சின்னஞ்சிறு கிளியே !


சின்னஞ்சிறு கிளியே !
x
தினத்தந்தி 24 Jan 2020 4:48 AM GMT (Updated: 24 Jan 2020 4:48 AM GMT)

இன்று பரவலாக அறியப்பட்டுள்ள பெண்களும், ஆண்களும் ஊடகவியலாளர்களுக்கு பேட்டியளிக்கும் போது சொல்கிற தளுக்கான தொடர்.

ன்று (ஜனவரி 24-ந் தேதி) தேசிய பெண் குழந்தைகள் தினம்.

‘எனக்குப் பெண் குழந்தைதான் பிடிக்கும். அதற்காக நான் பிரார்த்தனை செய்தபடி இருக்கிறேன். என் வேண்டுதல்கள் பலிக்கும் என்று நான் நம்புகிறேன்.’ இது, இன்று பரவலாக அறியப்பட்டுள்ள பெண்களும், ஆண்களும் ஊடகவியலாளர்களுக்கு பேட்டியளிக்கும் போது சொல்கிற தளுக்கான தொடர்.

ஆனால் இது உண்மையான பேச்சா? தங்களை முற்போக்கான எண்ணம் உடையவர்களாக காட்டிக்கொள்ளும் முயற்சியா? அல்லது குழந்தை பெண்ணாக இருக்கும் என்ற எண்ணத்தில் வெளிப்படுத்தும் சமாதான முயற்சியா? அல்லது பெண் குழந்தை பிறந்து விட்டதே என்ற வருத்தத்தை மென்று விழுங்கி ஜீரணித்த பிறகு சாதுர்யமாக சொல்லப்படும் சமாளிப்பா?

எல்லாமும் தான். பெண் குழந்தை பிறந்து விட்டால் அழுவதும், கலங்குவதும் அந்தத் துயரம் அந்தக் குழந்தையின் திருமண காலம் வரை பல்வேறு உருவங்களில் வெளிப்படுவதும்தான் நிதர்சனம். பெற்ற தாய், சொந்தக் குடும்பம் என்று தொடங்கி கல்விக் காலம், பணிக் காலம், திருமணம், புகுந்த வீடு வரை நீளும்.

தான் சுமந்து கொண்டிருப்பது பெண்தான் என்று தெரிந்ததும், அதைக் கருவிலேயே கொல்லும் வழக்கம், இந்தியா முழுவதும் அறிவியலும், தொழில்நுட்ப வளர்ச்சியும், தொழில் நுட்பமும் சாத்தியப்படுத்திய சாபங்கள். குழந்தை பிறந்த பிறகு அவற்றைப் பாலில் நெல்மணியிட்டும், கள்ளிப்பால் தந்தும், மூச்சடக்கியும் கொல்கிற வழக்கம் இன்றும் தொடர்கிறது. பிள்ளைகளை வளர்ப்பதில் காட்டப்படும் சமத்துவமின்மை பிறந்த வீட்டிலேயே தொடங்குகிறது. ஊட்டச்சத்து மிக்க உணவு பெண் குழந்தைகளுக்கு மறுக்கப்படுகிறது. தேவைப்படும்போது பெற வேண்டிய மருத்துவ உதவிகளும் மறுக்கப்படுகிறது. கல்வி பெறும் காலத்தில் குடும்பத்தின் பொருளாதார நிலைக்கு ஏற்றாற்போல ஆரம்பக் கல்வி மறுக்கப்படுகிறது. சத்துணவு தரப்படுகிறது என்பதால் கல்விக் கூடங்களுக்கு அனுமதிக்கப்படும் குழந்தைகளுக்கும் அது உயர்நிலை வரை தொடர்வதில்லை.

குழந்தைப் பருவத்தை தொலைத்து விட்டு குழந்தைகள் வேலைக்கு அனுப்பப்படுகின்றனர். அல்லது வீட்டு வேலைகளில் தாயாருக்கு உதவவோ, சின்னத் தம்பிகளை பார்த்துக்கொள்ளவோ கல்வி பாதியில் நிறுத்தப்படுகிறது. வேலைக்குப் போன இடத்தில் ஆண்களுக்கு இணையாகவோ அல்லது ஆண்களை விட சிறப்பாகவோ பணிபுரிந்தாலும், சித்தாள் வேலை பார்க்கும் பெண்களிலிருந்து சினிமாவில் உச்ச நட்சத்திரமாகத் திகழும் பெண்கள் வரை இந்த எழுதப்படாத விதியின் கரங்களால் நெரிபடுவதே கண்கூடு. பணி நியமனங்களிலும் இந்த சமத்துவமின்மை தொடர்கிறது. வீரதீர மிக்க செயல்களும் அறிவார்ந்த மிகச் சிறந்த செயல்களும் இருட்டடிப்பு செய்யப்படுவது யதார்த்த நிலையாக இருக்கிறது.

