கோபாலபுரம் பஞ்சாப் நேஷனல் வங்கியில் கொள்ளை முயற்சி - ஆவணங்கள் எரிப்பு
சென்னை கோபாலபுரம் பஞ்சாப் நேஷனல் வங்கியில் கொள்ளை முயற்சி நடந்து உள்ளது. லாக்கர் பணம் ரூ.90 லட்சம் தப்பியது.
சென்னை,
கோபாலபுரம் அவ்வை சண்முகம் சாலையில் ஆரிய சமாஜம் கட்டிடத்தின் தரை தளத்தில் உள்ள பஞ்சாப் நேஷனல் வங்கியில் அதிகாலை 1.30 மணிக்கு வங்கியில் இருந்து நெருப்பு புகை வந்துள்ளது. இதை கட்டிடத்தின் மேல் தளத்தில் தங்கி இருந்தவர்கள் பார்த்து விட்டு போலீசுக்கு தகவல் கொடுத்தனர். உடனே போலீஸ் படை வங்கிக்கு சென்று பார்த்தது. அப்போது வங்கியின் வாசல் கதவு சங்கிலி பூட்டு உடைக்கப்பட்டு கதவு திறந்து கிடந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். உள்ளே சென்று பார்த்த போது அங்கிருந்த ஆவணங்கள் கிழிக்கப்பட்டு எரிக்கப்பட்ட நிலையில் கிடந்தது.
கொள்ளையர்கள் அதற்குள் தப்பிச் சென்று விட்டதால் வங்கி மானேஜர் நந்தினிக்கு போலீசார் தகவல் கொடுத்தனர். அவர் விரைந்து வந்து பார்த்தார். வங்கி லாக்கரில் இருந்த பணம் ரூ.90 லட்சம் பத்திர மாக இருந்ததால் நிம்மதி அடைந்தனர். கொள்ளையர்கள் வங்கி லாக்கரை உடைக்க முடியாததால் கோபத்தில் அங்கிருந்த ஆவணங்களை கிழித்து தீ வைத்து எரித்திருக்கலாம் என தெரிகிறது. இதனால் வங்கிக்கு கைரேகை நிபுணர்கள் வர வழைக்கப்பட்டு ரேகைகளை பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
இந்த வங்கிக்கு காவலாளி இல்லாததால் வங்கியின் சிசிடிவி கேமரா பதிவான காட்சிகளை வைத்து கொள்ளையர்களை அடையாளம் காணும் பணி நடைபெற்று வருகிறது. கொள்ளையர்களை பிடிக்க இதற்காக 3 தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது.
Next Story