ஐகோர்ட்டு தலைமை நீதிபதியாக இந்திரா பானர்ஜி நாளை பதவி ஏற்பு


ஐகோர்ட்டு தலைமை நீதிபதியாக இந்திரா பானர்ஜி நாளை பதவி ஏற்பு
x
தினத்தந்தி 3 April 2017 9:14 PM GMT (Updated: 3 April 2017 9:14 PM GMT)

சென்னை ஐகோர்ட்டின் தலைமை நீதிபதியாக இருந்த சஞ்சய்கி‌ஷன் கவுல், சுப்ரீம் கோர்ட்டு நீதிபதியாக கடந்த பிப்ரவரி மாதம் பதவி ஏற்றார்.

சென்னை,

ஐகோர்ட்டு மூத்த நீதிபதி ஹூலுவாடி ஜி.ரமேஷ், பொறுப்பு தலைமை நீதிபதியாக பணியாற்றி வந்தார்.

இந்த நிலையில், டெல்லி ஐகோர்ட்டு மூத்த நீதிபதி இந்திரா பானர்ஜி, சென்னை ஐகோர்ட்டின் புதிய தலைமை நீதிபதியாக நியமிக்கப்பட்டார். இதற்கான உத்தரவை ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி பிறப்பித்துள்ளார்.

சென்னை ஐகோர்ட்டின் முதல் பெண் தலைமை நீதிபதியாக காந்தகுமாரி பட்நாகர், 1992–ம் ஆண்டு பதவி வகித்தார். இதன்பின்னர் ஐகோர்ட்டில் 2–வது பெண் தலைமை நீதிபதியாக இந்திரா பானர்ஜி நியமிக்கப்பட்டுள்ளார்.

இவர் 1957–ம் ஆண்டு செப்டம்பர் 24–ந் தேதி கொல்கத்தாவில் பிறந்தார். 1985–ம் ஆண்டு வக்கீலாக பதிவு செய்து கொண்ட இந்திரா பானர்ஜி, 2002–ம் ஆண்டு கொல்கத்தா ஐகோர்ட்டு நீதிபதியாக பதவி ஏற்றார். கடந்த ஆண்டு டெல்லி ஐகோர்ட்டு மூத்த நீதிபதியாக பதவி ஏற்ற இவர், சென்னை ஐகோர்ட்டின் தலைமை நீதிபதியாக தற்போது நியமிக்கப்பட்டுள்ளார்.

இவர் நாளை (புதன்கிழமை) காலை 9.30 மணிக்கு பதவி ஏற்கிறார். இவருக்கு தமிழக கவர்னர் வித்யாசாகர் ராவ் பதவி பிரமாணம் செய்து வைக்கிறார். இந்த நிகழ்ச்சியில் தமிழக முதல்–அமைச்சர், ஐகோர்ட்டு நீதிபதிகள், தலைமை செயலாளர் உள்ளிட்டோர் கலந்து கொள்ள உள்ளனர்.


Next Story