சென்னை நெற்குன்றத்தில் 10-ம் வகுப்பு மாணவி தற்கொலை வழக்கில் தனியார் பள்ளி தாளாளர் கைது


சென்னை நெற்குன்றத்தில் 10-ம் வகுப்பு மாணவி தற்கொலை வழக்கில் தனியார் பள்ளி தாளாளர் கைது
x
தினத்தந்தி 1 April 2017 2:45 AM IST (Updated: 1 April 2017 1:57 AM IST)
t-max-icont-min-icon

10-ம் வகுப்பு மாணவி தீக்குளித்து தற்கொலை செய்த வழக்கில் தனியார் பள்ளி தாளாளரை போலீசார் கைது செய்தனர்.

கோயம்பேடு, 

சென்னை நெற்குன்றம் பகுதியை சேர்ந்த 14 வயது உடைய, 10-ம் வகுப்பு மாணவி தனது வீட்டில் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார். தனது சொந்த அத்தையின் கணவரே குளிர்பானத்தில் மயக்க மருந்து கலந்து கொடுத்து தன்னை கற்பழித்து விட்டதால் அவர் தற்கொலை செய்து கொண்டது, அவர் எழுதிய கடிதத்தில் தெரிய வந்தது.

இதுதொடர்பாக கோயம்பேடு போலீசார் வழக்குப்பதிவு செய்து தலைமறைவான மாணவியின் சொந்த அத்தை சசிகலா மற்றும் அவருடைய கணவரும், தனியார் பள்ளி தாளாளருமான சரவணன் ஆகியோரை தேடி வந்தனர்.

பள்ளி தாளாளர் கைது

இந்த நிலையில் நேற்று காலை நெற்குன்றம் அழகம்மாள் நகரில் உள்ள சரவணன் நடத்தி வரும் தனியார் பள்ளியை முற்றுகையிட்ட பொது மக்கள், தாளாளர் சரவணனை கைது செய்ய வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

சம்பவ இடத்துக்கு வந்த துணை தாசில்தார் குமார் மற்றும் போலீசார் குற்றம் சாட்டப்பட்ட பள்ளி தாளாளர் சரவணனை கைது செய்து விட்டதாக தெரிவித்தனர். இதையடுத்து முற்றுகையை கைவிட்டு பொதுமக்கள் அனைவரும் கலைந்து சென்றனர்.

தலைமறைவாக உள்ள சசிகலாவை போலீசார் தேடி வருகின்றனர்.

Next Story