இணையதளத்தில் ஆபாச காட்சிகளை தடுக்க புதிய சட்டம் கொண்டு வர வேண்டும் மத்திய-மாநில அரசுகளுக்கு, ஐகோர்ட்டு உத்தரவு


இணையதளத்தில் ஆபாச காட்சிகளை தடுக்க புதிய சட்டம் கொண்டு வர வேண்டும் மத்திய-மாநில அரசுகளுக்கு, ஐகோர்ட்டு உத்தரவு
x
தினத்தந்தி 31 May 2017 10:45 PM GMT (Updated: 31 May 2017 7:19 PM GMT)

இணையதளத்தில் ஆபாச காட்சிகள் வெளியிடப்படுவதை தடுக்க புதிய சட்டம் கொண்டு வர வேண்டும் என்று மத்திய-மாநில அரசுகளுக்கு சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.

சென்னை,

நாகப்பட்டினம் மாவட்டம் மயிலாடுதுறையில் மாயமான 17 வயது மாணவியை கண்டுபிடித்து ஆஜர்படுத்தக்கோரி அவரது தாயார் சென்னை ஐகோர்ட்டில் ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்திருந்தார்.

இந்த மனுவை நீதிபதிகள் எஸ்.நாகமுத்து, அனிதா சுமந்த் ஆகியோர் விசாரித்தனர். விசாரணையின் போது, அந்த மாணவியை நாகப்பட்டினம் போலீசார் கோர்ட்டில் ஆஜர்படுத்தினர்.

அப்போது அந்த மாணவி, திரைப்படங்களைப் பார்த்து அதில் ஏற்பட்ட காதல் மோகத்தால் காதலனுடன் வீட்டை விட்டு வெளியேறி திருமணம் செய்து கொண்டதாகவும், தற்போது கர்ப்பமாக இருப்பதாகவும் நீதிபதிகளிடம் தெரிவித்தார்.

மனுவை விசாரித்த நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவில் கூறி இருப்பதாவது:-

சினிமா மோகத்தால் சீரழிவு

எஸ்.எஸ்.எல்.சி. தேர்வில் 441 மதிப்பெண்கள் எடுத்து டாக்டராக வேண்டும் என்ற லட்சியத்தோடு பள்ளிப்படிப்பை படித்து வந்த இந்த மாணவியின் வாழ்க்கை சினிமா மோகத்தால் சீரழிந்து போய் விட்டது. இந்த மைனர் மாணவியின் வாழ்க்கையை சீரழித்த காதலன், தற்போது சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

இந்த மாணவி சினிமாவால் பாலியல் ரீதியிலான துன்புறுத்தலுக்கு ஆளாகி நிர்கதியாகி உள்ளார். இந்த மாணவி போன்ற இளைய தலைமுறையினரின் மனதில் திரைப்படங்கள் தவறான கண்ணோட்டத்தை விதைப்பதை திரைப்பட தணிக்கை வாரியம் எப்படி கண்டுகொள்ளாமல் இருக்கிறது என்பது வேதனைக்குரியதாக உள்ளது.

புதிய சட்டம் கொண்டுவர வேண்டும்

தமிழ் திரைப்படங்கள் பள்ளி செல்லும் இளைய தலைமுறையினரின் மனதில் கடுமையான தாக்கத்தை ஏற்படுத்துகின்றன. திரைப்படங்கள் பொதுவெளியில் மக்கள் மத்தியில் காணப்படும் பிளக்ஸ் பேனர்கள், போஸ்டர்கள் உள்ளிட்ட பிற ஊடக விளம்பரங்களை முறைப்படுத்த அரசு உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

இந்த விஷயத்தில் திரைப்பட தணிக்கை வாரியம் தனக்குரிய முழு அதிகாரத்தோடு செயல்படாதது வேதனை அளிக்கிறது. எனவே, தற்போதுள்ள நவீன தகவல் தொழில்நுட்ப வளர்ச்சிக்கேற்ப தணிக்கை வாரிய சட்டங்களும் கடுமையாக இருக்கும் வகையில் மத்திய, மாநில அரசுகள் சட்ட திருத்தங்களை மேற்கொள்ள வேண்டும்.

மேலும், தணிக்கை செய்யப்படாத காட்சிகள் திரையிடப்படுவதை தடுக்க அதிகாரி ஒருவரை நியமிக்க வேண்டும். இணையதளங்களில் ஆபாச காட்சிகள் வெளியிடப்படுவதை தடுக்க மத்திய, மாநில அரசுகள் புதிய சட்டத்தை கொண்டு வரவேண்டும்.

இவ்வாறு உத்தரவில் கூறப்பட்டுள்ளது. 

Next Story