53 மீனவர்களையும், 123 படகுகளையும் விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் பிரதமருக்கு, எடப்பாடி பழனிசாமி கடிதம்


53 மீனவர்களையும், 123 படகுகளையும் விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் பிரதமருக்கு, எடப்பாடி பழனிசாமி கடிதம்
x
தினத்தந்தி 3 March 2017 9:45 PM GMT (Updated: 3 March 2017 7:40 PM GMT)

53 தமிழக மீனவர்கள், 123 படகுகளை விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பிரதமருக்கு, முதல்-அமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி கடிதம் எழுதியுள்ளார்.

சென்னை,

பிரதமர் நரேந்திர மோடிக்கு, முதல்-அமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி எழுதிய கடிதத்தில் கூறப்பட்டு இருப்பதாவது:-

கடந்த 2-ந்தேதி தான் 13 தமிழக மீனவர்களை இலங்கை கடற்படையினர் கைது செய்து கொண்டுசென்றனர். அந்த பிரச்சினை முடிவுக்கு வராத நிலையில் மற்றொரு நிகழ்வாக மேலும், 5 தமிழக மீனவர்களை இலங்கை கடற்படையினர் கைது செய்துள்ளனர்.

ராமநாதபுரம் மாவட்டம், பாம்பன் மீன்பிடி தளத்தில் இருந்து ஒரு எந்திரப்படகில் 5 மீனவர்கள் சென்று மீன்பிடித்தபோது 2-ந் தேதி நள்ளிரவில் அவர்களை இலங்கை கடற்படையினர் கைது செய்தனர். இலங்கையில் தலைமன்னாருக்கு அவர்கள் கொண்டுசெல்லப்பட்டனர். அந்த படகையும் கைப்பற்றியுள்ளனர்.

நிரந்தரத் தீர்வு

பாக் நீரிணைப் பகுதியில் மீன்பிடிக்கும் தமிழக மீனவர்கள், தொடர்ந்து இலங்கைக் கடற்படையினரால் கைது செய்யப்படுவது தமிழக மீனவர்களிடையே கொந்தளிப்பு, பீதி நிலையை உருவாக்கியுள்ளது.

பாக் நீரிணைப் பகுதியில் மீன்பிடிக்கும் மீனவர்களின் வாழ்வாதாரம், வாழும் உரிமை ஆகியவற்றில் இலங்கை அரசு தொடர்ந்து தலையிட்டு வருகிறது. கச்சத்தீவை மீட்பதாலும், ஆழ்கடல் மீன்பிடிப்புக்கு தேவையான ரூ.1,650 கோடியை ஒதுக்கினாலும் தான் இந்தப் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு காணமுடியும்.

53 மீனவர்கள்

கச்சத்தீவை கொடுத்தது தொடர்பாக இலங்கை அரசுடன் இந்திய அரசு மேற்கொண்ட ஒப்பந்தத்தை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதா வழக்கு தாக்கல் செய்திருந்தார். அதில் தமிழக அரசும் இணைந்துள்ளது.

ஏற்கனவே 35 மீனவர்கள் கைதாகி இலங்கை சிறைகளில் உள்ளனர். 120 படகுகளும் அவர்களின் பிடியில் உள்ளன. தற்போது மேலும் 18 மீனவர்கள் 3 படகுகளுடன் பிடிபட்டுள்ளனர். 53 மீனவர்கள் மற்றும் 123 மீன்பிடி படகுகளை மீட்க நீங்கள் உடனே தலையிட வேண்டும்.

ஆலய விழா

ஒரு வாரத்தில் கச்சத்தீவில் உள்ள அந்தோணியார் ஆலய விழா நடக்க உள்ளது. இந்த விழாவில் இந்தியா மற்றும் இலங்கை தரப்பில் இருந்து மக்கள் பங்கேற்பார்கள். இந்த சூழ்நிலையில் மீனவர்களையும், படகுகளையும் விடுவித்தால் 2 தரப்பினரும் மகிழ்ச்சியாக அந்த விழாவை கொண்டாட வழிபிறக்கும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Next Story