சென்னை மாதவரம் பால்பண்ணையில் புதையலில் கிடைத்த சாமி சிலைகளை விற்க முயற்சி


சென்னை மாதவரம் பால்பண்ணையில் புதையலில் கிடைத்த சாமி சிலைகளை விற்க முயற்சி
x
தினத்தந்தி 14 Jun 2017 9:30 PM GMT (Updated: 14 Jun 2017 8:08 PM GMT)

புதையலில் கிடைத்த சாமி சிலைகளை அரசிடம் ஒப்படைக்காமல் விற்க முயற்சி நடப்பதாக சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் மனு கொடுக்கப்பட்டுள்ளது.

சென்னை,

சென்னை மாதவரம் பால்பண்ணை பெரிய சேக்காடு பகுதியில் வசிப்பவர் மதிவாணன். இவர் நேற்று சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் மனு ஒன்றை கொடுத்தார்.

அந்த புகார் மனுவில் கூறியிருப்பதாவது:-

எங்கள் பகுதியில் உள்ள ஒரு வீட்டு காம்பவுண்டில் கடந்த 2012-ம் ஆண்டு பள்ளம்தோண்டியபோது, புதையல் கிடைத்தது. புதையலில் காளி சிலை, சரஸ்வதி சிலை, முருகன் சிலை ஆகிய 3 சாமி சிலைகள் கிடைத்தன. 3 சிலைகளும் ஐம்பொன்னால் செய்யப்பட்டது. விலைமதிக்க முடியாத பழங்கால சிலைகளாகும். மேலும், 3 குடங்களில் விலை மதிப்புள்ள பொருட்கள் கிடைத்ததாகவும் அந்த பகுதியில் பரபரப்பாக பேசப்பட்டது.

புதையலில் கிடைக்கும் பொருட்களை சட்டப்படி அரசிடம் தான் ஒப்படைக்க வேண்டும். ஆனால் புதையலில் கிடைத்த பொருட்களை 4 பேர் சேர்ந்து பங்குபோட்டுக்கொண்டதாக தற்போது தெரியவந்துள்ளது. வெளி உலகத்திற்கு புதையலில் கிடைத்த சிலைகளை மாதவரம் பால்பண்ணை போலீஸ் உதவியோடு தாசில்தாரிடம் ஒப்படைத்துவிட்டதாக கூறினார்கள்.

ஆனால், உண்மையிலையே புதையலில் எடுக்கப்பட்ட சிலைகள் உள்ளிட்ட பொருட்களை தாசில்தாரிடம் ஒப்படைக்கவில்லை. புதையலில் எடுத்த சிலைகளுக்கு பதிலாக சாதாரண சிலைகளை விலைக்கு வாங்கி தாசில்தாரிடம் ஒப்படைத்து ஏமாற்றியதாக தெரியவந்துள்ளது.

விற்க முயற்சி

தற்போது புதையலில் கிடைத்த ஐம்பொன் சிலைகளை விற்பனை செய்ய முயற்சித்து வருவதாக தகவல் வெளியாகி உள்ளது. இதுபற்றி மாதவரம் பால்பண்ணை போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தோம். ஆனால் முறையாக நடவடிக்கை எடுக்கப்படவில்லை. இதுதொடர்பாக முறையாக விசாரணை நடத்தி புதையலில் கிடைத்த சாமி சிலைகள் உள்ளிட்ட பொருட்களை மீட்டு அரசிடம் ஒப்படைக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு புகார் மனுவில் கூறப்பட்டுள்ளது.

இந்த புகார் மனு மீது உடனடியாக விசாரணை நடத்த மாதவரம் துணை போலீஸ் கமிஷனருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

Next Story