ஆர்.கே.நகர் தொகுதி இடைத்தேர்தலையொட்டி கூடுதல் கமிஷனர் உள்பட 19 போலீஸ் அதிகாரிகள் மாற்றம்
சென்னை ஆர்.கே.நகர் தொகுதியில் நடக்கும் இடைத்தேர்தலையொட்டி கூடுதல் கமிஷனர் முதல் இன்ஸ்பெக்டர்கள் வரை 19 அதிகாரிகள், தேர்தல் ஆணையத்தின் அதிரடி உத்தரவின்பேரில் மாறுதல் பட்டியலில் இடம்பெற்றுள்ளனர்.
சென்னை,
சென்னை ஆர்.கே.நகரில் நடக்கும் இடைத்தேர்தலையொட்டி இதுவரையில்லாத அளவுக்கு போலீஸ் துறையில் அதிகாரிகள் மாற்றப்படுகிறார்கள். எதிர்க்கட்சிகளின் புகார்களையொட்டி தேர்தல் கமிஷன் இந்த அதிரடி நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.கடந்த வாரம் போலீஸ் கமிஷனர் ஜார்ஜ் மாற்றப்பட்டார். புதிய கமிஷனராக கரன் சின்கா நியமிக்கப்பட்டுள்ளார். அதையடுத்து தண்டையார்பேட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் பாலகிருஷ்ண பிரபு, புதுவண்ணாரப்பேட்டை இன்ஸ்பெக்டர் ரமேஷ்பாபு மற்றும் 2 தேர்தல் அதிகாரிகள் மாற்றப்பட்டனர்.
இந்தநிலையில் ஆர்.கே.நகர் தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் பொறுப்பு வகிக்கும் போலீஸ் அதிகாரிகள் கூடுதல் கமிஷனர் முதல் இன்ஸ்பெக்டர்கள் வரையுள்ள அதிகாரிகளை மாற்ற வேண்டும் என்று தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
மாற்றப்படும் அதிகாரிகள்தேர்தல் ஆணையத்தின் உத்தரவுப்படி மாற்றப்படும் அதிகாரிகளின் பட்டியலில் 19 பேர் இடம்பெறுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அந்த அதிகாரிகள் விவரம் வருமாறு:–
1.சாரங்கன் (வடசென்னை கூடுதல் கமிஷனர்) 2.ஜோஷி நிர்மல்குமார் (சென்னை வடக்கு இணை கமிஷனர்) 3.ஜெயக்குமார் (வண்ணாரப்பேட்டை துணை கமிஷனர்), 4.செல்வகுமார் (புளியந்தோப்பு துணை கமிஷனர்), 5.ஆனந்தகுமார் (வண்ணாரப்பேட்டை உதவி கமிஷனர்), 6.ஸ்டீபன் (ராயபுரம் உதவி கமிஷனர்), 7.குமார் (திருவொற்றியூர் உதவி கமிஷனர்), 8.ஜெயசிங் (எம்.கே.பி.நகர் உதவி கமிஷனர்).
11 இன்ஸ்பெக்டர்கள்இவர்களைத் தவிர 11 இன்ஸ்பெக்டர்களும் (சட்டம்–ஒழுங்கு, குற்றப்பிரிவு) இடம் மாற்றப் பட்டியலில் இருக்கிறார்கள்.
வீரக்குமார், ராஜா (ஆர்.கே.நகர்), அமுல்ஸ்டாலின் ஆனந்த், லூர்துமேரி (கொருக்குப்பேட்டை), ஆபிரகாம் குருஸ், முனுசாமி (காசிமேடு), சரவணபிரபு, சாம்சன் சேவியர் (மீன்பிடி துறைமுகம்), சுந்தர் (புதுவண்ணாரப்பேட்டை குற்றப்பிரிவு), ரத்தினவேல் பாண்டி, முத்துராஜா (கொடுங்கையூர்) ஆகிய இன்ஸ்பெக்டர்கள் மாற்றப்படுகிறார்கள்.
இதுதொடர்பான அறிவிப்பு இன்னும் ஓரிரு நாளில் வெளியாகலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
விடுமுறையில் செல்கிறார்கள்மாற்றப்பட்ட போலீஸ் கமிஷனர் ஜார்ஜ் தற்போது விடுமுறையில் சென்றுவிட்டார். அவரைப்போல தற்போது மாறுதல் பட்டியலில் இடம்பெற்றுள்ள பெரும்பாலான அதிகாரிகள் விடுமுறையில் செல்ல விருப்பமாக உள்ளனர். கோடை விடுமுறையை சந்தோஷமாக கொண்டாடப்போவதாக அவர்கள் தெரிவித்தனர். ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் முடிந்தபிறகு மாற்றப்படும் அதிகாரிகள் அனைவரும் மீண்டும் அதே பொறுப்புக்கு வருவார்கள் என்ற பேச்சு போலீஸ் வட்டாரத்தில் அடிபடுகிறது.