2 லட்சத்து 49 ஆயிரம் பெண்கள் கட்டணம் இல்லாமல் பயணம்
அரசு டவுன் பஸ்களில் 2 லட்சத்து 49 ஆயிரம் பெண்கள் கட்டணம் இல்லாமல் பயணம் செய்துள்ளனர்.
வேலூர்
அரசு டவுன் பஸ்களில் 2 லட்சத்து 49 ஆயிரம் பெண்கள் கட்டணம் இல்லாமல் பயணம் செய்துள்ளனர்.
தமிழக முதல்-அமைச்சராக மு.க.ஸ்டாலின் கடந்தாண்டு மே மாதம் 7-ந் தேதி பொறுப்பேற்றவுடன், 5 திட்டங்களை அறிவித்து கோப்புகளில் கையெழுத்திட்டு அரசாணை பிறப்பித்தார். அவற்றில் மகளிருக்கு அரசு டவுன் பஸ்களில் கட்டணமில்லாத பயணம் ஒன்றாகும்.
இந்த திட்டத்தின்படி வேலூர் மாவட்டத்தில் கடந்தாண்டு மே மாதம் 8-ந் தேதி முதல் கடந்த 22-ந்தேதி அரசு போக்குவரத்துக்கழக கட்டுப்பாட்டில் இயங்கும் டவுன் பஸ்களில் 2,48,79,820 பெண்களும், 21,126 மூன்றாம் பாலினத்தவர்களும், 4,42,205 மாற்றுத்திறனாளிகளும், அவர்களுக்கு உதவியாக 9,185 பேரும் இலவசமாக பயணம் செய்துள்ளனர்.
குறிப்பாக பள்ளிகொண்டா, குடியாத்தம் மற்றும் ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள சிப்காட் அதனை சுற்றியுள்ள பகுதிகளுக்கு வேலைக்கு செல்லும் பெண்கள் தினமும் சுமார் 15 ஆயிரம் பேர் இலவசமாக பயணம் செய்து வருகிறார்கள்.
டவுன் பஸ்களில் பெண்களுக்கு கட்டணமில்லாத பயண திட்டத்தின் மூலம் கிராமப்புற ஏழை, எளிய குடும்பத்தை சேர்ந்த வேலைக்கு செல்லும் பெண்கள் மற்றும் கல்லூரிகளுக்கு சென்று படிக்கும் பெண்களுக்கு செலவாகும் பயணத்தொகை அவர்களுக்கு சேமிப்பாக இருந்து வருகிறது.
இந்த தகவலை கலெக்டர் குமாரவேல்பாண்டியன் தெரிவித்துள்ளார்.