'சட்டத்தை கையில் எடுக்கவிட மாட்டோம்' - மேற்கு வங்க கவர்னர் பேட்டி


சட்டத்தை கையில் எடுக்கவிட மாட்டோம் - மேற்கு வங்க கவர்னர் பேட்டி
x

யாரும் சட்டத்தை கையில் எடுக்க அனுமதிக்க மாட்டோம் என்று மேற்கு வங்க கவர்னர் கூறினார்.

கொல்கத்தா,

மேற்கு வங்காள மாநிலம் ஹூக்ளி மாவட்டம் ரிஷ்ராவில் கடந்த ஞாயிற்றுக்கிழமை ராமநவமி ஊர்வலம் நடந்தது. அதில், பா.ஜனதா தேசிய துணைத்தலைவர் திலீப் கோஷ், பா.ஜனதா எம்.எல்.ஏ. பீமன் கோஷ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

அந்த ஊர்வலத்தில் பங்கேற்றவர்கள் மீது கற்கள் வீசப்பட்டன. இது பெரும் வன்முறையாக உருவெடுத்தது. கடைகள், வாகனங்கள் அடித்து நொறுக்கப்பட்டன. பா.ஜனதா எம்.எல்.ஏ. பீமன் கோஷ் காயம் அடைந்து, ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். ரிஷ்ராவுக்கு அருகே உள்ள செரம்போர் பகுதிக்கும் வன்முறை பரவியது. 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இணையதள சேவைகள் முடக்கப்பட்டன. நேற்று முன்தினம் இரவிலும் வன்முறை வெடித்தது.

இந்நிலையில், ஜி20 தொடர்பான கூட்டத்தில் பங்கேற்பதற்காக, மேற்கு வங்காள மாநில கவர்னர் சி.வி.ஆனந்த போஸ், மாநிலத்தின் வடபகுதியில் உள்ள டார்ஜிலிங்குக்கு சென்றிருந்தார். ராமநவமி ஊர்வல வன்முறை பற்றி அறிந்த அவர், நேற்று அங்கிருந்து விமானம் மூலம் கொல்கத்தா திரும்பினார். விமான நிலையத்தில் இருந்து நேராக ஹூக்ளி மாவட்டம் ரிஷ்ராவுக்கு சென்றார்.

அங்கு வன்முறையால் பாதிக்கப்பட்ட பகுதிகளை நேரில் பார்வையிட்டார். மாவட்ட போலீஸ் அதிகாரிகள், பொதுமக்கள் ஆகியோருடன் பேசி, நிலைமையை கேட்டறிந்தார்.

பின்னர், கவர்னர் ஆனந்த போஸ் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

குண்டர்கள் யாரும் சட்டத்தை தங்கள் கையில் எடுக்க அனுமதிக்க மாட்டோம். கும்பல் வன்முறையை ஒடுக்க மத்திய, மாநில அரசுகள் இணைந்து நடவடிக்கை எடுக்கும். போலீசார் உறுதியான நடவடிக்கை எடுப்பார்கள்.

இவ்வாறு அவர் கூறினார்.


Next Story