12 கோடி வீடுகளுக்கு சுகாதாரமான குடிநீர் வழங்கப்பட்டுள்ளது
12 கோடி வீடுகளுக்கு சுகாதாரமான குடிநீர் வழங்கப்பட்டுள்ளது
இந்தியாவில் 12 கோடி வீடுகளுக்கு சுகாதாரமான குடிநீர் வழங்கப்பட்டுள்ளது என மத்திய மக்கள் தொடர்பக சென்னை மண்டல இயக்குனர் காமராஜ் பேசினார்.
புகைப்பட கண்காட்சி
கும்பகோணம் மத்திய அரசின் தகவல் ஒலிபரப்பு அமைச்சகத்தின் சார்பில் அரசு மக்கள் நலத்திட்டங்கள், சர்வதேச சிறுதானியங்கள் ஆண்டு மற்றும் சுற்றுச்சூழலுக்கேற்ற வாழ்க்கை முறை குறித்த புகைப்பட கண்காட்சி நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு மத்திய மக்கள் தொடர்பக சென்னை மண்டல இயக்குனர் காமராஜ் தலைமை தாங்கினார். மத்திய மக்கள் தொடர்பகம் திருச்சி களவிளம்பர அலுவலர் தேவிபத்மநாபன் வரவேற்றார். இதில் தஞ்சை நேரு இளையோர் மையம் துணை இயக்குனர் திருநீலகண்டன், தஞ்சை ஐ.ஓ.பி. கிராம சுய வேலைவாய்ப்பு பயிற்சி மைய இயக்குனர் அலமேலு, மாவட்ட சித்த மருத்துவ அலுவலர் குணசேகரன், கல்லூரி முதல்வர் யூஜின் அமலா ஆகியோர் கலந்து கொண்டு பேசினர்.
சான்றிதழ், பரிசு
தஞ்சை கூடுதல் கலெக்டர் ஸ்ரீகாந்த் கலந்துகொண்டு பேச்சு மற்றும் கட்டுரைபோட்டிகளில் வெற்றி பெற்ற மாணவிகளுக்கு சான்றிதழ்- பரிசுகளை வழங்கினார்.
பின்னர் மத்திய மக்கள் தொடர்பகம் சென்னை மண்டல இயக்குனர் காமராஜ் பேசியதாவது:-
இந்தியா கடந்த 9 ஆண்டுகளில் தற்சார்பு இந்தியாவாக வளர்ச்சி பெற்றுள்ளது. ஏழைகளுக்கு அடிப்படை கட்டமைப்பை உருவாக்குவதில் முனைப்புடன் செயல்படுகிறது. நாடு முழுவதும் தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் 100 சதவீதம் துப்புரவு செயல்பாடுகள் சிறப்பாக உள்ளது. 12 கோடி வீடுகளுக்கு சுகாதாரமான குடிநீர் வழங்கப்பட்டுள்ளது.
வாழ்க்கையில் முன்னேற்ற வேண்டும்
11 கோடி விவசாயிகளுக்கு பாரத பிரதமர் கிசான் திட்டத்தின் கீழ் ரூ.6 ஆயிரம் கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டு விவசாயிகளின் வங்கி கணக்கில் வரவு வைக்கப்படுகிறது. மக்கள் செலுத்தும் வரிப்பணம் மீண்டும் மக்களுக்கான நலத்திட்டங்களாக செலவிடப்படுகிறது. விவசாயிகளுக்கு மத்திய அரசு பல்வேறு நலத்திட்டங்களை, தொழில் நுட்பங்களை வழங்கி மகசூல் அதிகரிக்க வழிவகுக்கிறது.
தற்சார்பு மகளிர் வலுப்பெற 2015-ம் ஆண்டு முதல் 2020-ம் ஆண்டு வரை உயர்கல்வியில் பெண்களின் சேர்க்கை 18 சதவீதம் அதிகரித்துள்ளது. பிரதமரின் மகளிர் நலத்திட்டத்தின் கீழ் 10 ஆயிரம் கோடி மகப்பேறு பயனாளிகள் பயன்பெற்றுள்ளனர். எனவே மத்திய அரசின் நலத்திட்டங்களை தெரிந்து கொண்டு அனைவரும் வாழ்க்கையில் முன்னேற வேண்டும். உங்களுக்கான பாதையை நீங்கள் தான் தேர்வு செய்து கொள்ளவேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.
நிகழ்ச்சிகளை தஞ்சை மத்திய மக்கள் தொடர்பகம் களவிளம்பர உதவியாளர் ரவீந்திரன் ஒருங்கிணைத்தார்.
முடிவில் திருச்சி மத்திய மக்கள் தொடர்பகம் களவிளம்பர உதவியாளர் அருண்குமார் நன்றி கூறினார்.