பி.எஸ்.எல்.வி. சி-38 ராக்கெட் 28-ந் தேதி விண்ணில் செலுத்தப்படுகிறது இஸ்ரோ விஞ்ஞானிகள் தகவல்


பி.எஸ்.எல்.வி. சி-38 ராக்கெட் 28-ந் தேதி விண்ணில் செலுத்தப்படுகிறது இஸ்ரோ விஞ்ஞானிகள் தகவல்
x
தினத்தந்தி 14 Jun 2017 11:00 PM GMT (Updated: 14 Jun 2017 8:28 PM GMT)

பி.எஸ்.எல்.வி. சி-38 ராக்கெட் வருகிற 28-ந் தேதி விண்ணில் செலுத்த இஸ்ரோ திட்டமிட்டு இருப்பதாக விஞ்ஞானிகள் கூறினர்.

சென்னை,

பூமியை கண்காணிக்கும் கார்ட்டோசாட்-2இ மற்றும் 36 நானோ வகை செயற்கைகோள்களுடன் பி.எஸ்.எல்.வி. சி-38 ராக்கெட் வருகிற 28-ந் தேதி விண்ணில் செலுத்த இஸ்ரோ திட்டமிட்டு இருப்பதாக விஞ்ஞானிகள் கூறினர்.

இஸ்ரோ

இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (இஸ்ரோ) செயற்கைகோள்களையும், அவற்றை விண்ணில் ஏவுவதற்காக பி.எஸ்.எல்.வி. மற்றும் ஜி.எஸ்.எல்.வி. ஆகிய இருவகை ராக்கெட்டுகளையும் தயாரித்து வருகிறது.

பூமியை கண்காணித்தல், தொலை உணர்வு தகவல்களை பெறுதல், கடல்சார் ஆராய்ச்சி, தகவல் தொடர்பு மற்றும் வானிலை பயன்பாடு உள்ளிட்ட பல்வேறு பணிகளுக்காக செயற்கைகோள்களை இஸ்ரோ வடிவமைத்து வெற்றிகரமாக விண்வெளிக்கு செலுத்தி வருகிறது.

1,235 கிலோ

அந்தவகையில் பூமி கண்காணிப்பு மற்றும் தொலை உணர்வுக்காக கடந்த 2005-ம் ஆண்டு முதல் கடந்த பிப்ரவரி மாதம் வரை 6 கார்ட்டோசாட் வகை செயற்கைகோள்கள் விண்ணில் செலுத்தப்பட்டுள்ளன.

இதைத்தொடர்ந்து தற்போது 1,235 கிலோ எடை கொண்ட 7-வது கார்ட்டோசாட்-2இ என்ற செயற்கைகோள் வடிவமைக்கப்பட்டு உள்ளது. இந்த செயற்கைகோள் பி.எஸ்.எல்.வி. சி-38 ராக்கெட் மூலம் விண்ணில் செலுத்தப்பட உள்ளது. பி.எஸ்.எல்.வி. ராக்கெட் ஏவும் வரிசையில் இது 40-வது ராக்கெட் ஆகும்.

விண்ணில் செலுத்த திட்டம்

பி.எஸ்.எல்.வி. சி-38 ராக்கெட் மூலம் கார்ட்டோசாட்-2இ செயற்கைகோள் வருகிற 28-ந் தேதி (புதன்கிழமை) சென்னையை அடுத்துள்ள ஸ்ரீஹரிகோட்டா சதீஷ்தவான் விண்வெளி ஆய்வு மையத்தின் முதலாவது ஏவுதளத்தில் இருந்து விண்ணில் செலுத்த இஸ்ரோ திட்டமிட்டு உள்ளது. இந்த செயற்கைகோள் பூமியில் இருந்து 500 கிலோ மீட்டர் உயரத்தில் சுற்றுப்பாதையில் நிலை நிறுத்தப்படுகிறது.

அதில் இயற்கை வளங்களை பல்வேறு கோணங்களில் துல்லியமாக படம் எடுக்க உதவும் 3 கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளது. இதன் ஆயுட்காலம் 5 ஆண்டுகள் ஆகும். இந்த ராக்கெட் ஏவப்படும் நேரம் இறுதி செய்யும் பணிகளில் இஸ்ரோ ஈடுபட்டு வருகிறது.

வெளிநாட்டு செயற்கைகோள்கள்

இஸ்ரோ பி.எஸ்.எல்.வி. ரக ராக்கெட்டுகளை வெற்றிகரமாக விண்ணில் செலுத்தி வருவதால் இந்திய செயற்கைகோள்களுடன், வெளிநாடுகளை சேர்ந்தவர்களும் தங்கள் செயற்கைகோள்களை விண்ணில் செலுத்த முன்வருகின்றனர்.

இதனால், கார்ட்டோசாட்-2இ செயற்கைகோளுடன் வெளிநாடுகளை சேர்ந்த 36 நானோ வகை செயற்கைகோள்களும் இந்த ராக்கெட்டில் அனுப்பப்பட்டு விண்ணில் நிலை நிறுத்தப்படுகிறது. இந்த திட்டத்தை ரூ.160 கோடியில் இஸ்ரோ நிறைவேற்ற திட்டமிட்டுள்ளது.

மேற்கண்ட தகவலை இஸ்ரோ விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். 

Next Story