தனியார் நிறுவனத்தில் எந்திரங்களை திருடிய வாலிபர் கைது


தனியார் நிறுவனத்தில் எந்திரங்களை திருடிய வாலிபர் கைது
x

மைசூருவில் தனியார் நிறுவனத்தில் எந்திரங்களை திருடிய வாலிபரை போலீசார் கைது செய்தனர். அவரிடம் இருந்து ரூ.10 லட்சம் மதிப்பிலான பொருட்களை பறிமுதல் செய்தனர்.

மைசூரு:-

எந்திரங்கள், மடிக்கணினி திருட்டு

மைசூரு டவுன் உன்சூர் சாலையில் தனியார் நிறுவனம் ஒன்று உள்ளது. இந்தநிலையில் கடந்த மாதம் 29-ந்தேதி தனியார் நிறுவனத்தின் கதவை மர்மநபர்கள் உடைத்து மடிக்கணினிகள், எந்திரங்களை திருடிவிட்டு சென்றனர். அவற்றின் மதிப்பு ரூ.10 லட்சத்துக்கு மேல் இருக்கும் என கூறப்படுகிறது.

இதுகுறித்த புகாரின் பேரில் விஜயநகர் போலீசார் வழக்குப் பதிவு செய்து மர்மநபர்களை தேடி வந்தனர். மேலும் அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்தனர்.

அதில், சரக்கு வாகனத்தில் மர்மநபர் ஒருவர் வருவதும், அவர் தனியார் நிறுவனத்தின் கதவை உடைத்து உள்ளே சென்று எந்திரங்கள், மடிக்கணினிகளையும் திருடி சென்றது பதிவாகி இருந்தது. இந்தநிலையில் கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை வைத்து மர்மநபரை போலீசார் தேடி வந்தனர்.

வாலிபர் கைது

இந்தநிலையில், விஜயநகர் போலீசார் அப்பகுதியில் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக வந்த வாகனத்தை நிறுத்தி போலீசார் சோதனை செய்தனர். அதில் இருந்த நபர்முன்னுக்குப்பின் முரணாக பேசினார். இதனால் சந்தேகமடைந்த போலீசார் அவரை கைது செய்து கிடுக்கிப்பிடி விசாரணை நடத்தினர்.

விசாரணையில், அவர் குடகு மாவட்டம் குஷால் நகர் பகுதியை சேர்ந்த மஞ்சுநாத் (வயது35) என்பதும், அவர் மைசூரு டவுன் பகுதியில் உள்ள தனியார் நிறுவனத்தில் மடிக்கணினி, எந்திரங்களை திருடி சென்றது தெரியவந்தது. அவரிடம் இருந்து ரூ.10 லட்சம் மதிப்பிலான மடிக்கணினிகள், எந்திரங்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.

மேலும் மஞ்சுநாத் குடகு, மைசூரு ஆகிய மாவட்டங்களில் தொடர் திருட்டில் ஈடுபட்டு வந்துள்ளார். அவர் மீது தட்சிண கன்னடா மாவட்டம் பனம்பூர், பாண்டேஸ்வரா, ஹாசன், கோணனூரு ஆகிய போலீஸ் நிலையங்களில் திருட்டு வழக்குகள் உள்ளன. இதுகுறித்து மஞ்சுநாத்திடம் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.


Next Story