ஊட்டியில் 100 கண்காணிப்பு கேமராக்கள்


ஊட்டியில் 100 கண்காணிப்பு கேமராக்கள்
x
தினத்தந்தி 30 March 2023 12:15 AM IST (Updated: 30 March 2023 12:15 AM IST)
t-max-icont-min-icon

ஊட்டியில் குற்ற சம்பவங்களை தடுக்க ரூ.30 லட்சம் செலவில் 100 கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு வருகிறது.

நீலகிரி

ஊட்டி,

ஊட்டியில் குற்ற சம்பவங்களை தடுக்க ரூ.30 லட்சம் செலவில் 100 கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு வருகிறது.

போக்குவரத்து நெரிசல்

சர்வதேச அளவில் புகழ்பெற்ற சுற்றுலா தலமாக ஊட்டி விளங்குகிறது. இங்கு ஆண்டுதோறும் 30 லட்சம் சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். கோடை சீசனுக்கு மட்டும் 8 லட்சம் பேர் வந்து செல்கின்றனர். இதேபோல் ஊட்டி சுற்றுவட்டார கிராமங்களில் இருந்து பொதுமக்கள் பொருட்கள் வாங்க ஊட்டி நகருக்கு வந்து செல்கிறார்கள். இதனால் ஊட்டியில் வார விடுமுறை, பண்டிகை மற்றும் சீசன் காலங்களில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது.

இதையடுத்து போக்குவரத்தை ஒழுங்குப்படுத்தும் வகையிலும், குற்ற சம்பவங்களில் ஈடுபடுவோரை கண்காணிக்கும் வகையிலும் அதிநவீன கண்காணிப்பு கேமரா பொருத்த போலீசாரால் முடிவு செய்யப்பட்டது. இதன்படி கடந்த டிசம்பர் மாதம் ஊட்டியில் சேரிங்கிராஸ், பஸ் நிலையம் உள்ளிட்ட பகுதிகளில் 90 அதிநவீன கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டது.

இந்தநிலையில் தற்போது ஊட்டி நகர் முழுவதும் பல்வேறு இடங்களில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தும் பணிகள் கடந்த வாரம் தொடங்கி தீவிரமாக நடந்து வருகிறது.

கண்காணிப்பு கேமராக்கள்

இதுகுறித்து நீலகிரி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பிரபாகர் கூறியதாவது:-

இதற்கு முன்னர் பொருத்தப்பட்ட அதிநவீன கேமராக்கள் மூலம் 100 மீட்டர் தூரம் வரை உள்ள காட்சிகளை துல்லியமாக புகைப்படம் மற்றும் வீடியோவாக பதிவு செய்ய முடியும். மேலும் தானாகவே வாகன பதிவு எண்களை சேமித்து வைக்கும். இந்த பதிவுகள் அனைத்தும் 3 மாதங்களுக்கு அப்படியே இருக்கும். தேவைப்பட்டால் மீண்டும் எடுத்துக்கொள்ளலாம்.

தற்போது பொருத்தப்படும் கேமராக்கள், தனியார் பங்களிப்பு நிதியுடன் மாற்றப்படுகிறது. ரூ.30 லட்சம் செலவில் மொத்தம் 100 கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்படுகிறது. அடுத்த ஒரு வாரத்தில் இந்த பணிகள் முடிக்கப்படும். இந்த கண்காணிப்பு கேமராக்களும் பயன்பாட்டுக்கு வந்தால், குற்ற சம்பவங்களை தடுக்க முடியும். இவ்வாறு அவர் கூறினார்.


Next Story