தேர்தல் அரசியலில் ஓய்வு பெற்றது சுயமாக எடுத்த முடிவு; முன்னாள் முதல்-மந்திரி எடியூரப்பா பேட்டி
தேர்தல் அரசியலில் இருந்து ஓய்வு பெற்றது சுயமாக எடுத்த முடிவு என்று எடியூரப்பா தெரிவித்துள்ளார்.
பெங்களூரு:
தேர்தல் அரசியலில் இருந்து ஓய்வு பெற்றது சுயமாக எடுத்த முடிவு என்று எடியூரப்பா தெரிவித்துள்ளார்.
பெங்களூருவில் நேற்று முன்னாள் முதல்-மந்திரி எடியூரப்பா நிருபர்களுக்கு அளித்த பேட்டியின் போது கூறியதாவது:-
கனவு நனவாகி உள்ளது
சிவமொக்காவுக்கு வருகிற 27-ந் தேதி (அதாவது நாளை) பிரதமர் நரேந்திர மோடி வருகை தர உள்ளார். சிவமொக்காவில் புதிய விமான நிலையம் திறக்கப்பட உள்ளது. என்னுடைய பல ஆண்டு கனவு நனவாக உள்ளது. சிவமொக்கா மாவட்டத்தின் வளர்ச்சிக்காக என்னவெல்லாம் செய்ய வேண்டுமோ, அதனை செய்திருக்கிறேன். நான் தேர்தல் அரசியலில் இருந்து தான் ஓய்வு பெற்றுள்ளேன்.
கர்நாடகத்தில் பா.ஜனதாவை மீண்டும் ஆட்சியில் அமர்த்துவதற்காக மாநிலம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளேன். வீரசைவ லிங்காயத் சமுதாய மக்களை கைகூப்பி கேட்டுக் கொள்கிறேன், நான் தேர்தல் அரசியலில் இருந்து ஓய்வு பெறுவதாக எடுத்த முடிவு சுயமாக எடுத்ததாகும். எனவே பா.ஜனதாவுக்கு முழு ஆதரவை அளிக்கும்படி வீரசைவ லிங்காயத் சமுதாய மக்களை கேட்டுக் கொள்கிறேன்.
சுயமாக எடுத்த முடிவு
வருகிற 27-ந் தேதி எனக்கு 80 வயதாகிறது. இந்த காரணத்திற்காகவும் சுயமாக முடிவு எடுத்து தேர்தல் அரசியலில் இருந்து ஓய்வு பெற்றுள்ளேன். காங்கிரஸ், ஜனதாதளம்(எஸ்) கட்சிகளில் சரியான தலைமை இல்லை. பா.ஜனதாவுக்கு பிரதமர் மோடி, அமித்ஷாவின் தலைமையால் பெரிய சக்தியே கிடைத்திருக்கிறது.
கர்நாடகத்தில் பா.ஜனதா மீண்டும் ஆட்சி அமைப்பது உறுதி. இது 100 சதவீதம் நடந்தே தீரும். சித்தராமையா மீதான குற்றச்சாட்டு குறித்து முதல்-மந்திரியிடம் கேட்டு தெரிந்து கொள்ளுங்கள்.
இவ்வாறு அவர் கூறினார்.