இந்திய பாரா ஒலிம்பிக் குழுவினருக்கு பிரதமர் நரேந்திர மோடி விருந்து


இந்திய பாரா ஒலிம்பிக் குழுவினருக்கு பிரதமர் நரேந்திர மோடி  விருந்து
x
தினத்தந்தி 9 Sep 2021 12:57 PM GMT (Updated: 9 Sep 2021 12:57 PM GMT)

இந்திய பாரா ஒலிம்பிக் விளையாட்டு குழுவினருக்கு பிரதமர் நரேந்திர மோடி இன்று தமது இல்லத்தில் விருந்து அளித்தார்.

புதுடெல்லி

இந்திய பாராலிம்பிக் விளையாட்டு குழுவினருக்கு பிரதமர் நரேந்திர மோடி இன்று தமது இல்லத்தில் விருந்து அளித்தார். 

சமீபத்தில் ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் நடந்து முடிந்த பாரா ஒலிம்பிக் போட்டியில் இந்தியா 5 தங்கம் உட்பட 19 பதக்கங்கள் பெற்றது. பாரா ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்ற அனைத்து வீரர்கள் மற்றும் பயிற்சியாளர்களுக்கு, பிரதமர் மோடி இன்று தனது இல்லத்தில் விருந்து அளித்து கலந்துரையாடினார்.

ஒட்டுமொத்த குழுவினருடன் பிரதமர் இயல்பாகக் கலந்துரையாடினார். போட்டிகளில் வரலாற்று சிறப்பு மிக்க சாதனையைப் படைத்த அவர்களுக்கு பிரதமர் பாராட்டு தெரிவித்தார். அவர்களது இந்த சாதனை, விளையாட்டு சமூகம் மொத்தத்திற்கும் ஊக்கமளிக்கும் என்றும், விளையாட்டுகளில் முன்னேற இளம் வீரர்களுக்கு எழுச்சியூட்டும் என்றும் அவர் தெரிவித்தார். அவர்களது செயல் திறனால் விளையாட்டு குறித்த விழிப்புணர்வு பெருமளவு அதிகரித்திருப்பதாகவும் அவர் கூறினார்.

மேலும் பிரதமர்  உண்மையான விளையாட்டு வீரர்கள், வெற்றி, தோல்விகளால் துவளாமல் முன்னேறிச் செல்வார்கள்.

தங்களது செயல்பாடுகளால் மக்கள் தங்கள் மீது கொண்டிருந்த பார்வையை தடகள வீரர்கள் மாற்றி உள்ளனர். விடுதலையின் 75-வது ஆண்டு கொண்டாட்டத்தின் இந்தக் காலகட்டத்தில் மக்களை ஊக்கப்படுத்தவும், மாற்றம் ஏற்படுத்த உதவும் வகையிலும், விளையாட்டுக்கு வெளியேயும் சில துறைகளைக் கண்டறிந்து அவற்றிலும் ஈடுபட வேண்டும் என கூறினார்.
 
தங்களுக்கு அழைப்பு விடுத்த பிரதமருக்கு நன்றி தெரிவித்த பாரா ஒலிம்பிக் தடகள வீரர்கள், அவருடன் மேசையைப் பகிர்ந்து கொள்வதே மிகப்பெரும் சாதனை என்று குறிப்பிட்டனர்.
 
பல்வேறு வீரர்கள் தாங்கள் பதக்கம் வென்ற விளையாட்டு உபகரணங்களில் தங்களது கையொப்பமிட்டு அதனை பரிசாக பிரதமருக்கு அளித்தனர். அனைத்து வீரர்களும் கையொப்பமிட்ட அங்கியும் பிரதமருக்கு பரிசாக வழங்கப்பட்டது. 

Next Story