தமிழகத்தில் இயற்கை எரிவாயு மூலம் 750 மெகாவாட் மின் உற்பத்தி ஓ.என்.ஜி.சி. அதிகாரி பேட்டி


தமிழகத்தில் இயற்கை எரிவாயு மூலம் 750 மெகாவாட் மின் உற்பத்தி ஓ.என்.ஜி.சி. அதிகாரி பேட்டி
x
தினத்தந்தி 16 July 2017 12:00 AM GMT (Updated: 15 July 2017 8:22 PM GMT)

தமிழகத்தில் இருந்து எடுக்கப்படும் இயற்கை எரிவாயு, தமிழகத்தில் உள்ள மின்சார நிலையங்களில் 750 மெகாவாட் மின்சார உற்பத்திக்கு பயன்படுகிறது.

சென்னை,

தமிழகத்தில் இருந்து எடுக்கப்படும் இயற்கை எரிவாயு, தமிழகத்தில் உள்ள மின்சார நிலையங்களில் 750 மெகாவாட் மின்சார உற்பத்திக்கு பயன்படுகிறது என்று எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு (ஓ.என்.ஜி.சி.) நிறுவன தலைமை பொதுமேலாளர் டி.ராஜேந்திரன் கூறினார்.

தஞ்சை மாவட்டம் கதிராமங்கலம்- கொடியாலம் பகுதியில் ஓ.என்.ஜி.சி. நிறுவனத்துக்கு சொந்தமான எண்ணெய் கிணறுகளில் இருந்து இயற்கை எரிவாயு எடுத்து செல்லும் குழாயில் கசிவு ஏற்பட்டதை தொடர்ந்து பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். கசிவை சரி செய்யும் பணியில் நிறுவனத்தினர் ஈடுபட்டனர். இந்தப்பணி முழுமையாக நிறைவடைந்து உற்பத்தி தொடங்கப்பட்டு உள்ளது.

இதுகுறித்து ஓ.என்.ஜி.சி. நிறுவன தலைமை பொதுமேலாளர்(காவிரி படுகை) டி.ராஜேந்திரன், தினத்தந்தி நிருபரிடம் கூறியதாவது:-

கதிராமங்கலத்தில் உள்ள எண்ணெய் குழாயில் இருந்து கடந்த மாதம் 30-ந்தேதி ஹைட்ரோ கார்பன் கசிவு ஏற்பட்டது. இதன் காரணமாக 15 சென்ட் விவசாய நிலம் பாதிக்கப்பட்டது. இதற்கான நஷ்டஈடு வழங்குவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. அதேநேரம் கசிவு ஏற்பட்டுள்ள குழாய்கள் சரி செய்யப்பட்டு தற்போது உற்பத்தி தொடங்கப்பட்டு உள்ளது.

சர்வதேச தரத்தில் அமைக்கப்பட்டுள்ள குழாய்கள் 15 முதல் 20 ஆண்டுகள் உழைக்க கூடியவை. இந்த குழாயில் 2008-ம் ஆண்டுக்கு பிறகு இதுவரை கசிவு ஏற்படவில்லை. இது தான் முதல் முறையாக நடந்துள்ளது.

வரும் காலங்களில் இதுபோன்ற கசிவு ஏற்படாமல் தடுப்பதற்காக கண்காணிப்பு குழு அமைக்கப்பட்டு உள்ளது. எண்ணெய் கசிவு குறித்து மும்பையில் உள்ள ஆய்வு கூடம் விரைவில் ஆய்வு அறிக்கையை அளிக்க உள்ளது. அதற்கு பிறகு நடத்தப்படும் பல்வேறு ஆராய்ச்சிகளுக்கு பிறகு வரும் காலங்களில் இதுபோன்ற கசிவு ஏற்படாமல் இருப்பது முற்றிலுமாக தடுக்கப்படும்.

ஓ.என்.ஜி.சி. நிறுவனம் இருக்கும் பகுதிகளில் நிலத்தடி நீர்மட்டம் குறைவதுடன், நிலத்தடி நீரும் பாதிக்கப்படுகிறது என்று கூறப்பட்டு வருகிறது.

