அறிவியல் ஆதாரமற்ற கொரோனா மருந்துகளால் மக்கள் தவறாக வழிநடத்தப்பட்டு விடக்கூடாது! நிபுணர்கள் எச்சரிக்கையால் பரபரப்பு


அறிவியல் ஆதாரமற்ற கொரோனா மருந்துகளால் மக்கள் தவறாக வழிநடத்தப்பட்டு விடக்கூடாது! நிபுணர்கள் எச்சரிக்கையால் பரபரப்பு
x
தினத்தந்தி 27 Jun 2020 12:15 AM GMT (Updated: 26 Jun 2020 10:11 PM GMT)

தினந்தோறும் புதிய உச்சகங்களை கொரோனா தொற்று பாதிப்பு ஏற்படுத்திக்கொண்டே இருப்பது ஊடகங்களையெல்லாம் திகைப்பில் ஆழ்த்துகின்றன. மக்களையோ பதற்றத்தில் தள்ளுகிறது.


130 கோடிக்கும் அதிகமான மக்கள் தொகையை கொண்ட இந்தியாவில், இப்படி ஒரு ஊரடங்கு இந்த நூற்றாண்டு கண்டிராதது.

ஊரடங்குக்குள் முழு ஊரடங்கு என்று சொல்லி புதிது புதிதாக கட்டுப்பாடுகளை விதித்தும் கொரோனா வைரஸ் தொற்று “ம்கூம், இதெல்லாம் என்னை ஒன்றும் செய்துவிட முடியாது” என்று சொல்வதுபோல தினமும் பல்லாயிரக்கணக்கானோருக்கு தொற்று உறுதியாகிக்கொண்டே இருக்கிறது.

தினந்தோறும் புதிய உச்சகங்களை கொரோனா தொற்று பாதிப்பு ஏற்படுத்திக்கொண்டே இருப்பது ஊடகங்களையெல்லாம் திகைப்பில் ஆழ்த்துகின்றன. மக்களையோ பதற்றத்தில் தள்ளுகிறது.

நேற்று ஒரே நாளில் 17 ஆயிரத்துக்கும் மேற்பட்டோருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருப்பது புதிய உச்சமாக பார்க்கப்படுகிறது. இதன்மூலம் பாதிப்புக்குள்ளானோரின் மொத்த எண்ணிக்கையும் 5 லட்சத்தை நோக்கி விரைந்து கொண்டிருக்கிறது.

ஆனாலும் கொரோனா வைரஸ் தொற்று நோயாளிகளுக்கு இதுதான் சிகிச்சை என்றோ, இதுதான் மருந்து என்றோ இந்த வினாடி வரையிலும் ஒரு தெளிவு பிறக்கவில்லை. மருத்துவ அறிவியல் துறைக்கே தலை கிறுகிறுத்துப்போய் இருக்கிறது. என்ன செய்வதென தெரியாமல் திணறுகிறது.

இந்த நிலையில் கடந்த 23-ந் தேதி யோகா குரு பாபா ராம்தேவின் பதஞ்சலி ஆயுர்வேத நிறுவனம் கொரோனா வைரஸ் தொற்றை குணப்படுத்துவதற்கு 2 மருந்துகளை கண்டறிந்து இருப்பதாக பரபரப்பு வெளியிட்டது.

கொரோநில், சுவாசரி இன்னும் இந்த 2 மருந்துகளையும் கொண்டு உயிர்காக்கும் வகையில் வென்டிலேட்டரில் வைக்கப்பட்டோ, ஆக்சிஜன் செலுத்துகிற நிலையிலோ வைக்கப்படாத பிற கொரோனா நோயாளிகளுக்கு 7 நாளில் சுகம் காண முடியும் என்று கூறினர்.

அதே நாளில் இந்த மருந்துகளை அறிமுகம் செய்து வைத்த பாபா ராம்தேவ், “உலகமே கொரோனா வைரசுக்கான மருந்துக்காக, தடுப்பூசிக்காக காத்திருக்கிறது. தேசிய மருத்துவ அறிவியல் நிறுவனத்துடன் (தனியார் துறை) கை கோர்த்து முதன்முதலாக மருத்துவ ரீதியில் சோதிக்கப்பட்ட இந்த ஆயுர்வேத மருந்துகளை அறிமுகம் செய்கிறோம்” என அறிவித்தபோது, அது பெரும் எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியது.

