நிகர்நிலை பல்கலைக்கழகங்களில் எம்.பி.பி.எஸ். படிப்புக்கான கல்வி கட்டணத்தை வரைமுறைப்படுத்த கோரி வழக்கு


நிகர்நிலை பல்கலைக்கழகங்களில் எம்.பி.பி.எஸ். படிப்புக்கான கல்வி கட்டணத்தை வரைமுறைப்படுத்த கோரி வழக்கு
x
தினத்தந்தி 5 July 2017 10:15 PM GMT (Updated: 5 July 2017 6:06 PM GMT)

நிகர்நிலை பல்கலைக்கழகங்களில் எம்.பி.பி.எஸ். படிப்புக்கான கல்வி கட்டணத்தை வரைமுறைப்படுத்தக்கோரி தொடர்ந்த வழக்கில் தமிழக அரசு பதில் அளிக்க சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.

சென்னை,

சென்னையை சேர்ந்தவர் ஜவகர்லால் சண்முகம். இவர், சென்னை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில் கூறி இருந்ததாவது:–

தமிழகத்தில் உள்ள நிகர்நிலை பல்கலைக்கழக மருத்துவக்கல்லூரிகளில் எம்.பி.பி.எஸ். படிப்புக்காக அரசு கட்டணம் எதுவும் நிர்ணயிக்கவில்லை. இதனால் நிகர்நிலை பல்கலைக்கழகங்கள் எம்.பி.பி.எஸ். படிப்புக்கு ஆண்டுக்கு பல லட்சம் ரூபாயை மாணவர்களிடம் கட்டணமாக வசூலிக்கிறது.

நீட் தேர்வில் மிக குறைவான மதிப்பெண் பெற்ற மாணவர்களிடம் இருந்து இதுபோன்று கூடுதல் கட்டணம் பெற்றுக்கொண்டு நிகர்நிலை பல்கலைக்கழகம் அவர்களை எம்.பி.பி.எஸ். படிப்பில் சேர்த்துக்கொள்கிறது.

நிகர்நிலை பல்கலைக்கழகங்களில் எம்.பி.பி.எஸ். படிப்புக்கான கட்டணத்தை அரசு நிர்ணயிக்காததால் நீட் தேர்வில் அதிக மதிப்பெண் பெற்ற கிராமப்புற மாணவர்கள் நிகர்நிலை பல்கலைக்கழகங்களில் சேர முடியாத நிலை உள்ளது.

எனவே, நிகர்நிலை பல்கலைக்கழகங்களில் எம்.பி.பி.எஸ். படிப்புக்கான கல்வி கட்டணத்தை வரைமுறைப்படுத்த உத்தரவிட வேண்டும், மேலும், நிகர்நிலை பல்கலைக்கழக மருத்துவக்கல்லூரிகளில் மருத்துவ படிப்புக்கான கட்டணத்தை நிர்ணயிக்க குழு அமைக்க உரிய உத்தரவு பிறப்பிக்க வேண்டும்.  இவ்வாறு மனுவில் கூறப்பட்டிருந்தது.  இந்த மனு தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி, நீதிபதி சுந்தர் ஆகியோர் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது.

மனுவை விசாரித்த நீதிபதிகள், மருத்துவ படிப்புகளை நடத்தி வரும் நிகர்நிலை பல்கலைக்கழகங்களை இந்த வழக்கில் எதிர்மனுதாரர்களாக சேர்க்க உத்தரவிட்டனர். மேலும், இந்த வழக்கு சம்பந்தமாக இந்திய மருத்துவ கவுன்சில், தமிழக அரசு, பல்கலைக்கழக மானிய குழு ஆகியோர் 17–ந் தேதிக்குள் பதிலளிக்க நீதிபதிகள் உத்தரவு பிறப்பித்தனர்.


Next Story