ரூ.17 கோடியில் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாக இடம்:மாவட்ட நீதிபதி குருமூர்த்தி ஆய்வு


ரூ.17 கோடியில் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாக இடம்:மாவட்ட நீதிபதி குருமூர்த்தி ஆய்வு
x
தினத்தந்தி 23 Dec 2022 6:45 PM GMT (Updated: 23 Dec 2022 6:46 PM GMT)

ஸ்ரீவைகுண்டத்தில் ரூ.17 கோடியில் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகம் கட்டப்பட உள்ள இடத்தை மாவட்ட நீதிபதி குருமூர்த்தி ஆய்வு செய்தார்.

தூத்துக்குடி

ஸ்ரீவைகுண்டம்:

ஸ்ரீவைகுண்டத்தில் மாவட்ட உரிமையியல் நீதிமன்றம், சார்பு நீதிமன்றம், மாஜிஸ்திரேட் நீதிமன்றம் எண்.1, மாஜிஸ்திரேட் நீதிமன்றம் எண்.2 ஆகிய நீதிமன்றங்கள் செயல்படுகின்றன. இந்த நீதிமன்ற கட்டிடங்கள் மிகவும் பழுதடைந்த நிலையில் இருப்பதால், புதிய நீதிமன்ற வளாகம்கட்ட வேண்டும் என்று வழக்கறிஞர்கள் சங்கத்தினர் தொடர்ந்து வலியுறுத்தி வந்தனர். இதனை ஏற்று மாவட்ட உரிமையியில் நீதிமன்ற வளாகத்தில் புதிதாக ரூ.17 கோடியில் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகம் கட்டுவதற்கு இடம் தேர்வு செய்யப்பட்டுள்ளது.

இந்த நிலையில் மாவட்ட நீதிபதி குருமூர்த்தி ஸ்ரீவைகுண்டம் வருகை தந்தார். அவர் நீதிமன்றங்களில் ஆய்வு மேற்கொண்டார். பின்னர் புதிதாக ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகம் கட்டப்படவுள்ள இடத்தை நீதிபதி ஆய்வு செய்தார்.

மாவட்ட முதன்மை குற்றவியல் நீதிபதி செல்வகுமார், உரிமையியல் நீதிபதி முத்துலட்சுமி, மாஜிஸ்ட்ரேட்டுகள் மயில்சாமி, மகாராஜன் ஆகியோர் உடன் இருந்தனர். இதனைத் தொடர்ந்து ஸ்ரீவைகுண்டம் வழக்கறிஞர்கள் சங்க சார்பில் நடத்தப்பட்ட நிகழ்ச்சியில் மூத்த வழக்கறிஞர்கள் ராமகிருஷ்ணன், பாலசுப்பிரமணியன், நாராயணன் ஆகியோரது உருவ படங்களை திறந்து வைத்து மரியாதை செலுத்தினர். இந்நிகழ்ச்சியில் வழக்கறிஞர்கள் சங்க செயலாளர் முத்துராமலிங்கம் வரவேற்று பேசினார். சென்னை உயர்நீதிமன்ற மத்திய அரசு உதவி வழக்கறிஞர் ராஜேஷ், வழக்கறிஞர் சங்கத் தலைவர் பாலசுப்பிரமணியன், மூத்த வழக்கறிஞர்கள் ஜெய்சிங் மதுரம், கருப்பசாமி, ஆறுமுகப்பெருமாள் உள்பட பலர் கலந்து கொண்டனர். வழக்கறிஞர் ஜோதிலட்சுமி நன்றி கூறினார்.


Next Story