அணுமின் நிலைய ஊழியர் கொலை:கைதானவர்களிடம் இருந்து 100 பவுன் நகை பறிமுதல்


அணுமின் நிலைய ஊழியர் கொலை:கைதானவர்களிடம் இருந்து 100 பவுன் நகை பறிமுதல்
x
தினத்தந்தி 3 March 2017 9:00 PM GMT (Updated: 3 March 2017 7:34 PM GMT)

கல்பாக்கம் அணுமின் நிலைய ஊழியர் கொலை வழக்கில் கைதான 5 பேரிடம் இருந்து 100 பவுன் தங்க நகைகளை போலீசார் மீட்டனர்.

காஞ்சீபுரம்,

காஞ்சீபுரம் டி.கே.நம்பி தெருவில் வசித்தவர் எல்லப்பன் (வயது 46). கல்பாக்கம் அணு மின்நிலையத்தில் ஊழியராக வேலை பார்த்து வந்தார். சற்று மனநலம் பாதிக்கப்பட்ட எல்லப்பன் கடந்த 2013-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் காணாமல் போய் விட்டார்.

அதே ஆண்டு எல்லப்பனின் தாய் ராஜலட்சுமி இறந்தும் கூட அவர் வராததால் அவருடைய சித்தப்பா, எல்லப்பன் காணாமல் போனது குறித்து சின்ன காஞ்சீபுரம் போலீசில் புகார் கொடுத்தார்.

இதனிடையே எல்லப்பனின் 5 வீடுகள் உள்பட பல கோடி மதிப்புள்ள சொத்துகள் தேன்மொழி என்ற பெயரில் பத்திரப்பதிவு செய்து இருந்தது பற்றி அவரது மனைவி அங்கயற்கன்னி காஞ்சீபுரம் உதவி போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரீநாத்திடம் புகார் கொடுத்தார்.

5 பேர் கைது

இதுபற்றி விசாரித்து வந்த தனிப்படை போலீசார் எல்லப்பனின் வீட்டில் வாடகைக்கு இருந்து வந்த தேன்மொழியை(56) கைது செய்து விசாரித்தனர். அப்போது அவர் உள்பட 5 பேர் சேர்ந்து சொத்துக்காக, எல்லப்பனை கொலை செய்து, பாலாற்றில் புதைத்தது தெரியவந்தது.

இதனையடுத்து செல்லப்பன்(50), ஏழுமலை(55), கோபி(40) சேகர்(56) என மேலும் 4 பேரையும் கைது செய்தனர். பின்னர் எல்லப்பன் உடலை புதைத்ததாக கூறப்படும் குருவிமலை பாலாற்றில் வாலாஜாபாத் தாசில்தார் சீதாலட்சுமி முன்னிலையில் உடலை தோண்டும் பணி நேற்று முன்தினம் நடந்தது. அங்கு ஏதும் கிடைக்கவில்லை.

2-வது நாளாக....

இந்தநிலையில் கைது செய்யப்பட்டவர்களிடம் இருந்து 100 பவுன் தங்க நகைகள் போலீசார் பறிமுதல் செய்தனர். மேலும், இந்த வழக்கில் மேலும் 4 பேர் சம்பந்தப்பட்டு இருப்பதாகவும் அவர்களையும் தேடி வருவதாகவும் போலீசார் தெரிவித்தனர்.

காஞ்சீபுரத்தில் உள்ள எல்லப்பனின் 4 வீடுகளும் பிரபல ரவுடி ஒருவரின் கட்டுப்பாட்டில் உள்ளதாக போலீசார் விசாரணையில் தெரியவந்தது. இதுதொடர்பாக போலீசார் விசாரித்து வருகின்றனர்.

இதற்கிடையே நேற்று 2-வது நாளாக குருவிமலை பாலாற்றில் எல்லப்பனின் உடலை தோண்டும் பணி நடந்தது. ஆனல் உடல் ஏதும் கிடைக்கவில்லை.

Next Story