குடும்பங்களில் பெற்றோரோ தங்கள் மகளின் படிப்பாற்றலை நன்கு அறிந்தவர்களாக இருந்தாலும் “அண்ணன், தம்பி மருத்துவ கல்லூரி அல்லது பொறியியல் படிக்கட்டும். நீ வீட்டுக்குப் பக்கத்திலிருக்கிற கலை கல்லூரிக்குப் போய் உன் திருமணம் தகையும் வரை எதாவது ஒரு பட்டப் படிப்பை படி” என்று கூறுவது இன்று வரை தொடர்கிறது.

மக்கள் தொகைக் கணக்கெடுப்பில் ஆண், பெண் விகிதாச்சாரங்களில் பெண்களின் எண்ணிக்கை குறைவது கண்டு அதை மாற்றும் முயற்சியாக கருவிலிருக்கும் குழந்தை ஆணா, பெண்ணா என்று பார்த்துச் சொல்லும் மருத்துவமனைகளை இழுத்து மூடும் சட்டம் வந்தது.

பெண்களுக்கு சொத்துரிமை கட்டாயம் தரப்பட வேண்டும் என்று சட்டம் இயற்றப்பட்ட பின்புதான் திருமணத்தில் மங்கலநாண் பூட்டப்படுவதற்கு முன்பே மணமகளிடம் அவளுடைய தந்தையும், சகோதரர்களும் குடும்பச் சொத்தில் என் பங்கை நான் கோர மாட்டேன் என்று பத்திரம் எழுதிக் கையெழுத்து வாங்கிக் கொள்ளும் பழக்கம் வந்திருக்கிறது. இதே வழியில் பெண்கள் நலன் காக்கும் சட்டங்களின் கழுத்தும் திருகப் படுவதைக் காண்கிறோம். ஒவ்வொரு காலத்திலும் பெண்களின் முன்னேற்றத்தை சாத்தியப்படுத்தும் வெவ்வேறு முயற்சிகளை சமூகப் போராளிகள் எடுத்துக் கொண்டே இருக்கிறார்கள். சதி ஒழிப்பு, குழந்தைத் திருமண ஒழிப்பு என்று பதினெட்டாம் நூற்றாண்டில் முன்னெடுப்புகளை அன்றைய சமூகப் போராளிகள் செய்தார்கள்.

மகாத்மா பூலே, சாவித்திரி பூலே போன்றவர்கள் பெண் கல்விக்கான முயற்சிகளை மேற்கொண்டு வெற்றி பெற்றார்கள். பாரதி, பெரியார், பாரதிதாசன் போன்ற சிந்தனையாளர்கள் பெண் வாழ்வை இருட் குகையிலிருந்து வெளிச்சத்துக்குக் கொண்டுவர பெருமுயற்சிகள் செய்து ஓரளவு வெற்றியும் பெற்றார்கள். “நிமிர்ந்த நடையும் நேர்கொண்ட பார்வையும், யாருக்கும் அஞ்சாத நெறிகளும், திமிர்ந்த ஞானச் செருக்கும்கொண்ட” 10 அல்லது 5 சதவீத பெண்களை அது சாத்தியமாக்கி இருக்கிறது.