ஆனால் அடுத்த சில மணித்துளிகளில் இந்த இரு மருந்துகளின் தயாரிப்பு குறித்த ஆராய்ச்சியை சரிபார்க்கும் வரையில், இது தொடர்பான அனைத்து விளம்பரங்களையும் நிறுத்தி வைத்து மத்திய ஆயுஷ் அமைச்சகம் அதிரடியாக உத்தரவிட்டது.

இந்த மருந்துகளின் விற்பனைக்கு மராட்டியம், ராஜஸ்தான் மாநிலங்கள் தடை போட்டுள்ளன.

ஆனால் பதஞ்சலியின் இயக்குனர் பாலகிருஷ்ணா, “எங்களது மருந்துகள் கொரோனா வைரஸ் தொற்றுக்கானது என நாங்கள் கூறவில்லை” என்று பல்டியடித்திருக்கிறார். இது ரொம்பவே யோசிக்க வைக்கிறது.

எனவேதான், உலகமெங்கும் உள்ள மக்கள் கொரோனா வைரஸ் தொற்று நோய்க்கு எதிராக போராடி வருகிறார்கள். இன்னும் இதற்கு மருந்து கிடைக்கவில்லை. ஆனால், அவர்கள் அறிவியல் ஆதாரமற்ற மருந்துகளால், அறிவியல் தரங்கள் இல்லாத மருந்துகளால் மக்கள் தவறாக வழிநடத்தப்பட்டு விடக்கூடாது என்று நிபுணர்கள் எச்சரிக்கை விடுத்து இருப்பது புதிய பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

அந்த வகையில் பதஞ்சலியின் புதிய மருந்துகள் பற்றி ஆயுஷ் துறை அமைச்சகம் விளக்கம் கோரி இருப்பதை இந்த நிபுணர்கள் வரவேற்கிறார்கள்.

இதுபற்றி அவர்கள் கருத்து தெரிவிக்கையில், “கொரோனா வைரஸ் தொற்றுக்கு ஒரு சிறந்த சிகிச்சையை கண்டறிவது என்பது தீவிரமான வியாபாரம் ஆகி இருப்பதால், இது வரவேற்கத்தக்க நடவடிக்கை ஆகும். அனைத்து மருந்துகளும், தடுப்பூசிகளும் கடுமையான சோதனைகள் மற்றும் அறிவியல் சரிபார்ப்பு செயல்முறைகளுக்கு உட்படுத்தப்பட வேண்டும்.

 எனவே அரசாங்கத்தின் வழியாக செல்லாமல், கொரோனா வைரஸ் தொற்றை குணப்படுத்தும் என அறிவிக்கப்படுகிற மருந்துகள் குறித்து பொதுமக்கள் மிகவும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். சரிபார்க்கப்படாத சிகிச்சைகள், மக்களுக்கு மேலும் பாதிப்புகளை உண்டாக்கி விடும். மக்களும் மந்திரஜாலம் போன்ற இந்த மருந்துகள் கொரோனா வைரஸ் தொற்றில் இருந்து பாதுகாக்கும் சரியான தீர்வு என நம்பி செல்லத்தொடங்கி விடுவார்கள்” என கூறுகின்றனர்.

தற்போது 4½ லட்சத்துக்கும் அதிகமான மக்களுக்கு தொற்று பாதிப்பு இருக்கிற நிலையில், மக்கள் இப்படிப்பட்ட ஒப்புதல் இல்லாத மருந்துகளுக்கு இரையாகி விடாமல் பார்த்துக்கொள்ள வேண்டும் என்று ஒருமித்த குரலில் ஓங்கிச்சொல்கிறார்கள்.

கொரோனா வைரஸ் தொற்று ஆபத்தானதுதான், அதற்கு தீர்வு தேவைதான், அதற்காக தவறான தீர்வை நாடினால் அது கொரோனாவை விட மோசமான பாதிப்பை ஏற்படுத்தி விடும் என்பதை மக்களும் உணர வேண்டும். கொரோனா தொற்று அலை, சூறாவளியாக வீசி வரும் இந்த தருணத்தில் இது மிக மிக அவசியம்.

Next Story