தமிழக அரசு அறிவித்த ‘வாட்’ வரி உயர்வால் பெட்ரோல் - டீசல் விலை உயர்வு


தமிழக அரசு அறிவித்த ‘வாட்’ வரி உயர்வால் பெட்ரோல் - டீசல் விலை உயர்வு
x
தினத்தந்தி 5 March 2017 5:10 AM GMT (Updated: 5 March 2017 5:09 AM GMT)

தமிழக அரசு அறிவித்த ‘வாட்’ வரி உயர்வால் பெட்ரோல் - டீசல் விலை உயர்ந்து உள்ளது.

சென்னை,

தமிழக அரசின் வணிக வரித்துறை சார்பில் கூடுதல் தலைமைச் செயலாளர் சி.சந்திர மவுலி நேற்று இரவு ஒரு அறிவிக்கை வெளியிட்டார். 
அதில் பெட்ரோல் டீசலுக்கான வாட்வரி (மதிப்பு கூட்டுவரி) உயர்த்தப்படுவதாக அறிவிக்கப்பட்டு இருந்தது. அதன்படி பெட்ரோலுக்கு வாட் வரி 27 சதவீதத்தில் இருந்து 34 சதவீத மாகவும், டீசலுக்கு வாட் வரி 21.43 சதவீதத்தில் இருந்து 25 சதவீதமாகவும் உயர்த்தப்பட்டுள்ளது.  இதனால் நள்ளிரவு முதல் பெட்ரோல்-டீசல் விலை திடீர் என்று அதிகரித்தது.

சென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.3.78ம், டீசல் லிட்டருக்கு 1.76ம் விலை அதிகரித்துள்ளது.  

அதன்படி லிட்டர் ரூ.70.61 ஆக இருந்த பெட்ரோல் ரூ.74.39 ஆக உயர்ந்துள்ளது. டீசல் லிட்டர் ரூ.60.73-ல் இருந்து ரூ.62.49 ஆக உயர்ந்துள்ளது. 
இந்த திடீர் விலை உயர்வால் வாகன ஓட்டிகள் அதிர்ச்சி அடைந்தனர். வழக்கமாக மத்திய அரசின் எண்ணை நிறுவனங்கள்தான் பெட்ரோல்-டீசல் விலை உயர்வு அறிவிப்பு வெளியிடும். அதுபோன்ற அறிவிப்பு எதுவும் வரவில்லையே, நீங்களாக உயர்த்தி விட்டீர்களா? என்று பெட்ரோல் பங்க் ஊழியர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அதற்கு பெட்ரோல் பங்க் ஊழியர்கள், மத்திய அரசு உயர்த்தவில்லை. தமிழக அரசு பெட்ரோல் - டீசலுக்கான வாட் வரியை உயர்த்தி உள்ளது என்று தெரிவித்தனர்.

தற்போது பெட்ரோல் - டீசலுக்கு மட்டும் வாட் வரி உயர்த்தப்பட்டுள்ளது. அடுத்து மதுபானங்களின் மீதான வாட் வரியும் அதிகரிக்கும் வாய்ப்பு உள்ளது. 

Next Story