி 90 நாட்கள் ஆகியிருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டு இருக்கும். சந்தாதாரர் ஆக, சைன்-அப் செய்பவர்கள் தங்களது மொபைல் போன் எண்ணை உறுதி செய்ய வேண்டும். அதன்பின்னர், முன்பே கூறியது போன்று தானாகவே புளூ டிக் பயனாளராக மாற இயலும்.

புளூ டிக் சந்தாதாரர் ஆன பின்னர், உங்களது முகப்பு பக்க புகைப்படம், வெளியே தெரியும் பெயர் அல்லது பயனாளர் பெயர் (யூசர் நேம்) ஆகியவற்றை மாற்றினால், அது புளூ டிக் வசதியை இழக்க செய்யும். அதனுடன், டுவிட்டரின் மறுஆய்வு காலத்தில் வேறு எந்த மாற்றங்களையும் செய்ய அனுமதி அளிக்கப்படாது என தெரிவிக்கப்பட்டு உள்ளது.

புளூ டிக் சேவையை பணம் கொடுத்து பெறும் வசதியால், இதனை சிலர் தவறாக பயன்படுத்த கூடும் என்றும் கூறப்பட்டது. எனினும், யாராவது இதனை தவறாக பயன்படுத்தினால், அவர்கள், கட்டண தொகையை இழக்க நேரிடுதல், நிரந்தர கணக்கு முடக்கம் ஆகியவற்றை சந்திக்க நேரிடும் என எலான் மஸ்க் எச்சரித்து உள்ளார்.


Next Story