கருவறை தொடங்கி கல்லறை வரை பெண் வாழ்வு அவலம் மிகுந்த ஓலக் குரலாகவே இருக்கிறது. மூன்று மாத குழந்தை தொடங்கி எண்பது வயது கிழவி வரை பாலியல் தொல்லைக்கும், பாலியல் வன்முறைக்கும் ஆளாகிறார்கள். இதை ஒழிப்பதற்கு என்று வலிமையான சட்டங்கள் இயற்றப்பட்டுள்ளன. ஏற்கனவே இருந்த சட்டங்கள் பரிசீலனைக்கு உட்படுத்தப்பட்டு கடுமையாக்கப்பட்டன. போக்சோ சட்டம் நடைமுறைக்கு வந்தது. ஆனால் நடப்பது என்ன? சில நாட்களுக்கு முன்பு கூட வேலூர் கோட்டைப் பகுதியில் இருந்த இளம்பெண் கத்தி முனையில் பாலியல் வன்கொடுமைக்கு ஆளானார். அவருடன் இருந்த காதலன் தாக்கப்பட்டார். இருவரும் அணிந்திருந்த தங்க நகைகளும் களவாடப்பட்டன. 11 வயதான சிறுவன் 5 வயதான பெண் குழந்தையை பாலியல் தொல்லைக்கு ஆளாக்கினான் என்பது சென்ற வார செய்தி. பாலியல் வன்கொடுமை வழக்குகளில் நீதி தாமதமில்லாமல் கிடைக்க வேண்டும் என்று உச்சநீதிமன்றம் வலியுறுத்தியுள்ளது. இதைக் கண்காணிக்க உயர்நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியை உள்ளடக்கிய குழு ஒவ்வொரு மாநிலத்திலும் அமைக்கப்பட்டு தாமதம் தவிர்க்கப்பட வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டது.

ஆனால், உண்மையில் நடப்பது என்ன? பெரிய அளவில் நாடெங்கும் அறியப்பட்ட நிர்பயா வழக்கு, 2012-ல் நடைபெற்ற ஒரு துயர சம்பவம். அதில் குற்றவாளிகளுக்கு எதிராக அளிக்கப்பட்ட தீர்ப்பு 2020-ல் இதுவரை செயல்படுத்தப்படவில்லை என்பதுதான் உண்மை.

பெண்களின் கண்ணியம் பாதுகாக்கப்படுவது தொடர்பாக 152 நாடுகளில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் இந்தியா 138-வது நாடாக இருக்கிறது. இது எவ்வளவு அவமானம்?

எனவே முற்றிலும் புதிய தளத்திலிருந்து மீண்டும் ஒருமுறை பாலின சமத்துவத்துக்கான முன்னெடுப்பை நிகழ்த்த வேண்டியிருக்கிறது.

அந்தப் புதிய தளமே குடும்பம். குடும்ப அமைப்பே கேள்விக்குள்ளாகிற நவீன சூழலிலும் குடும்பத்திலிருந்து தொடங்கப்படும் மாற்றமே சமூக மாற்றத்தை ஏற்படுத்தும் என்ற நம்பிக்கையோடு செயல்பட வேண்டியுள்ளது. குழந்தைகள் வளர்ப்பைப் பெற்றோர் புதிய கோணத்தில் அணுக வேண்டியுள்ளது. ஆண் குழந்தைகளையும், பெண் குழந்தைகளையும் ஒரே மாதிரியாக வளர்க்க முன்வர வேண்டும்.பெண் குழந்தைகள் தெளிவாகவும் தங்கள் கருத்துகளைத் தெரிவிக்கும்படி பழக்கப்படுத்த வேண்டும். குழந்தைகளைப் பொதுவாக கொஞ்சுவது என்பது வேறு. ஆனால் அவர்களைப் பாராட்டும்போது பாராட்டத்தக்க செயலை மட்டுமே குறிப்பிட்டு பாராட்ட வேண்டும். குழந்தைக்கு விருப்பமான ஏதாவதொரு விளையாட்டை அவள் சிறப்பாக விளையாட ஊக்குவிக்க வேண்டும். பெண் சாதனையாளர்களின் வரலாற்றை குழந்தைகளுக்கு அவ்வப்போது கூறுவது நன்மை பயக்கும். பெண் குழந்தைகளுக்கு ஆரம்பத்திலேயே தங்கள் மீது நன்மதிப்பு கொண்டவர்களாக தன்மானம் மிக்கவர்களாக வளர்க்க வேண்டும்.

