இலங்கையை சேர்ந்தவர் உள்பட 2 பேர் கைது
ராமேசுவரத்தை சேர்ந்த மளிகை வியாபாரியிடம் ரம்ஜான் நோன்பிற்காக மளிகை பொருட்கள் வாங்குவதாக கூறி ரூ.4½ லட்சம் மோசடி செய்த இலங்கையை சேர்ந்த நபர் உள்பட 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
ராமேசுவரத்தை சேர்ந்த மளிகை வியாபாரியிடம் ரம்ஜான் நோன்பிற்காக மளிகை பொருட்கள் வாங்குவதாக கூறி ரூ.4½ லட்சம் மோசடி செய்த இலங்கையை சேர்ந்த நபர் உள்பட 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
வியாபாரி
ராமேசுவரம் பள்ளிவாசல் தெருவை சேர்ந்தவர் லியாக்கத்அலி (வயது 45).பலசரக்கு வியாபாரி. இவரிடம் மர்ம நபர் ஒருவர் தொடர்பு கொண்டு கர்நாடகாவில் கப்பலில் வேலை செய்வதாக கூறி ரம்ஜான் நோன்புக்கு ஏழைகளுக்கு மளிகை பொருட்கள் வழங்க உள்ளதாக கூறி உள்ளார். இதற்காக லியாக்கத்அலியிடம் அரிசி, பருப்பு, சர்க்கரை ஆகிய பொருட்களை மொத்தமாக கொள்முதல் செய்து கொள்வதாக கூறியுள்ளார். இதற்கான பணம் வெளிநாட்டில் இருந்து நன்கொடையாளர்கள் மூலம் வருவதால் அதனை உங்கள் வங்கி கணக்கில் பெறுவதற்கு சில நடைமுறை கட்டணங்களை செலுத்த வேண்டும் என தெரிவித்து பல காரணங்களை கூறி ரூ.4 லட்சத்து 45 ஆயிரம் பெற்றுள்ளார்.
பணத்தை வாங்கியும் பொருட்களை வாங்காமல் மேலும் கட்டணங்கள் என கூறி பணம் கேட்டதால் சந்தேகம் அடைந்த லியாக்கத்அலி ராமநாதபுரம் சைபர்கிரைம் போலீசில் புகார் செய்தார். போலீஸ் இன்ஸ்பெக்டர் வெற்றிவேல்ராஜன், சப்-இன்ஸ்பெக்டர் திபாகர் ஆகியோர் வழக்குபதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டனர்.
கண்காணிப்பு கேமரா ஆய்வு
விசாரணையில் மோசடி நபர்கள் சென்னை மற்றும் பெங்களூரு பகுதிகளில் இருந்து செயல்படுவதும் பல வங்கி கணக்குகளை தொடங்கி பணத்தினை சில நிமிடங்களில் பரிமாற்றம் செய்து கண்டுபிடிக்க முடியாத வகையில் சாமர்த்தியமாக செயல்படுவதும் தெரிந்தது. இவ்வாறு பரிமாற்றம் செய்த வங்கி கணக்கு விபரம் ஒன்றை சைபர்கிரைம் போலீசார் கண்டறிந்தனர். அந்த வங்கி கணக்கில் இருந்த ரூ.1 லட்சம் தொகையை மோசடி நபர்கள் எடுக்க முடியாதபடி போலீசார் திரும்ப பெற்றனர். மேலும், அந்த வங்கி கணக்கு விவரங்களை தொடர்ந்து கண்காணித்தபோது சென்னையில் உள்ள நகைக்கடை ஒன்றில் சில நாட்களுக்கு முன்பு நகை வாங்கி ரூ.72 ஆயிரத்தை வங்கி கணக்கின் மூலம் வழங்கியதை கண்டறிந்தனர்.
இதனை தொடர்ந்து குற்றவாளிகளை அடையாளம் காணும் வகையில் சென்னை சென்ற சைபர்கிரைம் போலீசார் அந்த நகைக்கடைக்கு சென்று நகை வாங்கிய நபர்கள் குறித்த விபரங்களை சேகரித்ததோடு கண்காணிப்பு கேமரா காட்சியை பெற்றனர். அதில் இருந்த நபரும் லியாக்கத்அலியிடம் பணம் பெற்ற வங்கி கணக்கிற்கான நபரும் ஒன்றாக இருந்ததால் அவர்களின் இருப்பிட விபரங்களை நவீன தொழில்நுட்பத்தின் அடிப்படையில் ஆய்வு செய்தபோது சென்னை நீலாங்கரை பகுதி என தெரிந்தது.
2 பேர் கைது
இதனை தொடர்ந்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு தங்கதுரை உத்தரவின்பேரில் சைபர்கிரைம் போலீஸ் இன்ஸ்பெக்டர் வெற்றிவேல்ராஜன், சப்-இன்ஸ்பெக்டர் திபாகர் உள்ளிட்டோர் சென்னை சென்றனர். அங்கு நீலாங்கரை பகுதியில் சொகுசு பங்களாவை வாடகைக்கு பிடித்து உல்லாச வாழ்க்கை வாழ்ந்த 2 பேரை மடக்கி பிடித்தனர். அவர்களிடம் நடத்திய விசாரணையில் சென்னை வெட்டுவான்கேணி பாண்டியன் சாலை 2-வது தெரு பகுதியை சேர்ந்த முகம்மது நிலாம் (43), சென்னை பாலவாக்கம் காயிதேமில்லத்தெரு சர்புதீன் (52) என்பது தெரிந்தது. இதில் முகம்மது நிலாம் இலங்கை கொழும்பு பகுதியை சேர்ந்தவர் என்பதும் கடந்த 14 ஆண்டுகளுக்கு முன்னர் தமிழகம் வந்து விசா காலம் முடிவடைந்த நிலையில் உரிய ஆவணங்களின்றி தங்கி இருந்து வந்துள்ளார். இதுதொடர்பாக நாகர்கோவில் போலீசில் இவர் மீது வழக்குபதிவு செய்யப்பட்டுள்ளது.
இதன்பின்னர் அங்கிருந்து தப்பி சென்னை சென்று சர்புதீனுடன் பழக்கம் ஏற்பட்டு மோசடியில் ஈடுபட்டது தெரிய வந்தது. அவர்கள் 2 பேரையும் கைது செய்தனர்.