4-வது நாளாக போராட்டம் நீடிப்பு: லாரிகள் வேலைநிறுத்தம் வாபஸ் ஆகுமா? சென்னையில் இன்று பேச்சுவார்த்தை


4-வது நாளாக போராட்டம் நீடிப்பு:  லாரிகள் வேலைநிறுத்தம் வாபஸ் ஆகுமா? சென்னையில் இன்று பேச்சுவார்த்தை
x
தினத்தந்தி 3 April 2017 5:45 AM IST (Updated: 3 April 2017 1:10 AM IST)
t-max-icont-min-icon

லாரி உரிமையாளர்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டு உள்ளனர்.

சென்னை,

வாகனங்களுக்கான இன்சூரன்ஸ் தொகை அதிகரிப்பு, வட்டார போக்குவரத்து அலுவலகங்களில் கட்டண உயர்வு, பெட்ரோல், டீசல் மீதான மதிப்புக்கூட்டு வரி உயர்வு ஆகியவற்றை திரும்பப்பெற வேண்டும், பழைய வாகனங்களுக்கு வேக கட்டுப்பாட்டு கருவி பொருத்துவதில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழகம் உள்பட 6 தென் மாநிலங்களில் லாரி உரிமையாளர்கள் கடந்த 30–ந் தேதி முதல் வேலைநிறுத்த போராட்டம் நடத்தி வருகிறார்கள்.  இந்த போராட்டம் நேற்று 4–வது நாளாக நீடித்தது.
சரக்குகள் தேக்கம்

இந்த போராட்டம் காரணமாக லாரிகள் ஓடாததால் தமிழகத்தில் இருந்து வட மாநிலங்களுக்கும், வடமாநிலங்களில் இருந்து தமிழகத்திற்கும் சரக்கு போக்குவரத்து தடைபட்டு உள்ளது. இதனால் ஆங்காங்கே கோடிக்கணக்கான ரூபாய் மதிப்புள்ள சரக்குகள் தேங்கி உள்ளன. வர்த்தகமும் கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளது.

பால், தண்ணீர், மருந்து பொருட்களை ஏற்றி வரும் லாரிகளுக்கு மட்டும் விலக்கு அளிக்கப்பட்டு உள்ளதால் அந்த லாரிகள் மட்டும் வழக்கம் போல் இயங்கி வருகின்றன.

சமையல் கியாஸ் டேங்கர் லாரிகள்

ஆந்திரா, கர்நாடகம் மற்றும் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து காய்கறிகளை ஏற்றி வரும் லாரிகள் வழக்கம் போல் சென்னை கோயம்பேடு மார்க்கெட்டுக்கு வந்து செல்கின்றன. வெளிநாடுகளில் இருந்து கப்பல்களில் வரும் பழவகைகள், துறைமுகத்தில் இருந்து லாரிகள் மூலம் மார்க்கெட்டுக்கு கொண்டு செல்லப்படுகின்றன.

தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து வேன் மற்றும் சிறிய வகை லாரிகளில் காய்கறிகள் சென்னைக்கு கொண்டு வரப்படுகின்றன. வடமாநிலங்களில் இருந்து சென்னைக்கு சரக்கு ஏற்றி வந்த லாரிகள் திரும்பி வடமாநிலங்களுக்கு செல்ல முடியாத நிலை ஏற்பட்டு உள்ளது. சமையல் கியாஸ் லாரி உரிமையாளர்களும் இன்று முதல் போராட்டத்தில் ஈடுபடப்போவதாக அறிவித்து உள்ளனர்.

இந்த வேலைநிறுத்தம் குறித்து தமிழ்நாடு மாநில லாரி உரிமையாளர்கள் சம்மேளன தலைவர் குமாரசாமி கூறியதாவது:–

ரூ.800 கோடி இழப்பு

வேலைநிறுத்தம் காரணமாக மருந்து, பால் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் ஏற்றிச்செல்லும் லாரிகள் தவிர சுமார் 4 லட்சம் லாரிகள் தமிழகத்தில் மட்டும் நிறுத்தப்பட்டு உள்ளன. இதனால் லாரி தொழிலை நம்பி உள்ள டிரைவர், கிளீனர்கள் சுமார் 15 லட்சம் பேர் வேலை இழந்து தவித்து வருகின்றனர். இதுதவிர லாரி உரிமையாளர்களுக்கு நாள் ஒன்றுக்கு ரூ.200 கோடி வீதம், 4 நாட்களில் ரூ.800 கோடி இழப்பு ஏற்பட்டு உள்ளது.

