கோவில் பூட்டை உடைத்து 10 பவுன் நகை, வெள்ளி வேல்கள் கொள்ளை


கோவில் பூட்டை உடைத்து 10 பவுன் நகை, வெள்ளி வேல்கள் கொள்ளை
x

வேலூரை அடுத்த சாத்துமதுரையில் கோவில் பூட்டை உடைத்து 10 பவுன் நகை, 2 வெள்ளி வேல்கள் மற்றும் உண்டியல் பணத்தை கொள்ளையடித்து சென்றனர். அவர்களை பிடிக்க முயன்ற பொதுமக்களை ஆயுதங்களை காட்டி மிரட்டிவிட்டுதப்பி சென்றுவிட்டனர்.

வேலூர்

வேலூரை அடுத்த சாத்துமதுரையில் கோவில் பூட்டை உடைத்து 10 பவுன் நகை, 2 வெள்ளி வேல்கள் மற்றும் உண்டியல் பணத்தை கொள்ளையடித்து சென்றனர். அவர்களை பிடிக்க முயன்ற பொதுமக்களை ஆயுதங்களை காட்டி மிரட்டிவிட்டுதப்பி சென்றுவிட்டனர்.

நகை, வெள்ளி வேல்கள் கொள்ளை

வேலூரை அடுத்த அடுக்கம்பாறை அருகே உள்ள சாத்துமதுரையில் சிறிய மலை மீது வள்ளி தேவசேனா சமேத சுப்பிரமணியசுவாமி கோவில் அமைந்துள்ளது. மலையடிவாரத்தில் திரவுபதியம்மன் உள்ளிட்ட கோவில்களும் உள்ளன. சம்பவத்தன்று இரவு 2 மோட்டார்சைக்கிள்களில் 3 பேர் வந்துள்ளனர்.

அவர்கள் கடப்பாரை மற்றும் கம்பிகளால் கோவில் பூட்டு, கதவுகளை உடைத்து கோவிலில் இருந்த வெள்ளிவேல்கள், 10 பவுனுக்கும் மேற்பட்ட நகைகள், 2 வெள்ளி வேல்கள், உண்டியலை உடைத்து அதில் இருந்த பணம் உள்ளிட்டவைகளை கொள்ளையடித்து உள்ளனர். பின்னர் மலையடிவாரத்தில் உள்ள திரவுபதியம்மன் கோவிலில் திருட கதவின் பூட்டுகளை உடைத்துள்ளனர்.

பொதுமக்கள் மடக்கினர்

சத்தம் கேட்டு அந்தப்பகுதி மக்கள் அங்கு வந்துள்ளனர். பொதுமக்கள் வருவதை கண்ட கொள்ளையர்கள் மோட்டார்சைக்கிளில் தப்பிச்செல்ல முயன்றனர். அவர்களை பொதுமக்கள் பிடிக்க முயன்றனர். மேலும் அவர்கள் செல்ல முடியாதபடி சுற்றி வளைத்தனர். ஆனால் கொள்ளையர்கள் கத்தி, கடப்பாரை போன்ற ஆயுதங்களை காட்டி மிரட்டியபடி, திருடுவதற்கு பயன்படுத்திய பொருட்களை திரவுபதி அம்மன் கோவில் வளாகத்திலேயே போட்டு விட்டு, மோட்டார்சைக்கிளில் தப்பி சென்றனர்.

கிராம மக்கள் அவர்கள் மீது கற்கள் மற்றும் கட்டைகளை வீசினர். அதில் ஒரு மோட்டார்சைக்கிள் சக்கரத்தில் கட்டை விழுந்ததில் அந்த மோட்டார் சைக்கிள் கீழே விழுந்தது. அதிலிருந்த இரண்டு பேர், கண்ணிமைக்கும் நேரத்தில் மற்றொரு மோட்டார்சைக்கிளில் ஏறி இருட்டில் தப்பி சென்றுவிட்டனர்.

போலீஸ் விசாரணை

இதுகுறித்து தகவலறிந்த வேலூர் தாலுகா போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து பார்வையிட்டு விசாரித்தனர். மேலும் கோவிலில் பதிவாகி இருந்த கைரேகைகளை சேகரித்தனர். போலீசாரின் முதல் கட்ட விசாரணையில் முருகர் கோவிலில் கருவறை, பீரோ மற்றும் உண்டியல் உள்ளிட்டவைகளில் திருட்டு போனது தெரிய வந்தது. கொள்ளையர்கள் விட்டு சென்ற மோட்டார்சைக்கிள், ஆயுதங்களை கைப்பற்றிய போலீசார் இது குறித்து வழக்குப்பதிவு செய்து கொள்ளை கும்பலை தேடி வருகின்றனர்.

இந்த சம்பவம் அந்தப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


Next Story