காங்கிரஸ் தங்களது வாக்குறுதிகளை நிறைவேற்றாவிட்டால் விதானசவுதாவில் பா.ஜனதா சார்பில் தொடர் தர்ணா போராட்டம்; முன்னாள் முதல்-மந்திரி எடியூரப்பா அறிவிப்பு


காங்கிரஸ் தங்களது வாக்குறுதிகளை நிறைவேற்றாவிட்டால் விதானசவுதாவில் பா.ஜனதா சார்பில் தொடர் தர்ணா போராட்டம்; முன்னாள் முதல்-மந்திரி எடியூரப்பா அறிவிப்பு
x

காங்கிரஸ் கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றாவிட்டால் விதானசவுதா வளாகத்தில் உள்ள காந்தி சிலை முன்பாக பா.ஜனதா சார்பில் தொடர் தர்ணா போராட்டம் நடத்தப்படும் என்று முன்னாள் முதல்-மந்திரி எடியூரப்பா அறிவித்துள்ளார்.

தாவணகெரே:

காங்கிரஸ் கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றாவிட்டால் விதானசவுதா வளாகத்தில் உள்ள காந்தி சிலை முன்பாக பா.ஜனதா சார்பில் தொடர் தர்ணா போராட்டம் நடத்தப்படும் என்று முன்னாள் முதல்-மந்திரி எடியூரப்பா அறிவித்துள்ளார்.

தாவணகெரே மாவட்டத்தில் நேற்று நடைபெற்ற பா.ஜனதா தொண்டர்கள் கூட்டத்தில் முன்னாள் முதல்-மந்திரி எடியூரப்பா பேசியதாவது:-

தொடர் தர்ணா போராட்டம்

சட்டசபை தேர்தலுக்கு முன்பாக காங்கிரஸ் கட்சி 5 இலவச திட்டங்களை நிறைவேற்றுவதாக மக்களுக்கு வாக்குறுதி அறிவித்திருந்தது. தற்போது அந்த வாக்குறுதிகளை நிறைவேற்றாமல் காங்கிரஸ் அரசு இருந்து வருகிறது. மக்களுக்கு கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றாவிட்டால் விதானசவுதா வளாகத்தில் உள்ள காந்தி சிலை முன்பாக பா.ஜனதா தர்ணா போராட்டத்தில் ஈடுபடும். இதில், பா.ஜனதா தலைவர்கள் அனைவரும் பங்கேற்பார்கள்.

கர்நாடக பட்ஜெட் கூட்டத்தொடர் தொடங்கியதும் விதானசவுதாவில் உள்ள காந்தி சிலை முன்பு தர்ணா போராட்டம் நடைபெறும். பட்ஜெட் கூட்டத்தொடரில் கவர்னர் உரை முடிந்ததும் எங்களது போராட்டம் தொடங்கும். காங்கிரஸ் அரசு கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றும் வரை தர்ணா போராட்டத்தை கைவிடாமல் தொடர்ந்து நடத்துவோம்.

பா.ஜனதா சகித்து கொள்ளாது

காங்கிரஸ் கட்சியினர் 5 உத்தரவாத திட்டங்களை நிறைவேற்றுவதாக கூறி வீடு, வீடாக சென்று உத்தரவாத அட்டையை கொடுத்ததுடன், அதில் சித்தராமையாவும், டி.கே.சிவக்குமாரும் கையெழுத்து போட்டு கொடுத்திருந்தனர். தற்போது உத்தரவாத திட்டங்களை நிறைவேற்றாமல் மக்களை ஏமாற்ற நினைக்கிறார்கள். இந்த இலவச திட்டங்களால் தான் காங்கிரஸ் ஆட்சியை பிடித்தது என்பதை மறந்து விடக்கூடாது.

காங்கிரஸ் ஆட்சிக்கு வந்து ஒரு மாதம் கடந்தும் கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை. ஜூலை 5-ந் தேதிக்குள் காங்கிரஸ் கொடுத்த 5 வாக்குறுதிகளையும் எந்த விதமான கட்டுப்பாடுகளையும் விதிக்காமல் நிறைவேற்ற வேண்டும். இல்லையெனில் நானே முன் நின்று தர்ணா போராட்டத்தில் ஈடுபடுவேன். மக்களை ஏமாற்ற காங்கிரஸ் நினைத்தால், அதனை பா.ஜனதா சகித்து கொள்ளாது. மாநிலத்தில் வளர்ச்சி பணிகள் மீது இன்னும் காங்கிரஸ் அரசு கவனம் செலுத்தவில்லை.

இவ்வாறு எடியூரப்பா பேசினார்.


Next Story