அதிகப்படியான செல்லம் தருவது, மிகமிக மென்மையானவளாக அவளை நடத்துவதை நிறுத்த வேண்டும். நம் மனதையெல்லாம் ரணமாக்கிப் பிரிந்த ஐ.ஐ.டி. மாணவி பாத்திமா லத்தீபின் தாய் ஒரு பேட்டியில் தன் மகளுக்கு சுடிதார் நாடாவைக் கட்டத் தெரியாது என்பதால் லெக்கின்சை மட்டுமே வாங்குவது வழக்கம் என்று சொல்லியிருந்தார். அவ்வாறாக வளர்க்கப்பட்ட குழந்தை, புறக்கணிக்கப்பட வேண்டிய சிக்கல்களை, எதிர்கொள்ள வேண்டிய சவால்களை எப்படி எதிர்கொண்டிருப்பார்.

பெண் குழந்தைகளுக்கு எது நல்லது, எது தீயது என்று பிரித்தறியும் திறமையை பெற்றோரே ஏற்படுத்த வேண்டும். இதற்கான விதை குழந்தையின் 5 முதல் 10 வயதுக்குள் ஊன்றப்பட்டாக வேண்டும். உளவியல் ரீதியாகவும், உடல் ரீதியாகவும் வலிமை கொண்ட நபராக பெண் குழந்தை திகழ வேண்டும். கல்வியளிப்பதைப் பொறுத்தவரை எவ்வளவு சிறந்த கல்வியைத் தரமுடியுமோ அதனைத் தந்தாக வேண்டும். நல்ல நண்பர்கள் வாழ்க்கையை இனிமையானதாக்கும் என்று குழந்தைகளுக்குச் சொல்லித் தர வேண்டும். குழந்தையின் நட்பு வட்டத்தை பெற்றோர் நன்கு அறிந்துவைத்திருக்க வேண்டும். குழந்தைகள் பாதுகாப்பாக இருக்கத்தான் வேண்டும். இதன் பொருள் அவர்கள் எப்போதும் பெற்றோரின் நிழலிலேயே நடமாட வேண்டும் என்பதல்ல.

பெண்குழந்தை நமது கலாசாரத்தை, மரபுகளில் நன்மையானவற்றை தேர்வு செய்யவும் நவீன முறைகளால் பயன் பெறுபவளாகவும் இருக்க வேண்டும். எல்லோரையும் நம்பக் கூடாது. புகழ் வார்த்தைகளை கூறுபவரிடம் எச்சரிக்கையாக இருப்பது சிறப்பு.

பதின் பருவத்தை அடையும் குழந்தைகளிடம் பாலினக் கவர்ச்சி, பால் உறவு, பாலின்பம் ஆகியவற்றைப் பற்றி பக்குவமாக பெற்றோர் பேச வேண்டும். இல்லை என்றால் தவறான பல இடங்களில் இருந்து விஷயத்தை தவறாக புரிந்துகொள்ளும் வாய்ப்பு ஏற்பட்டு விடும். திரைப்படங்களில் காட்டப்படும் காதலும், நிஜ வாழ்வில் தம்பதிகள் அன்பை வெளிப்படுத்தும் விதமும் வெவ்வேறானவை என்று இளம் பெண்கள் அறிய வேண்டும்.

இந்தப் பருவத்தில் ஹார்மோன்கள் நடத்தும் தாக்குதலினால் குழந்தைகள் பல புதுமையான உணர்வுகளுக்கும், மாறிவரும் உருவ மாற்றமுமாக ஒரு குழப்பமான மனநிலையில் இருப்பார்கள். அதன் விளைவாக தங்கள் வாழ்க்கையை தானே தீர்மானித்துக் கொள்ள முடியும் என்பது போன்ற நிகழ்ச்சிகளும், அதைத் தொடர்ந்து பெற்றோரிடம் சண்டை கூட நடக்கும். இதைப் பெரிதாக்காமல் மீண்டும் பதின் வயது குழந்தையிடம் பொறுமையாகப் பேசி எந்த முடிவு சிறந்தது என்பதை விளக்க வேண்டும்.

இப்படி பெண் குழந்தைகளை சூழலுக்கேற்றபடி பொறுமையாக, பொதுவாக வளர்ப்பைச் செய்தால் நிச்சயமாக மகிழ்ச்சி கொண்ட ஒரு பெண்ணைத் தோற்றுவிக்க முடியும். சமத்துவம் மிக்க சமுதாயத்தை ஏற்படுத்தும் முயற்சி குடும்பங்களிலிருந்து தொடங்க வேண்டும்.

திலகவதி, ஐ.பி.எஸ்.

Next Story