பழங்கள்- காய்கறிகளை நீண்ட நாட்கள் பாதுகாக்கலாம்..!


பழங்கள்- காய்கறிகளை நீண்ட நாட்கள் பாதுகாக்கலாம்..!
x
தினத்தந்தி 4 Oct 2021 4:35 PM GMT (Updated: 4 Oct 2021 4:35 PM GMT)

பழங்கள் மற்றும் காய்கறிகளை மொத்தமாக வாங்கி வந்து நீண்ட நாட்கள் பயன்படுத்தும் வழக்கம் நிறைய பேரிடம் இருக்கிறது. எனினும் ஒருசில வழிமுறைகளை முறையாக பின்பற்றினால் மட்டுமே அவைகளை கெட்டுப்போகாமல், பாதுகாக்க முடியும்.

குளிர்சாதன பெட்டியை எப்போதும் சுத்தமாக வைத்திருங்கள்:

உணவு பொருட்கள் நீண்ட நாட்கள் கெட்டுப்போகாமல் இருக்க வேண்டும் என்றால் குளிர்சாதன பெட்டியையும் சுத்தமாக பராமரிக்க வேண்டும். அதன் மூலம் பிற நுண் கிருமிகள் உருவாகுவதை தடுத்துவிடலாம். ஏனெனில் அவை உணவு பொருட்களை மாசுபடுத்திவிடும். அழுகவும் வைத்துவிடும். குளிர்சாதன பெட்டி மூடிய நிலையில் இருந்தாலும் அதனுள் காற்று தடையின்றி சுழல்வதற்கான சூழல் அமைந்திருக்க வேண்டும்.

ஆப்பிள் போன்ற சில வகை பழங்கள், உணவு பொருட்களில் இருந்து எத்திலீன் வாயு வெளிப்படும். அது குளிர்சாதன பெட்டியில் வைக்கப்பட்டிருக்கும் மற்ற பொருட்களை வேகமாக பழுக்க வைத்துவிடும். பொருட்கள் நெருக்கமாக இருந்தால் அவை அழுகுவதற்கும் காரணமாகிவிடும்.

குளிர்சாதன பெட்டிக்குள் பழங்கள், காய்கறிகளை சிறு துண்டுகளாக வெட்டி வைத்தால், அவைகள் மீது காற்று படாதவாறு இறுக்கமாக மூடி வைக்க வேண்டும். ஏனெனில் காற்று அவைகள் மீது படர்ந்தால் விரைவில் அழுகிவிடும். உதாரணமாக அவகொடா பழத்தை துண்டுகளாக நறுக்கி வைத்திருந்தால் அதன் மீது எலுமிச்சை சாறை தெளிக்கலாம்.

ஒரே இடத்தில் வைக்காதீர்கள்:

காய்கறிகள், பழங்களை ஒரே இடத்தில் வைக்காதீர்கள். ஏனெனில் அவைகளை பழுக்க வைக்கும் தன்மை கொண்ட எத்திலீன் வாயு உருவாகும் என்பதால் விரைவாக கெட்டுப்போக வைத்துவிடும். உருளைக்கிழங்கையும், ஆப்பிளையும் ஒன்றாக வைத்தால் உருளைக்கிழங்கு நீண்ட நேரம் பிரஷ்ஷாக இருக்கும். வாழைப்பழத்தை வேறு எந்த காய்கறிகளுடனும் சேர்த்து வைக்கக்கூடாது. ஏனெனில் வாழைப்பழத்தில் எத்திலீன் வாயு அதிகம் உள்ளது. அது மற்ற காய்கறிகள், பழ வகைகளை வேகமாக பழுக்க வைப்பதோடு அல்லாமல் கெட்டுப்போகவும் வைத்துவிடும்.

தண்ணீரில் ஊறவையுங்கள்:

புதினா, கொத்தமல்லி தழை, துளசி போன்ற மூலிகை வகை செடிகளின் தண்டு பகுதியை நீரில் முக்கி வைக்கலாம். அதன் மூலம் அவை வாடிப்போவதை தவிர்க்கலாம். கண்ணாடி ஜார்களில் தண்ணீர் ஊற்றி அதில் மூலிகை செடிகளை பாதுகாக்கலாம்.

வினிகரில் கழுவுங்கள்

சில வகை பழங்கள், காய்கறிகள் மீது பூஞ்சைகள் படரக்கூடும். 3 பங்கு தண்ணீருடன் ஒரு பங்கு வினிகர் கலந்து அதில் பழங்கள், காய்கறிகளை முக்கி கழுவி, உலர வைக்கலாம். பூஞ்சை உருவாகுவதையும், அழுகலையும் வினிகர் தடுக்கும். அத்துடன் பழங்கள், காய்கறிகளில் படிந்திருக்கும் பூச்சிக்கொல்லி மருந்துகளையும் அகற்ற உதவும். அத்துடன் மேற்பரப்பில் படந்திருக்கும் கிருமிகளையும் அழித்துவிடும். வினிகரில் முக்கிய பிறகு சுத்தமான தண்ணீரில் கழுவி, துணியால் துடைத்தெடுத்து சேமித்து வைக்கலாம்.

வெப்பமான இடத்தில் வைக்காதீர்கள்:

பழங்கள், காய்கறிகளை அதிக வெப்பநிலை கொண்ட இடங்களில் வைக்கும்போது அவை விரைவாக பழுப்பதற்கான வாய்ப்புகள் அதிகரிக்கும். சமையல் அறையிலோ, அடுப்புக்கு அருகிலோ வைப்பதை தவிர்க்க வேண்டும். வெப்பத்தை உற்பத்தி செய்யும் மின் சாதன பொருட்களின் அருகிலும் உணவு பொருட்களை வைக்கக்கூடாது.


Next Story