மதுரையை சேர்ந்த 2 பெண்கள் கைது
மதுரையை சேர்ந்த 2 பெண்கள் கைது செய்யப்பட்டனர்.
விருதுநகர் பழைய பஸ் நிலையத்தில் சங்கரலிங்காபுரத்தை சேர்ந்த சரோஜா (வயது 75) என்பவரை பஸ்சில் ஏற உதவி செய்வது போல் நடித்து 2 பெண்கள் அவரிடம் இருந்த 3 பவுன் தங்க சங்கிலியை திருடியதாக விருதுநகர் மேற்கு போலீசில் புகார் அளிக்கப்பட்டது.
இதனை தொடர்ந்து போலீஸ் சூப்பிரண்டு சீனிவாச பெருமாள் விருதுநகர் துணை சூப்பிரண்டு பவித்ரா தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது. அப்போது தனிப்படையினர் விருதுநகர் பழைய பஸ் நிலையத்தில் கண்காணிப்பு நடவடிக்கை மேற்கொண்டனர். அப்போது அங்கு பர்தா அணிந்து நின்று கொண்டிருந்த மதுரை வண்டியூரைச் சேர்ந்த ரேகா (37), அமலா (38) ஆகிய 2 பேரையும் அழைத்து விசாரணை நடத்தினா்.
அதில் அவர்கள் சரோஜாவிடம் நகை பறித்ததை ஒப்புக்கொண்டனர். இதையடுத்து அவர்கள் 2 பேரையும் போலீசார் கைது செய்தனர். இந்த நூதன திருட்டு வழக்கில் விரைந்து துப்புத்துலக்கி கைது செய்த விருதுநகர் துணை போலீஸ் சூப்பிரண்டு தலைமையிலான தனிப்படையினரை போலீஸ் சூப்பிரண்டு சீனிவாச பெருமாள் பாராட்டினார்.