கார் தீப்பிடித்து எரிந்ததில் 3 பேர் பலி: சென்னை ஆடிட்டர் குடும்பத்துடன் தற்கொலை போலீஸ் விசாரணையில் தகவல்


கார் தீப்பிடித்து எரிந்ததில் 3 பேர் பலி: சென்னை ஆடிட்டர் குடும்பத்துடன் தற்கொலை போலீஸ் விசாரணையில் தகவல்
x
தினத்தந்தி 31 May 2017 9:30 PM GMT (Updated: 31 May 2017 7:28 PM GMT)

கார் தீப்பிடித்து சென்னை ஆடிட்டர், மனைவி, மகள் இறந்த சம்பவத்தில், அவர்கள் தற்கொலை செய்துகொண்டது போலீஸ் விசாரணையில் தெரியவந்தது.

மாமல்லபுரம்,

காஞ்சீபுரம் மாவட்டம் மாமல்லபுரத்தை அடுத்த கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள மணமையில் தனியார் வீட்டுமனை வளாக மைதானத்தில் கடந்த 27-ந் தேதி இரவு 9 மணி அளவில் நிறுத்தப்பட்டிருந்த கார் மர்மமான முறையில் தீப்பிடித்து எரிந்தது. அதில் இருந்த சென்னை குரோம்பேட்டையில் வசித்துவந்த தனியார் நிறுவன ஆடிட்டர் ஜெயதேவன் (வயது 55). அவரது மனைவி ரமாதேவி (55), அவர்களது மகள் திவ்யஸ்ரீ (26) ஆகியோர் உடல் கருகி இறந்தனர்.

காரில் இருந்த ஏ.சி. எந்திரம் பழுதாகி தீப்பிடித்து 3 பேரும் இறந்தனரா? அல்லது ரியல் எஸ்டேட் தகராறில் யாராவது 3 பேரையும் காருக்குள் அடைத்து தீவைத்து கொலை செய்தார்களா? என்பது மர்மமாக இருந்தது.

இதுகுறித்து மாமல்லபுரம் போலீசார் தீவிர விசாரணை நடத்திவந்தார்கள்.

கணவருடன் தகராறு

இதுகுறித்து மாமல்லபுரம் போலீசார் கூறியதாவது:-

ஜெயதேவன் கேரள மாநிலம் பாலக்காட்டை சேர்ந்தவர். அவரது மகள் திவ்யஸ்ரீ ராணுவ கேப்டன் சரத் என்பவரை திருமணம் செய்து பஞ்சாப் மாநிலம் பதன்கோட் ராணுவதள குடியிருப்பில் வசித்துவந்தார். கணவன், மனைவி இடையே கருத்துவேறுபாடு ஏற்பட்டு அடிக்கடி தகராறு நடந்துள்ளது. திவ்யஸ்ரீயை கண்டிக்குமாறு சரத் தனது மாமனார் மற்றும் மாமியாரிடம் கூறியுள்ளார்.

இந்தநிலையில் ஜெயதேவன் பஞ்சாப் சென்று கடந்த மாதம் 22-ந்தேதி மகளை சென்னைக்கு அழைத்துவந்தார். தாம்பரம் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் கணவர் சரத் குடும்பத்தினர் மீது திவ்யஸ்ரீயும், மாமனார் குடும்பத்தினர் மீது சரத்தும் புகார் செய்துள்ளனர். போலீஸ் நிலையம் வரை குடும்ப பிரச்சினை சென்றதால் ஜெயதேவன் மனமுடைந்து காணப்பட்டதாக கூறப்படுகிறது.

உத்தண்டியை கடந்த காட்சி

ஜெயதேவன் குடும்பத்தினரை தாம்பரம் மகளிர் போலீசார் விசாரணைக்காக அழைத்திருந்தனர். இந்த நிலையில் தான் 27-ந்தேதி இரவு தனியார் வீட்டுமனை வளாகத்தில் காருக்குள் கருகிய நிலையில் 3 பேரும் இறந்துகிடந்தனர்.

சென்னையில் இருந்து புறப்பட்ட ஜெயதேவன் கிழக்கு கடற்கரை சாலை வழியாக உத்தண்டி சோதனை சாவடி வழியாக மாமல்லபுரம் வந்து பின்னர் மணமை வந்துள்ளார். அவர்கள் உத்தண்டியை கடந்து சென்ற காட்சி அங்குள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவாகி உள்ளது. காரில் தானாக தீப்பற்றவில்லை என்பது தெரிகிறது.

தீவைத்து தற்கொலை

ஆள்நடமாட்டம் இல்லாத பகுதியான மணமை பகுதியை தேர்வுசெய்து அங்கு அவர் காரை நிறுத்திவிட்டு, காருக்குள் பெட்ரோல் ஊற்றி தீவைத்து தற்கொலை செய்துகொண்டுள்ளனர். கார் எரியும்போது சிலர் கார் கண்ணாடியை உடைத்து காப்பாற்ற முயற்சித்தபோது காப்பாற்றுங்கள் என்று ஒரு குரல் கூட உள்ளே இருந்து வரவில்லை.

அதில் இருந்தே அவர்கள் தற்கொலை செய்துகொள்ளும் எண்ணத்திலேயே திட்டமிட்டு அங்கு வந்துள்ளனர் என்பது போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.

இவ்வாறு போலீசார் கூறினர்.

Next Story