தொடர் மழையால் 10 ஆயிரம் ஏக்கர் நெற்பயிர்கள் பாதிப்பு


தொடர் மழையால் 10 ஆயிரம் ஏக்கர் நெற்பயிர்கள் பாதிப்பு
x

மயிலாடுதுறை மாவட்டத்தில் தொடர்ந்து பெய்து வரும் மழையால் சுமார் 10 ஆயிரம் ஏக்கர் நெற்பயிர்கள் பாதிக்கப்பட்டுள்ளன.

மயிலாடுதுறை

மயிலாடுதுறை மாவட்டத்தில் நேற்று முன்தினம் காலை முதல் நேற்று வரை தொடர்ந்து 2 நாட்கள் லேசானது முதல் மிதமான மழை பெய்தது. நேற்று முன்தினம் காலையில் மட்டும் கனமழை பெய்தது. மயிலாடுதுறை, மணல்மேடு, செம்பனார்கோவில், சீர்காழி, குத்தாலம் உள்ளிட்ட இடங்களில் பரவலாக மழை பெய்தது.

இந்த மழை காரணமாக ரோடுகளில் மழைநீர் தேங்கியது. தாழ்வான பகுதிகளையும் மழைநீர் சூழ்ந்தது. இந்த மழையின் காரணமாக தரைக்கடை வியாபாரிகள், தள்ளுவண்டிகளில் சென்று வியாபாரம் செய்பவர்கள் பெரிதும் பாதிக்கப்பட்டனர்.

விளைநிலங்கள் பாதிப்பு

இந்த ஆண்டு காவிரியில் முன்கூட்டியே தண்ணீர் திறந்து விடப்பட்டதால் மயிலாடுதுறை மாவட்டத்தில் வழக்கமான அளவை விட கூடுதல் பரப்பளவில் குறுவை சாகுபடி செய்யப்பட்டது. சுமார் 92 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் சாகுபடி செய்யப்பட்ட குறுவை நெற் பயிர்கள் அறுவடைக்கு தயாராக இருந்தது.

ஒரு சில இடங்களில் முற்றிய நெற்பயிர்கள் அறுவடை செய்யப்பட்டு வந்த நிலையில் கடந்த 2 நாட்களாக பெய்த மழையின் காரணமாக மயிலாடுதுறை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் சுமார் 10 ஆயிரம் ஏக்கர் நெற்பயிர்கள் சாய்ந்தும், நீரில் மூழ்கியும் உள்ளன.

முளைக்கும் நெல்மணிகள்

குறிப்பாக மயிலாடுதுறை அருகே ஆனதாண்டவபுரம், மாப்படுகை, வழுவூர், பாண்டூர் உள்ளிட்ட பல கிராமங்களில் அறுவடைக்கு தயாராக இருந்த நெற்பயிர்கள் மழைநீரில் மூழ்கியும், முளைத்தும் வருகின்றன. இதுகுறித்து ஆனதாண்டவபுரம் கிராமத்தை சேர்ந்த விவசாயி அன்பழகன் கூறுகையில், கொற்றவநல்லூர் கிராமத்தில் மட்டும் 70 ஏக்கர் நெற்பயிர்கள் மழையில் சாய்ந்து நெல்மணிகள் முளைத்து வருகின்றன. இதுபோல தாழ்வான பகுதிகளில் உள்ள விளைநிலங்கள் மழையால் பாதிக்கப்பட்டுள்ளன. கிராமங்களில் உள்ள உள்வாய்க்கால்களை சரிவர தூர்வாராத காரணத்தால்தான் மழைநீர் வடியாமல் விளைநிலங்களில் தேங்கி நிற்கின்றன. மழையால் பாதிக்கப்பட்ட விளைநிலங்களை அதிகாரிகள் கணக்கெடுத்து விவசாயிகளுக்கு உரிய இழப்பீடு கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.

சீர்காழி

இதேபோல சீர்காழி தாலுகாவிற்கு உட்பட்ட சீர்காழி, வைத்தீஸ்வரன் கோவில், கொள்ளிடம், திருவெண்காடு உள்ளிட்ட பகுதிகளில் கடந்த 2 நாட்களாக தொடர்ந்து பெய்து வரும் தொடர் மழையால் சீர்காழி புதிய பஸ் நிலையம், பழைய பஸ் நிலையம், ஈசானிய தெரு, கீழவீதி, வைத்தீஸ்வரன் கோவில் பஸ் நிலையம், ெரயில்வே ரோடு உள்ளிட்ட பகுதிகளில் உள்ள சாலைகளில் மழைநீர் தேங்கியுள்ளது.

இதனால் வாகன ஓட்டிகள் மற்றும் பாதசாரிகள் கடும் இன்னலுக்கு ஆளாகி வருகின்றனர்.

விளைநிலங்கள் மூழ்கின

இதைபோல அகணி, வள்ளுவக்குடி, கொண்டல், ஆதமங்கலம், பெருமங்கலம், கன்னியாக்குடி, நல்லூர், புத்தூர், மாதானம், எடமணல், ஆச்சாள்புரம், ஆதமங்கலம், பெருமங்கலம், செம்மங்குடி உள்ளிட்ட பகுதிகளில் விவசாயிகள் மின் மோட்டாரை பயன்படுத்தி சாகுபடி செய்யப்பட்ட குறுவை நெற்பயிர்கள் அறுவடைக்கு தயாராக இருந்த நிலையில் தொடர் மழையால் நீரில் மூழ்கி உள்ளன.

இதுகுறித்து பாதிக்கப்பட்ட விவசாயி சுந்தர்ராஜன் கூறுகையில், இந்த ஆண்டு மின் மோட்டாரை பயன்படுத்தி சீர்காழி பகுதியில் குறுவை சாகுபடி செய்தோம். அறுவடைக்கு தயாராக இருந்த நிலையில் கடந்த 2 நாட்களாக பெய்து வரும் தொடர் மழையால் நெற்பயிர்கள் சாய்ந்து அழுகி முளைக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் விவசாயிகளின் வாழ்வாதாரம் கேள்விக்குறியாக உள்ளது.

நெல் கொள்முதல் நிலையம்

மேலும், அறுவடை செய்யப்பட்ட நெல்லை உடனுக்குடன் கொள்முதல் செய்யாததால் அனைத்து நேரடி நெல் கொள்முதல் நிலையங்களிலும் நெல் மூட்டைகள் குவியல், குவியலாக அடுக்கி வைக்கப்பட்டுள்ளன.எனவே தமிழக அரசு விவசாயிகள் கோரிக்கையை ஏற்று கூடுதல் ஈரப்பதம் உள்ள நெல்லையும் கொள்முதல் செய்ய வேண்டும். தொடர்மழையால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என கேட்டுக் கொண்டார்.

திருக்கடையூர்

இதேபோல திருக்கடையூர், ஆக்கூர், பிள்ளைபெருமாநல்லூர், டி.மணல்மேடு, கிள்ளியூர், கண்ணங்குடி, வளையல் சோழகன், காடுவெட்டி, நடுவலூர், ரவணயன்கோட்டகம், நட்சத்திரமாலை, ஆக்கூர், மடப்புரம், கிடங்கல், அன்னப்பன்பேட்டை, தோட்டம் ஆகிய பகுதிகளில் நேற்று பெய்த மழையால் தாழ்வான பகுதிகளை தண்ணீர் சூழ்ந்தது.


Next Story