கூடலூரில் சிவன் கோவில்களில் மகா சிவராத்திரி விழா -திரளான பக்தர்கள் சாமி தரிசனம்
கூடலூர் பகுதியில் உள்ள சிவன் கோவில்களில் மகா சிவராத்திரி விழா விடிய விடிய கொண்டாடப்பட்டது. தொடர்ந்து நடைபெற்ற சிறப்பு பூஜைகளில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.
கூடலூர்
கூடலூர் பகுதியில் உள்ள சிவன் கோவில்களில் மகா சிவராத்திரி விழா விடிய விடிய கொண்டாடப்பட்டது. தொடர்ந்து நடைபெற்ற சிறப்பு பூஜைகளில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.
மகா சிவராத்திரி விழா
நீலகிரி மாவட்டத்தில் உள்ள சிவன் கோவில்களில் நேற்று முன்தினம் இரவு மகாசிவராத்திரி விழா நடைபெற்றது. கூடலூர் பகுதியில் உள்ள நம்பாலக்கோட்டை சிவன் மலையில் உள்ள கோவிலில் விடியற்காலை 4.30 மணி வரை 4 கால பூஜைகள், ஹோமங்கள் நடைபெற்றது. தொடர்ந்து அபிஷேக அலங்கார விசேஷ பூஜைகள் நடந்தது.
இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். இதேபோல் செவிடிப்பேட்டை, நந்தட்டி, முக்கூடல் லிங்கேஷ்வரர் சிவன் கோவில்களில் சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. இதில் கொட்டும் பணியை பொருட்படுத்தாது திரளாக பக்தர்கள் கலந்து கொண்டனர். மேலும் ஓவேலி பேரூராட்சி பார்வுட்டில் பழமையான பசுவண்ணன் கோவிலில் சிவராத்திரியை ஒட்டி திருத்தேர் வீதி உலா நடைபெற்றது.
திருத்தேர் உலா
மேளதாளங்கள் முழங்க முக்கிய வீதிகள் வழியாக சென்று மீண்டும் கோவிலை தேர் வந்தடைந்தது. தொடர்ந்து நேற்று காலை வரை அபிஷேக அலங்கார விசேஷ பூஜைகள் நடைபெற்றது. இதேபோல் சூண்டி அருகே ஈசன் மலையில் மகா சிவராத்திரி விழா கொண்டாடப்பட்டது. சிவன் மற்றும் நந்தீஸ்வரருக்கு இரவு முழுவதும் அபிஷேக அலங்காரம் செய்யப்பட்டு மகாதீபாரதனை காண்பிக்கப்பட்டது.
தொடர்ந்து ஆன்மீக கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது. தேவர் சோலை பஜாரில் உள்ள சிவன் கோவிலில் நடைபெற்ற மகா சிவராத்திரி விழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். தொடர்ந்து கல்லீங்கரை சிவன் கோவில்களில் மகா சிவராத்திரி விழா நடைபெற்றது. முக்கூர் பஜனை மடத்திலிருந்து ஏராளமான பெண்கள் அகல் விளக்குகளை ஏந்தியவாறு முக்கிய சாலை வழியாக ஊர்வலமாக வந்து கோவிலை அடைந்தனர்.
தொடர்ந்து சிவனுக்கு பல்வேறு விசேஷ பூஜைகள் நடைபெற்றது. இதில் நூற்றுக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர். இதேபோல் பந்தலூர் தாலுகா எருமாடு சிவன் கோவிலில் சிவராத்திரி திருவிழா திருத்தேர் ஊர்வலம் நடைபெற்றது. இதற்கான ஏற்பாடுகளை அந்தந்த கோவில் நிர்வாகம் மற்றும் பக்தர்கள் செய்திருந்தனர்.