தீயணைப்பு ஊழியர் வீட்டில் 20 பவுன் நகை திருட்டு


தீயணைப்பு ஊழியர் வீட்டில் 20 பவுன் நகை திருட்டு
x

ஒடுகத்தூர் அருகே தீயணைப்பு வீரர் வீட்டில் 20 பவுன் நகை திருட்டு போனது. இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

வேலூர்

20 பவுன் நகை திருட்டு

வேலூர் மாவட்டம் ஒடுகத்தூரை அடுத்த வெங்கனபாளையம் கிராமத்தை சேர்ந்தவர் ரகுபதி. தீயணைப்புத் துறையில் வேலை செய்து வந்த இவர் கடந்த மூன்று மாதத்திற்கு முன் இறந்துவிட்டார். இவரது மனைவி சரளா. தனியாக வசித்து வந்தார்.

இந்த நிலையில் கணவர் இறந்த துயரத்தில் வீட்டில் வைத்திருந்த 20 பவுன் நகையை கடந்த மூன்று மாதமாக கவனிக்கவில்லை. திருமணத்திற்கு செல்வதற்காக நேற்று வீட்டிலிருந்த பீரோவை திறந்து பார்த்துள்ளார். அப்போது பீரோல் வைத்திருந்த 20 பவுன் நகைகளை காணவில்லை.

போலீஸ் விசாரணை

இதனால் அதிர்ச்சியடைந்த அவர் இதுகுறித்து போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார். அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று வீட்டிலிருந்த பீரோவை சோதனை செய்தனர்.

அப்போது நகைகள் கட்டி வைத்திருந்த நகைப்பை அப்படியே இருந்ததாகவும், நகைகளை மட்டும் மர்ம நபர்கள் திருடி சென்றதாகவும் போலீசார் தெரிவித்துள்ளனர். மேலும் இதுகுறித்து சரளாவின் உறவினரிடம் போலீசார் விசாரணை நடத்தப் போவதாக தெரிவித்தனர்.


Next Story