கோவில் திருவிழாவுக்காக கிராமத்தோடு திரண்டு வந்து வேட்டையாடிய 120 பேர் சிக்கினர்


கோவில் திருவிழாவுக்காக கிராமத்தோடு திரண்டு வந்து வேட்டையாடிய 120 பேர் சிக்கினர்
x

கோவில் திருவிழாவுக்காக கிராமத்தோடு திரண்டு வந்து, வேட்டையாடிய 120 பேர், வனத்துறையினரிடம் சிக்கினர். அவர்கள் வேட்டையாடிய 30 முயல்கள், 5 கீரிகள் கைப்பற்றப்பட்டன.

விருதுநகர்

கோவில் திருவிழாவுக்காக கிராமத்தோடு திரண்டு வந்து, வேட்டையாடிய 120 பேர், வனத்துறையினரிடம் சிக்கினர். அவர்கள் வேட்டையாடிய 30 முயல்கள், 5 கீரிகள் கைப்பற்றப்பட்டன.

இதுகுறித்து வனத்துறை தரப்பில் கூறப்படுவதாவது:-

வேட்டையாடினர்

திண்டுக்கல் மாவட்டம் நத்தம் அருகே கருத்தலக்கம்பட்டி, புதூர் கிராமங்களில் காளியம்மன் மற்றும் முத்தாலம்மன் கோவில் திருவிழாக்கள் நடக்கும். அப்போது அந்த பகுதியை சேர்ந்தவர்கள் வனவிலங்குகளை வேட்டையாடி படையல் வைத்து வழிபடுவதாக கூறப்படுகிறது.

அந்த வகையில் நேற்று அப்பகுதியில் இருந்து கோவில் பூசாரி சின்னையா, சிவகுமார் ஆகியோர் தலைமையில் அந்த கிராமத்தினர் சுமார் 120 பேர் திரண்டு 3 லாரிகள், 5 கார்களில் விருதுநகர் அருகே உள்ள பூசாரிப்பட்டி கிராமத்திற்கு வந்தனர்.

பறிமுதல்

இரவு நேரத்தில் சாத்தூரை சுற்றியுள்ள வனப்பகுதியில் 5 வேட்டை நாய்களை வைத்துக்கொண்டு வேட்டையாடி இருக்கிறார்கள்.

5 கீரிப்பிள்ளைகள், 30 முயல்கள் மற்றும் கவுதாரி உள்ளிட்டவற்றை வேட்டையாடி பிடித்துள்ளனர். அவற்றுடன் வாகனங்களில் ஊருக்கு திரும்பிக் கொண்டிருந்தனர்.

இதுபற்றி தகவல் அறிந்து, வனத்துறையினர் உஷாரானார்கள். விருதுநகர்-சாத்தூர் ரோட்டில் வச்சகாரப்பட்டி அருகே வனபாதுகாப்பு படை அலுவலர் கார்வேந்தன் தலைமையில் வன பாதுகாப்பு படையினர் விரைந்து வந்து அந்த வாகனங்கனை மடக்கினர்.

சிக்கிய 120 பேரையும் வாகனங்களோடு, கலெக்டர் அலுவலக வளாகத்தில் உள்ள வனத்துறை அலுவலகத்திற்கு கொண்டு சென்றனர். மேலும் அவர்கள் பிடித்து வந்த முயல்கள், கீரிகள் மற்றும் வேட்டையாட பயன்படுத்திய கருவிகளையும் பறிமுதல் செய்தனர்.

இதுகுறித்து வனத்துறை அதிகாரி கார்த்திக் மற்றும் அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த நடவடிக்கை அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.


Next Story