‘‘திராவிட கட்சிகளுக்கு மாற்று பா.ம.க. தான்’’; பா.ம.க. பொதுக்கூட்டத்தில், டாக்டர் ராமதாஸ் பேச்சு


‘‘திராவிட கட்சிகளுக்கு மாற்று பா.ம.க. தான்’’; பா.ம.க. பொதுக்கூட்டத்தில், டாக்டர் ராமதாஸ் பேச்சு
x
தினத்தந்தி 1 April 2017 4:45 PM GMT (Updated: 1 April 2017 2:35 PM GMT)

‘‘அன்புமணியின் சாதனைகளை மக்கள் பேச ஆரம்பித்து விட்டார்கள்’’ என்றும், ‘‘திராவிட கட்சிகளுக்கு மாற்று பா.ம.க. தான்’’, என்று பா.ம.க. பொதுக்கூட்டத்தில் டாக்டர் ராமதாஸ் பேசினார்.

சென்னை,

சென்னை வண்ணாரப்பேட்டையில் பா.ம.க. சார்பில் நிழல் நிதிநிலை விளக்க பொதுக்கூட்டம் நேற்று மாலை நடந்தது. பொதுக்கூட்டத்தில் பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ், தலைவர் ஜி.கே.மணி, இளைஞரணி தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் எம்.பி. ஆகியோர் பங்கேற்றனர். பா.ம.க. துணை பொதுச்செயலாளர் ஏ.கே.மூர்த்தி, மாநில செயலாளர் மு.ஜெயராமன் உள்பட மாநில–மாவட்ட நிர்வாகிகள், மகளிரணி நிர்வாகிகள், தொண்டர்கள் என ஏராளமானோர் கலந்துகொண்டனர்.

பொதுக்கூட்டத்தில் டாக்டர் அன்புமணி ராமதாஸ் எம்.பி. பேசியதாவது:–

சின்னங்களுக்கு ஓட்டு போடாதீர்கள்

50 ஆண்டு காலம் திராவிட கட்சிகளுக்கு வாய்ப்பு தந்தீர்கள். எங்களுக்கு வெறும் 5 ஆண்டுகள் கொடுங்கள். வெறும் 2 ஆண்டுகள் கொடுங்கள். என்னென்ன செய்து காட்டுகிறோம்? என்று பாருங்கள். எங்கள் எண்ணம் ஆட்சியை பிடிப்பது கிடையாது. தமிழகத்தை முன்னேற்றுவது தான் எங்கள் இலக்கு. ‘இரட்டை இலை’, ‘உதயசூரியன்’ எனும் சின்னத்தை பார்த்து ஓட்டு போடாதீர்கள். திட்டங்களை பார்த்து ஓட்டு போடுங்கள். நாங்கள் இலவசங்களை தர மாட்டோம். எங்களிடம் திட்டங்கள் மட்டும் தான் உண்டு. திராவிட கட்சிகளுக்கு மாற்று பா.ம.க. தான்.

இந்த இடைத்தேர்தல் முடிவுக்குள் அரசியல் கள குழப்பங்கள் முடிவுக்கு வரும். இடைத்தேர்தல் பின்பு பா.ம.க. எழுச்சி பெறும். எங்கள் ஆட்சியில் ஒவ்வொரு குடும்பத்துக்கும் 5 ஆண்டுகளில் ரூ.8.30 லட்சம் வருமானம் மிச்சப்படுத்தி கொடுக்க முடியும். இலவசங்கள் கொடுக்க மாட்டோம். பிள்ளைகளை படிக்க வைப்போம், படித்த பிள்ளைகளுக்கு வேலை கொடுப்போம்.  இவ்வாறு அவர் பேசினார்.

35 வருடங்களாக போராட்டம்

அதைத்தொடர்ந்து டாக்டர் ராமதாஸ் பேசியதாவது:–

35 வருடங்களாக மதுக்கடைகள் கூடாதென்று நான் போராடி வந்தேன். இப்போது டாக்டர் அன்புமணி அதனை தொடர்ந்து இருக்கிறார். இந்த வெற்றியை மாதம் முழுவதும் கொண்டாடுங்கள். இந்த வெற்றி தீர்ப்பு வரும் என்று நான் எதிர்பார்த்தேன்.

அன்புமணியின் புகழ், சாதனைகள் மக்களுக்கு தெரிய ஆரம்பித்து விட்டன. அதை பேச ஆரம்பித்து விட்டனர். எனவே தான் பா.ம.க. ஒரு சாதி கட்சி என்று கூறி வருகிறார்கள். ஆனால் மக்கள் ஏமாறுவதற்கு தயாராக இல்லை. ஜல்லிக்கட்டு போராட்டம் ஒரு எடுத்துக்காட்டு. படித்த இளைஞர்களும், சிந்திக்கும் மக்களும் அன்புமணிக்கு ஆதரவாக இருக்கிறார்கள். உண்மையிலேயே திராவிட கட்சிகளுக்கு மாற்று பா.ம.க. தான்.

தமிழக மக்கள் உரிமைக்காக பல போராட்டங்களை பா.ம.க. நடத்தியிருக்கிறது. அன்புமணி ராமதாஸ் பங்கேற்ற சர்வதேச கூட்டங்கள், மாநாடுகள், சுகாதாரத்துறை கருத்தரங்குகளில், நலத்திட்டங்கள் தான் அவர் முன்வைத்தார். அவரது திட்டங்களை பார்த்து அனைவரும் பிரமித்தனர். மக்கள் பிரச்சினைகளையே முன்னிறுத்தி பா.ம.க. செயல்பட்டு வருகிறது. இனியாவது மக்கள் விழித்து கொள்ளுங்கள்.  இவ்வாறு அவர் பேசினார்.


Next Story