சுவாதி கொலை வழக்கு சினிமா படத்திற்கு தடை விதிக்க வேண்டும் டி.ஜி.பி. அலுவலகத்தில் தந்தை மனு


சுவாதி கொலை வழக்கு சினிமா படத்திற்கு தடை விதிக்க வேண்டும் டி.ஜி.பி. அலுவலகத்தில் தந்தை மனு
x
தினத்தந்தி 31 May 2017 10:15 PM GMT (Updated: 31 May 2017 7:36 PM GMT)

சுவாதி கொலை வழக்கு சினிமா படத்திற்கு தடை விதிக்க வலியுறுத்தி, சென்னை டி.ஜி.பி. அலுவலகத்தில் சுவாதியின் தந்தை மனு கொடுத்தார்.

சென்னை,

கடந்த 2016-ம் ஆண்டு இதே ஜூன் மாதம் தமிழகத்தை உலுக்கிய படுகொலை சம்பவம், சென்னை நுங்கம்பாக்கம் ரெயில் நிலையத்தில் நடந்தது. சுவாதி என்ற பெண் என்ஜினீயர் அரிவாளால் வெட்டி படுகொலை செய்யப்பட்டார். இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட ராம்குமார், சென்னை புழல் மத்திய சிறையில் மின்சாரத்தை உடலில் பாய்ச்சி தற்கொலை செய்து கொண்டார்.

அத்துடன் இந்த வழக்கும் முடிவுக்கு வந்து விட்டது. ஆனால் சுவாதி கொலை வழக்கு என்ற தலைப்பில் சினிமா படமாக இந்த வழக்கு உருவாகி வருவதாக அறிவிப்பு வெளியாகி உள்ளது. ஜெய சுபஸ்ரீ புரொடக்‌ஷன்ஸ் என்ற பட நிறுவனம், இந்த படத்தை தயாரித்து வருகிறது. இந்த படத்தின் முன்னோடி காட்சிகள் (டிரெய்லர்) பரபரப்பாக வெளியிடப்பட்டுள்ளது.

தடை கோரி தந்தை மனு

இந்த நிலையில், இந்த படத்தை வெளியிட அனுமதிக்க கூடாது என்றும், தடை விதிக்க வேண்டும் என்றும் கோரிக்கை வைத்து, கொலை செய்யப்பட்ட பெண் என்ஜினீயர் சுவாதியின் தந்தை சந்தான கோபாலகிருஷ்ணன் நேற்று சென்னை டி.ஜி.பி. அலுவலகத்தில் மனு கொடுத்தார்.

மனு கொடுத்து விட்டு, பத்திரிகையாளர்கள் யாரையும் சந்திக்காமல் அவர் சென்று விட்டார். இந்த படம் வெளிவந்தால், எனக்கும், எனது குடும்பத்திற்கும் பெரும் மன உளைச்சலை ஏற்படுத்தும் என்றும், எனது முன் அனுமதி இல்லாமல் இந்த படம் தயாரிக்கப்படுவதாகவும் மனுவில், சந்தான கோபாலகிருஷ்ணன் குறிப்பிட்டுள்ளார்.

போலீசாரும் எதிர்ப்பு

சுவாதி கொலை வழக்கு படத்தின் முன்னோடி காட்சிகளில் உண்மைக்கு மாறான சம்பவங்கள் வெளியிடப்பட்டுள்ளதாகவும், எனவே இந்த படத்தை வெளியிட போலீஸ் தரப்பிலும் எதிர்ப்பு தெரிவிக்கப்படும் என்றும் தகவல்கள் வெளியாகி உள்ளது.

சுவாதி கொலை வழக்கு குற்றவாளி ராம்குமாரை போலீசார் கைது செய்தபோது, அவர் தன்னைத்தானே பிளேடால் கழுத்தை அறுத்து தற்கொலைக்கு முயன்றதாக போலீசார் தெரிவித்தனர்.

ஆனால் போலீசார்தான் ராம்குமாரின் கழுத்தை அறுத்ததாக புகார் சொல்லப்பட்டது. இந்த சர்ச்சைக்குரிய சம்பவம், இந்த சினிமா படத்தில், போலீசார் ராம்குமாரின் கழுத்தை அறுப்பது போன்ற காட்சியாக சித்தரிக்கப்பட்டுள்ளது. இதற்கு போலீஸ் தரப்பில் இப்போதே எதிர்ப்பு கிளம்பி உள்ளது.

Next Story