எங்கள் பணியின் போது ஒரு குறிப்பிட்ட அளவு மட்டுமே தண்ணீர் பயன்படுத்தப்படுகிறது. அதுவும் சுழற்சி முறையில் அதே தண்ணீர் தான் பயன்படுத்தப்பட்டு வருவதால் நிலத்தடி நீர் மட்டம் குறைய வாய்ப்பு இல்லை. அதேபோல் நிலத்தடி நீர் மாசுபடவும் வாய்ப்பு இல்லை. காரணம் சுமார் 2 ஆயிரம் அடிக்கு கீழ் தான் எண்ணெய், எரிவாயு எடுக்கும் பணிகள் நடப்பதால், நிலத்தடி நீர் மாசுபடுவதற்கான வாய்ப்பே இல்லை. இதுகுறித்து தமிழக அரசும் முறையாக சான்றிதழ் அளித்துள்ளது.

மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகமும், மாநில சுற்றுச்சூழல் துறையும் அனுமதி அளித்தால் மட்டுமே எங்களால் எந்தப்பணியும் செய்ய முடியும். அனுமதி கிடைக்காத நிலையில் எந்த பணியும் செய்ய முடியாது.

அதேபோல் மீத்தேன் எடுக்கும் பணிக்கு தமிழக அரசு அனுமதி தரவில்லை. இதனால் எந்த ஆய்வும் நாங்கள் மேற்கொள்ளவில்லை. அதேபோல் ஷேல் கியாஸ் எடுப்பதாகவும் கூறப்பட்டது. இதற்கு மத்திய அமைச்சகம் அனுமதி அளிக்கப்படவில்லை.

தமிழகத்தில் ராமநாதபுரம், அரியலூர், திருவாரூர், கடலூர், நாகப்பட்டினம், தஞ்சை ஆகிய 6 மாவட்டங்களில் உள்ள 33 எண்ணெய் கிணறுகள் அமைத்து எண்ணெய் மற்றும் எரிவாயு எடுத்து வருகிறோம். தமிழகத்தில் இருந்து தினசரி 34 லட்சம் கன அடி இயற்கை எரிவாயுவும், 900 டன் எண்ணெயும் எடுக்கப்படுகிறது. இவை தமிழக பயன்பாட்டுக்கு அளிக்கப்படுகிறது.

குறிப்பாக தமிழ்நாடு மின்சார வாரியத்துக்கு 70 முதல் 80 சதவீதம் இயற்கை எரிவாயு அளிக்கப்படுகிறது. இதன் மூலம் 750 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகிறது. ஒரு குறிப்பிட்ட சதவீதம் தனியார் மின்உற்பத்தி நிலையங்கள் மற்றும் இதர பணிகளுக்கு பயன்படுத்தப்படுகிறது.

எண்ணெய் மற்றும் எரிவாயு கண்டறியும் பணிகள் நடக்கும் பகுதிகளில் உள்ள விளைநிலங்களை குத்தகைக்கு எடுக்கும் போது ஆண்டுக்கு 1 ஏக்கருக்கு ரூ.63 ஆயிரம் வரை குத்தகை தொகை வழங்கப்படுகிறது. அப்பகுதியில் எண்ணெய் மற்றும் எரிவாயு கிடைக்கவில்லை என்றால் விளைநிலத்தை சீர் செய்து முதலில் இருந்த மாதிரி சரிசெய்து விவசாய பயன்பாட்டுக்கே தந்து விடுகிறோம்.

பொதுமக்கள், விவசாயம், நீர் நிலைகள் உள்ளிட்ட பல்வேறு நலன் கருதி விதிகளுக்கு உட்பட்டு பணி செய்து வருகிறோம். கடந்த 7 ஆண்டுகளில் காப்புரிமைக்காக தமிழக அரசுக்கு ரூ.2 ஆயிரத்து 278 கோடியை அளித்து உள்ளோம்.

இதுதவிர எண்ணெய் மற்றும் எரிவாயு கிணறுகள் இருக்கும் பகுதியில் ஒருங்கிணைந்த வளர்ச்சிக்காக கடந்த 7 ஆண்டுகளில் ரூ.25 கோடி செலவிட்டு உள்ளோம். இதன் மூலம் பள்ளிகளுக்கு குடிநீர் வசதி, வீடுகளுக்கு கழிப்பறை வசதி, மனநலம் குன்றியவர்கள் விடுதிக்கு வாகன வசதி உள்ளிட்ட பல்வேறு வசதிகளை செய்து தந்துள்ளோம். தொடர்ந்து செய்து வருகிறோம். நெடுவாசல் தனியார் கட்டுப்பாட்டில் இருப்பதால் அதுபற்றிய தகவல்களை கூற இயலாது.

இவ்வாறு அவர் கூறினார்.

Next Story