மேலும் தமிழகத்தில் நாள் ஒன்றுக்கு ரூ.1,500 கோடி வீதம் சுமார் ரூ.6 ஆயிரம் கோடி வரை வர்த்தகம் பாதிக்கப்பட்டு உள்ளது.

ஆதரவு

எங்கள் போராட்டத்திற்கு தென்மண்டல பல்க் எல்.பி.ஜி. டேங்கர் லாரி உரிமையாளர்கள் சங்கம் ஆதரவு அளித்து உள்ளது. மேலும் போராட்டத்தை தீவிரப்படுத்த பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறோம்.

அகில இந்திய மோட்டார் போக்குவரத்து காங்கிரசின் தலைவர் மிட்டல், சமீபத்தில் வெளியிட்ட அறிக்கை ஒன்றில் தென்மாநில அளவில் லாரிகள் வேலைநிறுத்தம் நடைபெற்று வருவதால், அங்கு லாரிகளை அனுப்ப வேண்டாம் என தெரிவித்து உள்ளார். ஆனால் சிலர் அகில இந்திய மோட்டார் போக்குவரத்து காங்கிரஸ் ஆதரவு இல்லை என உண்மைக்கு புறம்பான தகவலை பரப்பி வருகின்றனர். இதனை லாரி உரிமையாளர்கள் நம்ப வேண்டாம்.

வாபஸ் ஆகுமா?

சென்னை தலைமைச் செயலகத்தில் தமிழக போக்குவரத்து துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தலைமையில் கடந்த 30–ந் தேதி லாரி உரிமையாளர்கள் நடத்திய பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்தது.

தற்போது மீண்டும் பேச்சுவார்த்தை நடத்த அழைப்பு விடுக்கப்பட்டு உள்ளது. அதன்படி 3–ந் தேதி (இன்று) பிற்பகல் 2 மணிக்கு சென்னை தலைமைச் செயலகத்தில் போக்குவரத்துத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தலைமையில் பேச்சுவார்த்தை நடத்தப்படுகிறது. இந்த பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டால், லாரிகள் வேலைநிறுத்த போராட்டம் வாபஸ் பெறப்படும்.  இவ்வாறு அவர் கூறினார்.

தட்டுப்பாடு ஏற்படும் ஆபத்து

லாரி உரிமையாளர்களின் வேலைநிறுத்த போராட்டம் காரணமாக காய்கறி உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டு உள்ளது. இதனால் அவற்றின் விலை உயரும் ஆபத்து இருந்து வருகிறது. இதற்கிடையே, நாமக்கல்லை தலைமையிடமாக கொண்டு செயல்படும் தென்மண்டல பல்க் எல்.பி.ஜி. டேங்கர் லாரி உரிமையாளர்கள் சங்கமும் வேலைநிறுத்த போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து இருப்பதால், சமையல் கியாஸ் தட்டுப்பாடு ஏற்படும் ஆபத்தும் உள்ளது.

வாகனங்களுக்கான இன்சூரன்ஸ் தொகை அதிகரிப்பு பிரச்சினை தொடர்பாக, தென்மாநில லாரி உரிமையாளர்கள் மற்றும் மத்திய அரசு அதிகாரிகளுக்கு இடையே ஐதராபாத்தில் இன்று பேச்சுவார்த்தை நடக்கிறது. இந்த பேச்சுவார்த்தையில் சுமுக முடிவு ஏற்பட்டாலும் போராட்டம் வாபஸ் பெறப்பட வாய்ப்பு உள்ளதாக லாரி உரிமையாளர்கள் சம்மேளன நிர்வாகிகள் தெரிவித்தனர்.


Next Story