தடுப்பணை கட்டுவதை நிறுத்துங்கள் சந்திரபாபு நாயுடுவுக்கு, எடப்பாடி பழனிசாமி கடிதம்


தடுப்பணை கட்டுவதை நிறுத்துங்கள் சந்திரபாபு நாயுடுவுக்கு, எடப்பாடி பழனிசாமி கடிதம்
x
தினத்தந்தி 16 Jun 2017 10:15 PM GMT (Updated: 16 Jun 2017 7:36 PM GMT)

கொசஸ்தலை துணை ஆற்றின் குறுக்கே தடுப்பணை கட்டுவதை நிறுத்துங்கள் என்று சந்திரபாபு நாயுடுவுக்கு, தமிழக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கடிதம் எழுதியுள்ளார்.

சென்னை,

முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, ஆந்திர முதல்-மந்திரி சந்திரபாபு நாயுடுவுக்கு எழுதியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது:-

கொசஸ்தலை

தமிழகம் மற்றும் ஆந்திராவுக்கு இடையே கொசஸ்தலை ஆற்றின் துணை நதியான கொசா ஆற்றின் குறுக்கே சித்தூர் மாவட்டம், நிலவயல், கர்வெட் நகர் மண்டல் கிராமத்தில் தடுப்பணை கட்டும் பணியை ஆந்திர அரசின் நீர்பாசனத்துறை மேற்கொண்டிருப்பது குறித்த முக்கிய பிரச்சினையை தங்கள் கவனத்திற்கு கொண்டு வருகிறேன். அதற்காக இந்த கடிதத்தை தங்களுக்கு எழுதுகிறேன்.

கொசஸ்தலை ஆறானது இரு மாநிலங்களுக்கு இடையே ஓடுவதாகும். இதில் ஆந்திர அரசின் நடவடிக்கை தமிழக விவசாயிகளின் வாழ்வாதாரம் பாதிக்கும் நிலையை எற்படுத்தி உள்ளது. ஆந்திர அரசு தமிழக அரசுடன் கலந்து பேசாமல் தன்னிச்சையான முறையில் தடுப்பணை பணிகளை மேற்கொண்டிருப்பது தமிழ்நாட்டில் உள்ள விவசாயிகளின் மத்தியில் பெருத்த பதட்டத்தையும், வேதனையையும் ஏற்படுத்தி உள்ளது.

இந்த ஆற்றின் மூலம் தமிழகத்தில் உள்ள வெளியகரம் கண்மாயின் கீழ் உள்ள சுமார் 354.32 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன. இந்த ஆற்றில் தடுப்பணை கட்டுவதன் மூலம் கண்மாய்க்கு வரும் நீர்வரத்து பெரிதும் பாதிக்கப்படும். மாநிலங்களுக்கு இடையே பாயும் நதிகளில் இது போன்ற தடுப்பணைகள் கட்டும் போது சம்பந்தப்பட்ட மாநிலங்களுடன் ஆலோசனை நடத்தி அனுமதி பெறவேண்டும்.

தடுத்து நிறுத்துங்கள்

தடுப்பணை கட்டுவதால் தமிழக விவசாயிகள் மிகுந்த துயரத்திற்கு ஆளாகுவார்கள். பாதிப்புக்கு உள்ளாகுவார்கள். ஆந்திர அரசின் இந்த நடவடிக்கைக்கு தமிழக அரசு சார்பில் ஆட்சேபனை தெரிவிக்கிறோம். கொசஸ்தலை ஆற்றின் குறுக்கே புதிய பணிகளை தொடங்கும் முன் அதுபற்றி தமிழக அரசுடன் எந்த ஆலோசனையும் அனுமதியும் ஆந்திரா பெறவில்லை. எனவே சித்தூர் மாவட்டத்தில் நிலவயல், கர்வெட் நகர் மண்டல் ஆகிய இடங்களில் தடுப்பணைகள் கட்டும் பணிகளில் ஆந்திர அரசு ஈடுபட்டு இருப்பதை தமிழக அரசு கடுமையாக எதிர்க்கிறது.

இந்த பிரச்சினையில் தாங்கள் உடனடியாக தலையிட்டு கொசஸ்தலை ஆற்றின் குறுக்கே நீரை தடுக்கும் வகையிலோ அல்லது திருப்பி விடும் வகையிலோ தடுப்பணைகள் கட்டும் நடவடிக்கைகளை தடுத்து நிறுத்த சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு உத்தரவிட வேண்டும். இதில் தங்களின் சாதகமான நடவடிக்கைகள் உடனடியாக மேற்கொள்ளப்படும் என்று எதிர்பார்க்கிறேன். மேலும் தமிழக அரசின் ஒப்புதல் பெறாமல் கொசஸ்தலை ஆற்றின் துணை ஆறுகளில் வேறு எந்த தடுப்பணையும் கட்டக்கூடாது. இந்த விஷயத்தில் ஆக்கப்பூர்வமான நடவடிக்கையை எடுப்பீர்கள் என்று நம்புகிறேன்.

இவ்வாறு அந்த கடிதத்தில் அவர் கூறியுள்ளார். 

Next Story