117 டன் மக்காத பிளாஸ்டிக் கழிவுகள் சிமெண்டு ஆலைகளுக்கு அனுப்பி வைப்பு


117 டன் மக்காத பிளாஸ்டிக் கழிவுகள் சிமெண்டு ஆலைகளுக்கு அனுப்பி வைப்பு
x
திருப்பூர்


காங்கயம் நகராட்சி சார்பில் 117 மெட்ரிக் டன் மக்காத பிளாஸ்டிக் கழிவுகள் பிரிக்கப்பட்டு அரியலூரில் உள்ள சிமெண்டு ஆலைகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக நகராட்சி ஆணையாளர் தெரிவித்தார்.

சிமெண்டு ஆலைகளுக்கு

திருப்பூர் மாவட்டம், காங்கயம் நகராட்சியில் மொத்தம் உள்ள 18 வார்டு பகுதியில் சுமார் 40 ஆயிரம் மக்கள் வசித்து வருகின்றனர். இவர்களது வீடுகளில் சேகரமாகும் குப்பைகளை, நகராட்சி தூய்மைப் பணியாளர்கள் மூலம் வீடுகள்தோறும் தினசரி மக்கும், மக்காத குப்பைகள் சேகரிக்கப்பட்டு வருகிறது.

இதில் மக்கும் குப்பைகளை உரமாக்கி, விவசாயப்பணிகளுக்கு வழங்கப்பட்டு வருகிறது.

மக்காத கழிவுகளில் ஒரு பகுதியான பிளாஸ்டிக் கழிவுகளை மறுசுழற்சிக்கு பயன்படுத்துவதற்காக அரியலூர் அல்ட்ரா சிமெண்டு ஆலை மற்றும் டால்மியா சிமெண்டு ஆலைகளுக்கு எரிபொருளுக்காக வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் நேற்று அரியலூர் சிமெண்டு ஆலைக்கு 8 டன் பிளாஸ்டிக் கழிவுகள் லாரியில் ஏற்றி அனுப்பி வைக்கப்பட்டது.

117 டன் பிளாஸ்டிக் கழிவுகள்

இது குறித்து காங்கயம் நகராட்சி ஆணையர் எஸ்.வெங்கடேஷ்வரன் கூறுகையில் "காங்கயம் நகராட்சியில் சேகரமாகும் மக்காத பிளாஸ்டிக் கழிவுகள் இந்த வருடத்தில் மட்டும் சுமார் 117 டன் சேகரிக்கப்பட்டு, சிமெண்டு ஆலைகளில் ஒப்படைக்கப்பட்டுள்ளது. இதனால் நகராட்சிப் பகுதியில் சுற்றுச்சூழல் பாதிக்கப்படுவது தடுக்கப்படுவதுடன், தூய்மையான நகராட்சியாக தொடர்ந்து பராமரிக்கப்பட்டு வருகிறது.

இதற்கு ஒத்துழைப்பு கொடுத்து வரும் நகர்மன்றத் தலைவர், நகர்மன்ற உறுப்பினர்கள், பொதுமக்கள், வணிகர்கள் அனைவருக்கும் காங்கயம் நகராட்சி நிர்வாகம் சார்பில் நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறோம். மேலும் பொதுமக்கள் பிளாஸ்டிக் பயன்பாட்டைக் குறைத்து, தமிழக அரசால் தெரிவிக்கப்பட்டுள்ள மீண்டும் மஞ்சப்பை பயன்படுத்தி, சுற்றுப்புற சுகாதாரத்திற்கு முழு ஒத்துழைப்பு வழங்குமாறு கேட்டுக் கொள்கிறோம்" என்றார்.


Next Story