ஸ்கூட்டரில் சென்றபோது சிமெண்டு லாரி சக்கரத்தில் சிக்கி பெண் நசுங்கி சாவு


ஸ்கூட்டரில் சென்றபோது சிமெண்டு லாரி சக்கரத்தில் சிக்கி பெண் நசுங்கி சாவு
x
தினத்தந்தி 2 April 2023 6:45 PM GMT (Updated: 2 April 2023 6:46 PM GMT)

பெங்களூருவில் சிமெண்டு லாரி மோதியதில் லாரியின் சக்கரத்தில் சிக்கி ஸ்கூட்டரில் சென்ற பெண் தலை நசுங்கி உயிரிழந்தார்.

பெங்களூரு:

பெண் நசுங்கி சாவு

மண்டியாவை சேர்ந்தவர் மஞ்சுநாத். இவரது மனைவி அனுஷா. இந்த தம்பதியின் மகன் சன்னபுட்டா (வயது 7). மஞ்சுநாத் தனது மனைவி மற்றும் மகனுடன் பெங்களூரு புறநகர் ஆனேக்கல் தாலுகா தீபாஞ்சலி நகர் பகுதியில் வசித்து வந்தார். இந்த நிலையில் நேற்று அனுஷா தனது தாய் வனஜாக்ஷி மற்றும் மகனுடன் ஸ்கூட்டரில் அந்தப்பகுதியில் சென்றார். அப்போது அவர்கள் நாயண்டஹள்ளி சந்திப்பு சாலையில் சென்று கொண்டிருந்தனர். அந்த சமயத்தில் அவருக்கு பின்னால் சிமெண்டு மூட்டைகள் ஏற்றி கொண்டு லாரி ஒன்று வந்தது.

அந்த லாரி திடீரென டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்தது. பின்னர் சாலையில் தறிகெட்டு ஓடி முன்னால் அனுஷா சென்ற ஸ்கூட்டர் மீது மோதியது. இதனை தொடர்ந்து அந்த லாரி, அரசு பஸ் மீதும் மோதி நின்றது. லாரி மோதியதில் ஸ்கூட்டரில் சென்ற அனுஷா, அவரது தாய் மற்றும் மகன் சாலையில் தவறி விழுந்தனர். அந்த சமயத்தில் சிமெண்டு லாரியின் சக்கரத்தில் அனுஷா சிக்கிக் கொண்டார். இதில் லாரி ஏறி இறங்கியதில் அனுஷா தலை நசுங்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

2 கால்கள் துண்டாகின

மேலும் வனஜாக்ஷியின் 2 கால்களும் லாரி சக்கரத்தில் சிக்கிக் கொண்டது. இதனால் அவரது 2 கால்களும் துண்டாகின. இதனால் அவர் வலியால் கதறி துடித்தார். அனுஷாவின் மகன் சன்னபுட்டா லேசான காயங்களுடன் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினான். இந்த விபத்தை நேரில் பார்த்தவர்கள் அதிர்ச்சி அடைந்தனர். விபத்து நடந்ததும் லாரி டிரைவர், அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார்.

மேலும் அவர்கள் திடீரென லாரியை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். அப்போது போராட்டத்தில் ஈடுபட்ட சிலர் லாரி கண்ணாடி மீது கற்களை வீசி தாக்கினர். இதில் லாரி கண்ணாடி சேதமடைந்தது. இதுகுறித்து தகவல் அறிந்ததும் பேடராயனபுரா போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்தனர்.

போக்குவரத்து பாதிப்பு

அவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டவர்களை லேசான தடியடி நடத்தி கலைத்தனர். இதனால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து விபத்தில் உயிரிழந்த அனுஷாவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பினர். மேலும் உயிருக்கு போராடிய வனஜாக்ஷியை மீட்டு சிகிச்சைக்காக ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் லாரி டிரைவரின் அலட்சியத்தால் தான் இந்த விபத்து நடந்தது தெரியவந்தது. இந்த விபத்தால் அந்த சாலையில் 4 கிலோ மீட்டருக்கு வாகனங்கள் அணிவகுத்து நின்றன. இதனால் அந்த பகுதியில் சுமார் 2 மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. இதுகுறித்து பேடராயனபுரா போலீசார் வழக்குப்பதிவு செய்து லாரி டிரைவரை வலைவீசி வருகிறார்கள்.


Next Story