சக்லேஷ்புரா அருகே கார்-லாரி மோதல்; 2 வாலிபர்கள் சாவு ஆஸ்பத்திரியை உறவினர்கள் சூறையாடியதால் பரபரப்பு


சக்லேஷ்புரா அருகே கார்-லாரி மோதல்; 2 வாலிபர்கள் சாவு ஆஸ்பத்திரியை உறவினர்கள் சூறையாடியதால் பரபரப்பு
x
தினத்தந்தி 2 Jan 2017 9:30 PM GMT (Updated: 2 Jan 2017 7:41 PM GMT)

சக்லேஷ்புரா அருகே கார்-லாரி மோதிக் கொண்ட விபத்தில் 2 வாலிபர்கள் பரிதாபமாக இறந்தனர். டாக்டர்கள் அலட்சியத்தால் தான் வாலிபர் இறந்தார்.

ஹாசன்,

சக்லேஷ்புரா அருகே கார்-லாரி மோதிக் கொண்ட விபத்தில் 2 வாலிபர்கள் பரிதாபமாக இறந்தனர். டாக்டர்கள் அலட்சியத்தால் தான் வாலிபர் இறந்தார் என்று அவரின் உறவினர்கள் ஆஸ்பத்திரியை சூறையாடியதால் பரபரப்பு ஏற்பட்டது.

கார்-லாரி மோதல்

ஹாசன் மாவட்டம் ஆலூர் தாலுகா கஞ்சிகெரே கிராமத்தை சேர்ந்தவர் வித்யா கிருஷ்ணா(வயது 24). இவர் நேற்று முன்தினம் தனது நண்பர்களான அதேப்பகுதியை சேர்ந்த வினோத்(21), குமார், நவீன் ஆகியோருடன் சேர்ந்து சக்லேஷ்புராவில் நடந்த உறவினர் வீட்டு நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக காரில் சென்றார். காரை வினோத் ஓட்டினார். அவர்கள் ஹாசன் டவுன் பகுதியில் சென்று கொண்டிருந்தபோது அந்த சாலையில் எதிரே வேகமாக வந்த லாரியும், காரும் எதிர்பாராதவிதமாக மோதிக் கொண்டன. இந்த விபத்தில் காரின் முன்பகுதி அப்பளம் போல நொறுங்கியது.

இந்த விபத்தை பார்த்து அதிர்ச்சி அடைந்த அந்தப் பகுதி மக்கள் விரைந்து வந்து காரில் இருந்தவர்களை மீட்கும் முயற்சியில் ஈடுபட்டனர்.

2 பேர் சாவு

ஆனால் காரின் இடிபாடுகளிடையே சிக்கி வித்யா கிருஷ்ணா சம்பவ இடத்திலேயே பரிதாபமாக பலியானார். வினோத் படுகாயம் அடைந்தார். மற்ற 2 பேரும் லேசான காயம் அடைந்தனர். காயம் அடைந்தவர்களை அந்தப்பகுதி மக்கள் மீட்டு சிகிச்சைக்காக ஹாசன் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

ஆனால் நேற்று முன்தினம் புத்தாண்டு என்பதால் ஆஸ்பத்திரியில் மருத்துவர்கள் யாரும் வந்து, படுகாயம் அடைந்த வினோத்துக்கு உரிய சிகிச்சை அளிக்கவில்லை என்று தெரிகிறது. இதனால் வினோத் ஆஸ்பத்திரியில் வைத்து பரிதாபமாக இறந்தார்.

ஆஸ்பத்திரி சூறை

இந்த சம்பவம் குறித்து அறிந்த வினோத்தின் உறவினர்கள் ஆஸ்பத்திரிக்கு விரைந்து வந்து அங்கு பணியில் இருந்த செவிலியர்களிடம் தகராறு செய்தனர். மேலும் அங்கிருந்த கண்ணாடிகளை அடித்து நொறுக்கி ஆஸ்பத்திரியை சூறையாடினர். மேலும் அவர்கள் ஆஸ்பத்திரி ஊழியர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

இந்த நிலையில் ஹாசன் அரசு ஆஸ்பத்திரியில் அத்துமீறி புகுந்து கண்ணாடிகளை அடித்து நொறுக்கி சூறையாடிய வினோத்தின் உறவினர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறி நேற்று டாக்டர்களும், ஊழியர்களும் திடீரென ஆஸ்பத்திரியின் முன்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த போராட்டம் குறித்து அறிந்த ஹாசன் டவுன் போலீசார், விரைந்து வந்து ஆஸ்பத்திரியை சூறையாடியவர்கள் மீது நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தனர். இதையடுத்து போராட்டத்தை கைவிட்டு டாக்டர்களும், ஊழியர்களும் பணிக்கு திரும்பினர். இந்த போராட்டத்தால் அந்தப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

வழக்குப்பதிவு

இந்த சம்பவம் குறித்து ஹாசன் டவுன் போலீசார் ஆஸ்பத்திரியை சூறையாடிய வினோத்தின் உறவினர்கள் சிலர் மீது வழக்குப்பதிவு செய்து உள்ளனர். 

Next Story